Thursday, April 23, 2026

சீறாப்புராணம், தேம்பாவணியும் இடம்பெறுமா? ‘அமுதே தமிழே’ இலக்கிய நிகழ்ச்சியில். மீண்டும் சமயக் கலப்பு!

அரச வானொலியான மின்னல் பண்பலை வானொலியில் ஞாயிறுதோறும் பத்தே கால் மணியளவில் இடம்பெறும் ‘அமுதே தமிழே’ இலக்கிய நிகழ்ச்சிக்கு, ரோகினி நிருவாகியாக பொறுப்பேற்றிருந்த காலம், ஒரு வசந்த காலம் என்றே கூறலாம்.

ஒரு வாரத்தில் வெறும் 45 நிமிடங்களுக்கு மட்டுமே ஒலியேற்றப்படும் இந்த நிகழ்ச்சி, தமிழ் மொழிக்கான மகுட நிகழ்ச்சி என்பதைக் கருதாமல் சமயம்சார்ந்த கருத்தும் இடைச்செருகப்படும் நிலை தொடர்ந்தது;

பாடல், உரையென ஏதாவதொரு வகையில் சமயக்கலப்பும் இடம்பெறுவது காலந்தோறும் தொடர்ந்த நிலையில், நல்வாய்ப்பகவும் விதிவிலக்காகவும் தமிழ்க்குடிலின் குலவிளக்காகவும் வாய்த்தது இரட்டையரைப் போல புவனா வீரமோகனும் சு.ரோகினியும் படைத்துவந்த அமுதே தமிழே இலக்கிய நிகழ்ச்சி.

தற்பொழுது, தலைமை மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அமுதே தமிழே நிகழ்ச்சியை உண்மையில் அமிழ்தாகவேப் படைத்த ரோகினிக்கும் புவீ’க்கும் பாராட்டுத் தெரிவித்ததுடன் இந்த இலக்கிய நிகழ்ச்சியை தொடர்ந்து புவனாவே படைக்க வேண்டும் என்ற ஆவலையும் வெளிப்படுத்திய இரண்டு நாட்களுக்குள்,

மீண்டும் குழப்பம் நேர்ந்துள்ளது;

இன்றைய(அக்டோபர் 12) அமுதே தமிழே நிகழ்ச்சியில், இலக்கணம் சார்ந்த ஓர் அங்கம், மறு ஒலிபரப்பு செய்யப்பட்டது; எத்துணை முறைக் கேட்டாலும் தாழ்வில்லாத கருத்துதான் அது; ஆனாலும் வியப்பு மேலிட்டது; அவ்வியப்பு அடங்குவதற்குள், அடுத்த அதிர்ச்சி, மதம் புகுந்த கோலம்.

தமிழுக்கான இந்த நிகழ்ச்சியில் இப்பொழுது ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு புதிதாக வந்த தலைமைதான் காரணமா எனத் தெரியவில்லை;

திருமந்திரம் என்பது, சிவ நெறியாம் சைவ நெறிக்காக இயற்றப்பட்ட சமயப் பெட்டகம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை; ஆனாலும், இது தமிழ் மொழிக்கான இலக்கண-இலக்கிய நிகழ்ச்சியில் இடம்பெற வேண்டிய அவசியம் இல்லை;

பக்தி இலக்கியம் என்று முத்திரைக் குத்தி, இனி வாரந்தோறும் மதக் கருத்து இடம்பெறுவது உறுதியானால், தமிழ்ப் பண்டிதர் உமறுப் புலவர் இயற்றிய சீறாப்புராணமும் பிறப்பால் இத்தாலியராக இருந்தாலும் பெற்ற பிள்ளையைவிட இந்த வளர்ப்புப் பிள்ளை உன்னதமானவன் என தமிழன்னையால் போற்றப்பட்டவரும் தமிழில் முதன்முதலில் அகராதியை உருவாக்கியவருமான வீரமாமுனிவர் என்னும் பெஸ்கி பாதிரியார் இயற்றிய தேம்பாவணியையும் அமுதே தமிழே நிகழ்ச்சியில் இணைத்துக் கொள்ளலாமே!

இந்த உலகில் மனிதன்தான் அனைத்தையும் படைத்தான், காத்தான், இன்றளவும் படைத்தும் காத்தும் வருகிறான் என்னும் உண்மை, உரக்க ஒலிக்கப்பெறும் நாள், அமையும் ஒரு நாள்!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை