
நாட்டின் பாரம்பரிய-மூத்த சமய அமைப்பான மலேசிய இந்து சங்கத்தின் பொறுப்பாளர்களை ‘இடைத்தரகர்கள்’ என்று கீழான முறையில் விமர்சனம் செய்துள்ள துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரா.ரமணன் உடனே பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மலேசிய இந்து சங்கத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் வலியுறுத்தி உள்ளார்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் ஐந்தாம் நாள் சுங்கை போலோ நாடாளுமன்ற தொகுதி மட்டத்தில் ஏழைகா குடும்பங்களுக்கான உணவுப் பண்டங்களை வழங்கிய நிகழ்ச்சியில், ஆயிரம் ஆலயங்களுக்கு ஒவ்வோர் ஆலயத்திற்கும் 20,000 வெள்ளி உதவி நிதியாக வழங்கப்படும் என்று தொழில் முனைவோர் மேம்பாடு- கூட்டுறவு வளர்ச்சித் துறை துணை அமைச்சர் ரமணன் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அது குறித்து செய்தியாளர்கள் மேல் விவரம் கேட்டபொழுது..,

“அந்தத் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அறிவித்தபடி ஆயிரம் ஆலயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா 20 ஆயிரம் வெள்ளி வழங்கப்படும் என்றும் இதன் தொடர்பில் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ள நிலையில் அதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் அந்த நிதி உடனே பகிர்ந்து அளிக்கப்படும்; இதன் தொடர்பில் கூடிய விரைவில் ஓர் இணையப் பக்கம் உருவாக்கப்படும் என்றும் அதில் சம்பந்தப்பட்ட ஆலயத் தலைவரும் ஏனைய பொறுப்பாளர்களும் விண்ணப்பம் செய்தால் அந்த தொகை நேரடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள் வெறும் 20,000 வெள்ளியைக் கொண்டு ஆலயங்களில் எந்த மேம்பாட்டு திட்டத்தையோ அல்லது உருமாற்ற பணியையோ மேற்கொள்ள முடியாது; எந்த மறுமலர்ச்சியும் ஏற்படாது என்று மலேசிய இந்து சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்தை சுட்டிக்காட்டிய நிலையில், சற்று காட்டமாக பதில் அளித்த ரமணன், இதற்குமுன் இதுபோல மித்ரா நிதி அளிக்கப்பட்ட நிலையில், இங்கே கொஞ்சம் கொடுத்துவிட்டு அங்கே கொஞ்சம் கொடுத்துவிட்டு கடைசியில் ஊழல் தடுப்பு ஆணைய விசாரணைக்கு உட்பட்டவர்களை இனியும் நம்ப முடியாது; எனவே இடைத்தரகர்கள் தேவையில்லை என்பதில் மட ஆக ணி அரசாங்கம் மிகமிக உறுதியாக இருக்கிறது என்று அவருடைய நிலையில் உறுதியாக இருந்த ரமணன் மறுமலர்ச்சி பற்றி ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை.
இதன் தொடர்பில் அடுத்த நாளே மலேசிய இந்து சங்க தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதன் தலைவர் கணேசன், ரமணனின் கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

ஊழல் தடுப்பு ஆணைய விசாரணை தொடர்பில் மலேசிய இந்து சங்க தேசிய பொறுப்பாளர்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை; அதை சுட்டிக்காட்டி தங்களுக்கு இழுக்கு ஏற்படுத்தி உள்ள ரமணன், மலேசிய இந்து சங்க பொறுப்பாளர்களை மீண்டும் மீண்டும் இடைத்தரகர்கள் என்று விமர்சித்திருப்பது அவர் வகிக்கின்ற துணை அமைச்சர் பதவிக்கு உகந்தது அல்ல; எனவே அந்த வார்த்தையை அவர் திரும்ப பெற வேண்டும் என்று செய்தியாளர்களிடம் கணேசன் தெரிவித்தார்.
மலேசிய இந்து சங்கத்தின் சார்பில் ‘தர்மா மடாணி’ என்னும் திட்டம் வரையப்பட்டு அதன்வழி பொருத்தமான 200 ஆலயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றுக்கு ஓர் ஆலயத்திற்கு ஒரு லட்சம் வெள்ளிவீதம் நிதி வழங்கி அவற்றை வழிபாட்டுத்தலம் என்ற நிலையுடன் சமூக மையமாகவும் உருமாற்றும் திட்டம் தொடர்பில் ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் சரசுவதி கந்தசாமி உடன் ஆலோசனை நடத்தி அவரின் ஒத்துழைப்புடன் ஒற்றுமைத்துறை அமைச்சகத்தின் ஏற்பாட்டில் அமைச்சரவையின் கவனத்திற்கு மலேசிய இந்து சங்கத்தின் முன்னெடுப்பு கொண்டு செல்லப்பட்டு அதற்கான ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று காத்திருக்கின்றது என்று தெரிவித்த கணேசன் துணை அமைச்சர் சரஸ்வதி அனுப்பிய கடித நகலையும் செய்தியாளர்களுக்கு வழங்கினார்.
தவிர, இதன் தொடர்பில் மலேசிய இந்து சங்கம் வெ.6 மில்லியன் நிதிக் கோரிக்கை வைத்து அதன் தொடர்பிலும் காத்திருக்கின்ற நிலையில் இடையில் ரமணன் தன்போக்கில் அறிவிப்பு செய்துள்ளார் என்று கணேசன் மேலும் வருத்தம் தெரிவித்தார்.
மலேசிய இந்து சங்கத்தின் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், பொதுச் செயலாளர் கண மூர்த்தி ஹரி கிருஷ்ணன், துணைச் செயலாளர் அழகேந்திரன் ஆகியோரும் உடன் இருந்த இந்தச் செய்தியாளர் சந்திப்பில், பொருளாளர் இரா. பெருமாள், ரமணன் அறிவித்துள்ள வெ.20,000 உதவி நிதி குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
“இந்த 20,000 வெள்ளியைக் கொண்டு மண்டபம் எல்லாம் கட்டலாம் என்று துணை அமைச்சர் சொல்லி இருக்கிறார்; அப்படியெல்லாம் இந்த நிதியை கொண்டு அவ்வளவு பெரிய கட்டிடம் கட்டுவதற்கு வாய்ப்பில்லை. ஒரு சிறிய அளவிலான பணியைக் கூட மேற்கொள்ள முடியாது;”

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் நாள் மலேசிய இந்து சங்கம் நடத்திய ஆலய ஒருங்கிணைப்பு மாநாட்டில் பரிந்துரைக்கப்பட்ட எட்டு தீர்மானங்களை ஐந்து திருமணங்களாக ஒருங்கிணைத்து அவற்றின் அடிப்படையில் ஓர் ஆலயம் முழு கட்டமைப்புடன் வழிபாட்டுத் தளம்- சமூக மையம் என்ற அடிப்படையில் உருமாற்றப்படுவதற்கு குறைந்தது ஒரு லட்சம் வெள்ளி தேவைப்படும் என்ற திட்டத்தை இந்து சங்கம் முன்வைத்து வருகிறது என்று செய்தியாளர்களிடம் விளக்கம் தந்தார்.


