
அழுகாதே, போங்கு, மச்சி, தெகிரியம், பிகுலு, கலக்குறேள் போங்க; இன்னிக்கி, நாளிக்கு, விடிஞ்சப்ரம், ஆட்டையப் போட்டுட்டாங்க என்றெல்லாம் பேசத் தொடங்கிவிட்ட மின்னல் பண்பலை வானொலி அறிவிப்பாளர்களை சீர்திருத்தி, அவர்களை மின்னல் வானொலித் தலைவராக தான் முன்னர் செயல்பட்ட காலத்தில் இருந்தநிலைக்கு 9-10-2025இல் மீண்டும் தலைமை யேற்றுள்ள குமரன் மீட்டு வருவாரா என்னும் ஏகஎதிர்பார்ப்பு சமுதாயத்தில் நிலவுகிறது.
அண்மைக் காலத்தில் மின்னல் பண்பலை வானொலி அறிவிப்பாளர்களின் சிரிப்பு சத்தத்தை சகிக்கமுடியவில்லை. அறிவிப்பாளர்கள் நகையுணர்வுடன் சிரிப்பும் கலந்து அறிவிப்பு செய்வது பொருத்தமானதுதான்; அதற்காக, அடுப்படியில் பேசி சிரிப்பதைப்போல மூச்சுக்கு மூச்சு சிரிப்பதை இரசிக்க முடியவில்லை.
சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே
சொந்தமான கையிருப்பு! வேறு
ஜீவ ராசிகள் செய்ய முடியாத
செயலாகும் இந்த சிரிப்பு !

என்று என்.எஸ். கிருஷ்ணன் பாடிய பாடல் வரிகள் சிரிப்பின் பேருன்னதத்தை விளக்குகின்றன். அ. மருதகாசி இயற்றிய அந்தப் பாடல் ராஜா ராணி என்னும் திரையில் இடபெற்றுள்ளது. 1956-இல் தயாரான அந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் டி.ஆர். பாப்பா
மேத் திங்கள் முதல் நாளில் ஒருபெண் அறிவிப்பாளர் காலைக் கதிர் நிகழ்ச்சியைப் படைத்தார். தனியொரு ஆளாக நிகழ்ச்சியைப்படைத்தபோதும் தானாகவே சிரித்துக் கொண்டார் பலதடவை; அன்று காலை 8:00 மணி அளவில் தொழிலாளர் தின சிறப்பு நிகழ்ச்சியாக, ஒருவர் இறந்த பின் உடலை பெட்டியில் கிடத்தும்முன் நீராட்டி சுத்தம் செய்யும் தொழிலைச் செய்யும் ஒருவரின்பேட்டி இடம்பெற்றது.
இதன் தொடர்பில், முதல் நாளே(ஏப்ரல் 30) ‘நாளைக் காலை எட்டு மணி அளவில் தொழிலளர் தின சிறப்புப் பேட்டி இடம்பெறும்’ என்னும் ஒலிப்பதிவு செய்யப்பட்ட அறிவிப்பை அடிக்கடி ஒலியேற்றி வந்தனர். அடுத்த நாள் காலையிலும் ‘நாளைக் காலை எட்டு மணி அளவில் தொழிலளர் தின சிறப்புப் பேட்டி இடம்பெறும்’ என்று முதல் நாளுக்குரிய ஒலிப்பதிவை திரும்பத்திரும்ப அந்தப் பெண் அறிவிப்பாளர் ஒலியேற்றினார்.
இத்தனைக்கும் மே 1-இல் காலைக் கதிர் நிகழ்ச்சியைப் படைத்த அதே அறிவிப்பாளர் தயாரித்த ஒலிப்பதிவுதான் அது; அவரே, நேரடியாக அறிவிப்பதை விட்டுவிட்டு, முதல் நாள் ஒலிபரப்பிய ஒலிப்பதிவை அடுத்த நாளிலும் மீண்டும் மீண்டும் ஒலியேற்றியது மிகமிக அறியாத்தானம்

அதேத் திங்கள் 12-ஆம் இருவர் காலைக்கதிர் நிகழ்ச்சியைப் படைத்தனர். ஆனால், மிக சாந்தமாகவும் மிகமிக அமைதியாகவும் நிகழ்ச்சியைப் படைத்த அந்த இருவரின் காலைக்கதிரைப் போல எப்போதும் இருந்தால் எத்துணைச் சிறப்பாக இருக்கும்?
அன்று புத்தர் பிறந்த நாளா அல்லது அவர் போதி மரத்தடியில் ஞானம் பெற்ற நாளா என்பது தெரியவில்லை; ஆனாலும் விசாக தினம் என்றும் புத்த பூர்ணிமா எனவும் அழைக்கப்படும் அன்றைய தினத்தில் இருவர் காலைக் கதிரை ஒலியேற்றினாலும் ‘கொண்டி’ எனப்படும் ஒலிபரப்பு அறியில் ‘புவீ’ என அழைக்கப்படும் புவனா வீரமோகன் மட்டும் இருந்தார்; இன்னொருவரான தெய்வீகன் தாமரைச் செல்வன் பிரிக்ஃபீல்ட்ஸ் பௌத்த ஆலத்தில் இருந்து அங்கு நிகழ்ந்தவற்றை நேரடியாக அறிவிப்பு செய்தார்.

வழக்கமாக இந்த இருவரும் சேர்ந்து காலைக் கதிரைப் படைத்தால், தூள் பறக்கும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக அந்த நாளில் இந்த இருவரும் படைத்த சாந்தமான காலைக் கதிர், என் மனதில் என்றேன்றும் நிலைத்திருக்கும்.
அதைப்போல, மோகன்-தா.தெய்வீகன் இருவரும் மேத் திங்கள் 23-ஆம் நாள் காலைக்கதிர் நிகழ்ச்சியைப் படைத்தனர். ஒன்பது மணி செய்திக்குப் பின், பேராசிரியரும் மலாயாப் பல்கலைக்கழக தமிழாய்வுப் பிரிவு மேநாள் தலைவருமான முனைவர் சு.குமரனின் நேரடி பேட்டி இடம்பெற்றது.
எஸ்.டி.பி.எம். மாணவர்களின் கல்வி நலனுக்காக, குமரன் தலைமை வகிக்கும் மலேசியத் தமிழாய்வு நிறுவனம் எந்தெந்த வழியில் எல்லாம் பாடாற்றுகிறது என்று அங்காசாபுரிக்கே வந்து விளக்கம் அளித்தார். அவருடன் கலந்துரையாடிய மோகனும் தெய்வீகனும் ஒரு பேராசிரியரிடம் உயர்க்கல்வி மாணவர் இருவர் எப்படி பௌவியமாகவும் பணிவாகவும் பேசுவார்களோ அதைப்போல பேசினர்.
இதே இருவரும், ஒன்பது மணி செய்திக்கு முன்புவரை எந்த அளவிற்கு துள்ளலும் எள்ளலுமாக பகடியும் ஏகடியமுமாக அரட்டை அடித்தனர்; அப்படிப்பட்டவர்களா இப்படியென்று நினைக்கும் அளவுக்கு ஒரு வகுப்பறையைப் போல ஒலிபரப்பு அறையை மாற்றியது கண்டும் வியந்தேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நாளும்பொழுதும் தமிழ்க் கொலை வஞ்சக-மில்லாமல் மின்னல் வானொலியில் இடம்பெறுகிறது. வானொலியைக் கேட்டால், ‘நல்லவிதமான நான்கு வார்த்தைகளைக் கேட்டு திருத்திக் கொள்ளலாமே’ என்று எவராவது நினைத்தால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
இலக்கிய நடையில் பேச வேண்டும் என்று ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. அதேவேளை, ஓரளவாவது திருந்தப் பேசலாமே; தமிழ்ச் சொற்களை அநியாயமாக அடித்து, நசுக்கி, ஒடுக்கும் வேலை அறிவிப்பாளர்களால் தாராளமாக மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கெல்லாம் காரணம், தகுதிவாய்ந்த தலைமை, அங்கு இல்லை இல்லாமல் இருந்ததுதான்.
மின்னல் வானொலி அறிவிப்பாளர்ளின் தயாரிப்பில் ஒலியேற்றப்படும் ஒரு விளம்பரத்தில் ‘அது முக்கியம் பிகுலு’ என்ற உச்சரிக்கப்படுகிறது.
கோடம்பாக்கத்திற்கு வாய்த்த ஒரு நாயக கோணங்கி, தான் நடிக்கும் திரைப்படங்களுக்கு கத்தி, துப்பாக்கி, போக்கிரி என்றெல்லாம் இளம் வயதினரை மதிமயங்க வைக்கும் விதமாக எதிர்மறையான பெயர்களை மட்டும் சூட்டும்; மெர்சல், பிகில் போன்ற பொருளற்ற பெயர்களும் அவ்வரிசையில் சேரும்.
Whistle என்னும் ஆங்கிலச் சொல்லை, தமிழில் அப்படியே விசில் என்றும் அதையே நசுக்கி பிகில் எனவும் ஒருசிலதுகள் உச்சரிக்கின்றன. இன்னும் சொல்லப் போனால், இந்தக் கோடம்பாக்கத்து அசடன்-கசடன் தன் இரசிகர்களையே ‘பிகில்’ என்றுதான் விளிக்கும். இப்பொழுதுகூட 41 பேரின் அநியாய மரணத்திற்கு காரணமாகிவிட்டு, கடந்து பன்னிரண்டு நாட்களாக பொறுப்பின்றி-மனசாட்சி இன்றி பதுங்கிக்கிடக்கிறது.
அண்மையில்கூட, ஒரு பொதுக் கூட்டத்தில் ‘கப்பு முக்கியம் பிகிலு’ என்று பேசிய இந்தக் கோடம்பாக்கத்துக் கூத்தன், தன் இரசிகர்களைப் பார்த்து ‘வெற்றி இலக்கு முக்கியம்’ என்பதைத்தான் அவ்வாறு கூறியது.
அந்த பிகில் என்னும் சொல்லில் மயங்கிய மின்னல் பண்பலை அறிவிப்பாளர்க் கூட்டம், ‘பிகிலு’ என்ற சொல்லை ஒரு விளம்பரத்தில் பயன்படுத்துவது மிகமிக கேடுகெட்டத்தனம்; அப்பட்டமான மொழிக்கொலை; தமிழ்க் கொலை; தாய்க்கொலை.
‘என்ன கறி?’, ‘கோழிக் கறி’ என்பதெல்லாம் அறிவிப்பாளர்களின் உச்சரிப்பிற்கு சில சான்று; குழம்பு என்னும் சொல்லை தமிழ் வானொலி பலுக்காவிட்டால், வேறெங்கு அப்பணி இடம்பெறும்?.

இப்படிப்பட்ட அக்கப்போரெல்லாம் வகைதொகையின்றி இடம்பெறுவதற்கு மூல காரணம், அட்டியின்றி தமிழ் உணர்வில்லா தலைமைதான்; இதை யெல்லாம் சுட்டிக் காட்டினால், திருத்திக் கொள்வதற்கு மாறாக எதிரியாகப் பார்க்கின்றனர்.
‘மின்னலைக் கேட்காமல் நான் தூங்கவே மாட்டேன்; பிடித்தமான பாடலை ஒலியேற்றுகிறீர்கள்; ரொம்பொ ரொம்போ நன்றி; என்றெல்லாம் பாராட்டும் நேயர்களைத்தான் பிடிக்கிறது, மின்னல் வானொலி அறிவிப்பாளர்களுக்கு!
“நாங்கள் இரவு-பகல் பாராமல் பணிபுரிகிறோம்; எவ்வளவு நல்ல நிகழ்ச்சிகளைப் படைக்கிறோம். அதை யெல்லாம் பாராட்டாமல், குறைசொல்ல மட்டும் வந்துவிட்டனர் என்று புலம்புகின்ரனர்.
இத்துணைப் பெரிய வளாகம், கட்டட கட்டமைப்பு, ஊதியம், நிதி ஒதுக்கீடெல்லாம் எதற்காக? மொழி காக்கவும் பண்பாடு போற்றவும் கலை வளர்க்கவும்தான் உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நல்லது இடம்பெறும்போது அவற்றை அவதானித்தபடி கடந்து செல்கிறோம்; அதேவேளை அல்லது இடம்பெறும்பொழுது சுட்டிக் காட்டுகிறோம்.
ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு பணியாற்றுபவர்கள், தாங்கள் என்னவோ வாழ்வை ஈகம் செய்வதைப் போல கருதிக் கொள்வது நன்றன்று;
குறை நேருங்கால் சுட்டிக் காட்டினால், திருத்திக் கொள்வதை விட்டுவிட்டு, சுட்டிக்காட்டுவதைப் பழிப்போர் மரத்துப்போன மனத்தினர் என்பதைத் தவிர வேறென்ன சொல்வது?
அரச வானொலி-தொலைக்காட்சி-RTMஇன் தமிழ் வானொலியான மின்னல் பண்பலை வானொலி, 80-ஆம் ஆண்டை எட்டியுள்ள நிலையில், குமரி வான்முற்றத்தின் சார்பில் மீண்டும் வாழ்த்து உரித்தாகட்டும்!

தமிழ் வானொலி நேயர்களின் உணர்வுடன் கலந்துவிட்ட இந்த வானொலியில் காலை 6:00 முதல் இரவு 11:00 மணிவரை, ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை இடம்பெற வேண்டிய செய்தி அறிக்கை, ஓரோர் வேளையில் இடம்பெறாமல் போவதுண்டு; இதற்கு நியாயமான காரணமும் இருக்கக்கூடும்.
வானொலிப் பிரிவிலோ, செய்திப் பிரிவிலோ அல்லது தொழில்நுட்பம் சார்ந்தோ ஏதாவது தடங்கல் ஏற்பட வாய்ப்புண்டு. அதுபோன்ற வேளைகளில், முன்பெல்லாம் உடனே அறிவிப்பு செய்வதுடன் வருத்தமும் தெரிவிக்கப்படும்.
ஆனால், இப்பொழுதெல்லாம் அவ்வாறு செய்வதில்லை. அந்த செய்திக்குரிய நேரம் முடியும்வரை ஏதாவது இசையை ஒலியேற்றுவார்கள்; அந்த நேரம் முடிந்ததும், ஒன்றுமே நடவாததைப் போல அடுத்த அறிவிப்புடன் நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்துவார்கள்; கடந்து செல்வார்கள்.
காத்திருந்த நாம், என்ன-ஏதென்று தெரியாமல் குழப்பத்திற்கும் ஏமாற்றத்திற்கும் ஆட்படுவதுதான் மிச்சம். இதுகுறித்து தகவல் அறிய அதன் நிருவாகியை அழைத்தால், அந்தப் பெண் நிருவாகி தொலைபேசியை எடுக்கவே மாட்டார். எத்தனை தடவை அழைத்தாலும் அப்படித்தான்.
அமைச்சராக இருந்த பெருமக்களும் அரசியல் தலைவர்களும்கூட அழைக்கும் நேரத்தில் பேச முடியாவிட்டால், நள்ளிரவு வேளையில் ஓய்வு கிட்டும் நேரத்தில்கூட அழைப்பார்கள். ‘நினைவில் வாழும்’ துன் சாமிவேலு மற்றும் டத்தோஸ்ரீ கோ.பழனிவேலு, டான்ஸ்ரீ கேவியஸ், டான்ஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியன் போன்றோர் வெளிநாட்டில் இருந்தால்கூட, அழைத்த நேரத்தில் பேச இயலாவிட்டால், பின்னர் அழைத்துப் பேசுவார்கள்.

ஆனால், மின்னல் பண்பலை வானொலியின் நேற்றைய நிருவாகிக்கு இறுமாப்பு மிகஅதிகம்போலும். எதுவாக இருந்தாலும் மின்னஞ்சல் அனுப்பினால்தான் பதிலஞ்சல் அனுப்பப்படுமாம். இதுதான் இப்படி என்றால், செய்திப் பிரிவின் அந்நாளைய பொறுப்பாளரை அழைத்தால், அதனிலும் மோசம்.
“சார் நான் இப்பொழுதான் அலுவலகத்திற்கு வந்தேன்; வாகன நெரிசலில் சிக்கி களைப்பாக இருக்கிறது; பின்னர் பேசலாம்” என்றுகூறி பின்வாங்குவார்.
அல்லது, நான் வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கிறேன்; சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்; உறவிருக்கு உடல்நிலை சரியில்லாததால மருத்துவமனைக்கு விரைகிறேன்; இப்பொழுதுதான் அலுவலகத்திற்கு வந்தேன்/வீட்டிற்குத் திரும்பினேன் என்றெல்லாம் புலம்பல் மயமாக இருக்கும்;
ஒரு கட்டத்தில் இனி தன்னை அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்; பின்னர்தான் தெரியவந்தது, அவர் வேறு இடத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்டார் என்று.
திருவாளர்கள் பி.பார்த்தசாரதி, இராஜசேகரன், குமரன், திருமதி சுமதி போன்றோர் மிகவும் அணுக்கமாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் கருத்து தெரிவிப்பார்கள்; அவர்களிடம் சமுதாய நோக்கும் அணுசரணைப் போக்கும் நிறைந்திருக்கும்.
முள்ளும் மலரும் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ‘செந்தாழும் பூவில்’, ‘பச்சமட பாய்’ என்றெல்லாம் தொடங்கும் இருபாடலையும் கேட்க விரும்பினால் உடனே, திருமதி சுமதிக்கு அழைத்தால் போதும்; அப்பாடல்களை இப்பொழுதும் கேட்கலாம்.

சமூகவெளியிலும் பத்திரிகை வட்டத்திலும் உறவை வளர்க்கும் இப்படிப்பட்ட அதிகாரிகளை மின்னல் பண்பலை வானொலிக்கு நிருவாகியாக நியமிக்க வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் கவனத்தில் கொண்டால், எங்களைப் போன்றோருக்கு இளகுவாக இருக்கும்; சமுதாயத்திற்கும் நன்மை விளையும்.
கா. பெருமாள், ரெ.கார்த்திகேசு, மைதீ.அசன்கனி, பா.சந்திரகாந்தம், அரு.சு.ஜீவானந்தன், டி.என்.மாரியப்பன், மைதி.சுல்தான், பைரோஜி நாராயணன், ந. பாலபாஸ்கரன் போன்றோர் மலேசிய அரசத் தமிழ் வானொலி நிருவாகியாராக பணியாற்றியதில்லை; அறிவிப்பாளர்களாகவும் செய்தி வாசிப்பாளர்களாகவுமே விளங்கியவர்கள்.
ஆனாலும் ஆர்.டி.எம். தமிழ் வானொலி வரலாற்றில் இந்தப் பெருமக்கள் ஏன் நிலைபெற்றுள்ளனர் என்றால் கேளிக்கை, பொழுதுபோக்கு, நகைச்சுவை அம்சங்களுக்கு மட்டும் என்றில்லாமல் மலேசியத் தமிழ்ச் சமுதாயத்தின் கலை இலக்கியத்தை முன்னெடுத்து, தமிழ்ப் பாதுகாப்பிற்கும் பங்களித்து, பல ஆளுமையர் உருவாகவும் வளரவும் பங்களித்ததேக் காரணம்.
இன்றைய அறிவிப்பாளர்களும் தங்களை தக அமைத்துக் கொண்டால், சமுதாயத்திற்கு மட்டுமல்ல; அவர்களுக்கும் சிறப்பு!


