Sunday, May 3, 2026

வாரலாற்றை மறைக்கும் அரசோடும் மறக்கும் மக்களோடும் வாழ்கிறோம்! -சரவணன்

முத்தமிழ் வித்தகர் முருகு சுப்பிரமணியனுக்கு கண்ணதாசன் அறவாரியம் மகுடம்

தக்கார் தகவிலார் என்பது – அவரவர் எச்சத்தால் காணப் படும்-(குறல் 114)

தமிழ்நாட்டு-இம்மலைநாட்டு இலக்கிய எல்லைகளுக்கு பாலம் சமைத்த பேரிலக்கியவாதி முருகு. சுப்பிரமணியன், தன்னுடைய இலக்கியப் பயணம்-நாளிதழ் பயணம் தொடர்பாக எண்ணற்ற தடைக்கற்களை எதிர்கொண்டவர்.

இருந்தபோதும், காலமகள் என்னும் நல்லால் குறிப்பால் உணர்த்தி இருப்பாள் போலும்; ‘சரவணன் என்னும் இலக்கிய நல்லாரும் வல்லாருமான ஒருவர் வருவார் நின் புகழ்பாட; அதனால் எண்ணியதை எண்ணியபடி நிறைவேற்றிச் செல்’ என்று

அதன்படி வாழ்ந்து, 58 ஆண்டுகளோடு தன் வாழ்வை முருகு சுப்பிரமணியன் வரையறுத்துக் கொண்டார் போலும்.

அத்தகைய வாழ்வை நல்ல வண்ணமாக வாழ்ந்ததால், மறைந்து 45 ஆண்டுகளுக்குப் பின்னும் மலேசிய கண்ணதாசன் அறிவாரியத்தால் அவர் இலக்கிய மகுடம் சூட்டப்படுவார் என்பதை முருக்கு சுப்பிரமணியத்தி-னுடைய குடும்பத்தினரை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

அந்த வகையில் முருகு சுப்பிரமணியனின் நூற்று ஓராவது பிறந்தநாள் விழா அவர் பிறந்த நாளான அக்டோப்ர் 5-ஆம் நாள் மாலை, கோலாலம்பூர் செட்டியார் மண்டபத்தில் வாரியத்தின் தலைவர் நன்நெஞ்சினர் சரவணனின் தலைமையில் நடைபெற்றது.

தமிழுக்கு ஒருவன் திருமுருகன் என்னும் வழக்கமான திருமுருக துதியுடன் தலைமை உரையைத் தொடங்கினார் எய்ம்ஸ் பல்கலைக்கழக இணை வேந்தர்; இலக்கிய எல்லையின் சொல்வேந்தர்; தப்பா நாடாளுமன்றத் தொகுதியின் மக்கள் வேந்தர்; மலேசிய இந்திய காங்கிரஸ் எனும் பெரிய இயக்கத்தின் துணைத் தலைவர்; கண்ணதாசன் அறவாரிய தலைவர் டத்தோஸ்ரீ மு.சரவணன்.

“தமிழ் இலக்கிய வட்டத்தில் ஓர் எழுத்தாளனை அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் முதலில் கொண்டாட வேண்டும் அந்த பாங்கு முருகு சுப்ரமணியன் குடும்பத்தினரிடம் இருந்ததால்தான் கடந்தாண்டில் முருகு சுப்ரமணியன் குடும்பத்தினர் சார்பில் எடுக்கப்பட்ட நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு தனக்கு நேர்ந்தது”.

முத்தமிழ் வித்தகர் முருகு சுப்ரமணியனைப் பற்றி அதிகம் தெரிந்திடாத தனக்கு அவரின் குடும்பத்தார் எடுத்த நிகழ்ச்சி ஒரு உந்துதலாக இருந்ததாக சரவணன் குறிப்பிட்டார்.

“முருகு சுப்பிரமணியனுக்காக அவரின் குடும்பத்தார் எடுத்த நூற்றாண்டு விழாவின் தொடர்பாகத்தான் இன்றைய இந்த விழா நூற்றாண்டு நினைவுகள் என்னும் பெயரில் நடைபெறுகிறது’ என்று சரவணன் கூறினார்.

பத்திரிகையாளராக இருந்த முருக சுப்பிரமணியன், தன்அரசியல் கொள்கை, இனப் பற்று, மொழி உணர்வு போன்ற சிந்தனையால் வேறு எல்லையில் இருந்தாலும் அரசியல் மாற்றத்திற்கான தலையங்கங்களை நல்ல சொற்களைக் கொண்டு அந்த காலத்தில் சிறப்பாக எழுதினார்;

இத்தகைய பாங்கினை இன்றைய பத்திரிகையாளர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்; தகைசான்ற சொற்களைப் பயன்படுத்தி எழுதும் வழக்கத்தை கைக்கொள்ள வேண்டும். இத்தகைய சிந்தனையைக் கொடுக்கிறது முருகு சுப்ரமணியனின் படைப்புகள்;

சமுதாய வீதியில் ஒரு சில பட்டங்கள் ஒரு சிலருக்கு மட்டுமே பொருந்தும்; ஒருவருக்கு வழங்கப்பட்டதை வேறொரு வழங்கினாலும் அது காலப்போக்கில் நிற்காமல் நிலைக்காமல் பொருந்தா நிலைக்கு ஆளாகிவிடும்; அந்த வகையில் அறிஞர் என்றால் அது பேரறிஞர் அண்ணாவைத்தான் குறிக்கும்; அதைப்போல கலைஞர் என்றால் அது அரசியல் தலைவர் மு கருணாநிதியைத்தான் குறிக்கும்; அதுபோல கவிஞர் என்றால் அது கண்ணதாசனை மட்டுமே குறிக்கும்; எத்தனையோ பெரும் கவிஞர்கள் இருந்தாலும் வாழ்ந்தாலும் வாழும்பொழுதே கவிஞர் என்று பெருவாரியாக அழைக்கப்பட்டவர் கண்ணதாசன்; கவிஞர் என்ற பட்டமும் அவருக்கே பொருந்தும்; கர்ம வீரர் என்றால் அது கு காமராசரை மட்டுமே குறிக்கும் அதைப்போல அருளாளர் என்றால் இரா.ம. வீரப்பனை மட்டுமே குறிக்கும்; அதுபோலவே அருள்மொழி அரசு என்றால் அது கிருபானந்த வாரியாரை மட்டுமே குறிப்பிடும்; இத்தகையப் பட்டங்கள் எல்லாம் அவர்களுடனேயே ஐக்கியமாகிவிடும்; மற்றவர்களுக்கு பொருந்தாது அதைப்போல நம் நாட்டை எடுத்துக் கொண்டால் அருள்மாமணி என்னும் பட்டம் என் டி எஸ் ஆறுமுகம் பிள்ளைக்கு மட்டுமே பொருந்தும்; இத்தகைய பட்டங்களைப்போல முத்தமிழ் வித்தகர் என்னும் பட்டம் முருகு சுப்ரமணியனுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது; அந்த அளவிற்கு அவருக்கு எழுத்தாளுமை மட்டும் அல்ல; கருத்து ஆளுமையும் சமூக ஆளுமையும் இலக்கிய ஆளுமையும் ஒன்று சேர்ந்து அவரகத்தே குடிகொண்டிருந்தன.

முருகு சுப்பிரமணியன் என்பவர் ஒரு பத்திரிகையாளர் என்ற அளவிற்குத்தான் தெரியுமேத் தவிர வேறு எதுவும் அவரைப் பற்றி எனக்கு தெரியாது; கடந்தாண்டில் அவருடைய நூற்றாண்டு விழாவிற்காக அவரின் குடும்பத்தார் என்னை அழைக்கும் வரை இந்த நிலைதான் நீடித்தது;

பின்னர் தான் தெரிய வந்தது அறிவியல் வளர்ச்சி, போக்குவரத்து வசதி உட்பட அனைத்து கட்டமைப்பும் குறைவாக இருந்த அந்த காலத்தில் எப்படிப்பட்ட சேவையை அவர் செய்திருக்கிறார் என்று; குறிப்பாக ம.இ.கா-வின் மேனாள் தலைவர் தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் காலத்தில் அவர் எழுதிய எத்தனையோ படைப்புகள் ம.இ.கா.வின் தலைமைக்கும் அதனுடைய தேசிய அடைவுநிலைக்கும் ஊற்றுழி உதவி புரிந்திருக்கின்றன என்பதை அறிந்து நான் மிகவும் வியந்தேன்.

கடந்தாண்டு நிகழ்ச்சிக்கு வந்தபொழுது வாசலில் இடம்பெற்ற கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பொன் விழா ஆண்டு மலரில் ஒன்றை எடுத்து வரும்படி விஜய ராணியிடம் சொல்லி, அது கிடைக்கப்பெற்றதும் மேலோட்டமாக படிக்க ஆரம்பித்ததுமே அவர் எந்த அளவிற்கு செயல்பட்டு இருக்கிறார்? இவ்வளவு பெரிய பணிகளை எல்லாம் மேற்கொண்டு இருக்கிறாறே என்றெல்லாம் மிகவும் வியந்தேன் என்றெல்லாம் சரவணன் உளமாற பேசினார்.

“இன்று வெளியிடப்படுகின்ற இந்த முருகு சுப்பிரமணியனாரின் நூற்றாண்டு நினைவலைகள் புத்தக வடிவத்தை தமிழ்நாட்டில் திமுகவை சேர்ந்த மூத்தத் தலைவர் ஒருவருக்கு அனுப்பி வைத்தேன்; அதைக் கண்டு வியந்த அவர் இப்படிப்பட்ட ஒருவர் இருந்திருக்கிறாரா என்று அவர் என்னிடம் எதிர் வினா எழுப்பினார்”.

அவர்களுக்கு முருகு சுப்பிரமணியனாரைப் பற்றி தெரியவில்லை.

நாமெல்லாம் இப்பொழுது வரலாற்றை மறைக்கக் கூடிய அரசாங்கத்தோடும் வரலாற்றை மறக்க கூடிய சமுதாயத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

மொத்தத்தில் நம்முடைய பெருமைமிகு வரலாறெல்லாம் இருட்டட்டிப்பு செய்யப்படுகின்றன.

இது கடந்த தலைமுறைக்கான செய்தி; அதை இந்த தலைமுறையினரிடம் நாம் பதிப்பிக்காவிட்டால் அடுத்த தலைமுறைக்கு இது தெரியாமலேயே போய் விடக்கூடும்.

தமிழர்கள் உலகெங்கும் புலம்பெயர்ந்தனர்; புலம்பெயர வைக்கப்பட்டனர். மொரிசியஸ் பிஜி தீவுகள் தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளையும் கண்டங்களையும் குறிப்பிடலாம்; ஆனாலும் தங்களின் உயிரணைய தாய் மொழியான தமிழையும் தம் தொன்மைமிகு பாரம்பரிய பண்பாட்டுக் கூறுகளையும் கைவிடாமல் வாழ்க்கை நெடுகிலும் தொடர்ந்து கைப்பற்றி வாழ்கிற தமிழர்கள் இருக்கின்றனர் என்றால் அது இந்த மலேசியத் திருநாட்டில் மட்டுமே என்று சரவணன் பெருமைமிகவும் உணர்ச்சி பொங்கவும் குறிப்பிட்டார்.

அண்ணன் தமிழ்மணி 2000 ஆண்டுகளுக்கான வரலாற்றைப் பற்றி குறிப்பிட்டார்; நான் இந்த மண்ணிற்குரிய குறைந்தபட்சம் 200 ஆண்டுகளுக்குரிய வரலாற்றைக் குறிப்பிட விரும்புகிறேன்; பினாங்குத் தீவில் ‘ஃபிரீ ஸ்கூல்’ என்ற கல்விச் சாலையில் தமிழ் வகுப்பு தொடங்கப்பட்டு இப்பொழுது இருநூற்று பத்து ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் இத்தகைய நெடிய வரலாற்றை அரசியல் இயக்கங்களோ பொது அமைப்புகளோ கொண்டிருக்கவில்லை; சாதாரண எளிய மக்கள், தோட்டப்புறங்களில் வாழ்ந்தவர்கள், தமிழின்பால்-மொழியின்பால் அக்கறை கொண்டு காலம்முழுக்க அதை இந்த மண்ணில் தற்காத்து வந்திருக்கின்றனர் என்பதுதான் உண்மை; ஆனாலும் இது குறித்த வரலாற்றுப் பதிவு எதுவும் நம்மிடம் இல்லை;

மின் வசதி இருக்கின்ற இந்தக் காலத்தில்கூட இரவில் தனியாகச் செல்ல ஐயுறுகிறோம்; ஆனால் அந்த நாளில் ரப்பர் தோட்டத்தில் ஒற்றை மனிதனாக நுழைந்த பொழுது ஒரு கல்லை நட்டுவைத்து, சாமியே நீ காப்பாற்று என்ற நம்பிக்கையில் வாழ்க்கையைத் தொடர்ந்தான்; இன்று இருக்கின்ற ஆலய கட்டமைப்பெல்லாம் அப்பொழுது இல்லை; ஆனாலும் அன்று முளைத்த அந்த பாரம்பரியம்தான் இன்று இந்த அளவிற்கு பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறது.

இந்த மண்ணின் கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சி போன்றவற்றிற்கு மட்டும் தமிழன் பாடுபடவில்லை; இந்த நாட்டிற்கு பெயரைத் தந்தது தமிழ்; கலாச்சாரத்தை தந்தவன் தமிழன்; இந்த வரலாற்றை எல்லாம் அரசு நினைவுகூருமா என்று தெரியவில்லை; ஆனால், நாம் நினைத்தால் அதைக் காலம் முழுக்க தற்காக்க முடியும்;

இன்னும் அமைச்சராக வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இல்லை; ஆனால் இன்னும் பத்து ஆண்டுகளில் இந்த மண்ணில் தமிழனின் நிலை; அவன் நிலைநாட்டிய பெருமை; பாரம்பரியச் சிறப்பு எல்லாவற்றையும் பதிவுசெய்து நிலைநாட்ட வேண்டும்; இத்தகைய கடப்பாட்டை தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நம் உள்ளத்தில் நிறுத்த வேண்டும் என்ற பேராவல் தன் உள்ளத்தில் குடிகொண்டுள்ளது என்றார் சரவணன்.

இன்றைய அரசியலும் மோசமாக இருக்கிறது; ஒரு மக்கள் பிரதிநிதி, அவர் நாடாளுமன்ற உறுப்பினரா அல்லது சட்டமன்ற உறுப்பினரா என்பதல்ல; ஆனாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி ஆகிவிட்டால், ஒருவர் தன் பெயருக்கு முன்னால் ‘மாண்புமிகு’ என்ற மரியாதைச் சொல் சேர்க்கப்படுகிறது.

அத்தகைய நிலையை அடைவதற்கு சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதி குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளுக்காவது மக்கள் தொண்டாற்றி இருப்பார்; இந்த சமூக வீதியிலே நடைபயின்றிருப்பார்; அப்படிப்ப்பட்ட பெருந்தலைவர் குமரனைப் போன்று ஆசிரியராகவோ டி.பி. விஜயேந்திரனை போன்று வழக்கறிஞராகவோ அண்ணன் தமிழ்மணியை போன்று பத்திரிகையாளராகவோ ஏதாவது ஒரு வகையில் சமூகத்தின் பக்கம் நின்று ஏதாவது ஒரு வகையில் சமூக மேன்மைக்காகவோ மொழி வளர்ச்சிக்காகவோ பாடுபட்டவர்களாக இருப்பர்.

ஆனால் இந்நாளைய ‘மாண்புமிகு’க்கள் அப்படி இல்லை; ஆள் கிடைக்கவில்லை என்பதற்காக யாரையெல்லாமோ முன்னிறுத்துகின்றனர். முன்பெல்லாம் தமிழில் எழுத, படிக்க, பேசத் தெரிந்தால் மட்டுமே மக்கள் பிரதிநிதியாக முடியும்; எழுதப்படாத இந்த விதி காலப்போக்கில் சிதைந்துவிட்டது.

எழுதவும் படிக்கவும் தெரியாவிட்டால் என்ன? நான்தான் பேசுகின்ற தலைவனாக இருக்கின்றேனே? அது போதாதா என்று ஒரு சிலர் முன்வந்தனர். இதன் விளைவாக இன்று தமிழில் பேசத் தெரியாத; படிக்கத் தெரியாத; எழுதவும் தெரியாதவர்கள் எல்லாம் மக்கள் பிரதிநிதியாக அதுவும் தமிழர் சார்பில் வந்து விட்டனர்.

தான்ஸ்ரீ ஆர் பாலன், பேராசிரியர் டான்ஸ்ரீ மாரிமுத்து, வழக்கறிஞர்கள் டி.பி. விஜயேந்திரன், ஈப்போ வழக்கறிஞர் மதியழகன், நூற்றாண்டு நினைவலைகள் விழா நாயகன் முருக சுப்பிரமணியனின் குடும்பத்தைச் சேர்ந்த செல்வம்-சந்திரா செல்வம் இணையர், டாக்டர் கலைமணி, பழனியப்பன், டத்தோ கதிரேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த விழாவில், இன்னும் பேசினார் சரவணன் ஏராளமாக!

அவருக்கு முன்னம், மூத்த பத்திரிகையாளர் எழுத்தாண்மை ஏந்தல் முனைவர் பெரு.அ.தமிழ்மணி, பாவலர் நெடுமாறன் ஆகியோருடன் மூத்தத் தலைவர் டான்ஸ்ரீ க.குமரனும் பேசினார்.

தமிழக தமிழிலக்கிய உலகிற்கும் இம்மலையக தமிழ் இலக்கியப் பாட்டைக்கும் பாலம் சமைத்தவர் முருகு சுப்பிரமணியன். அன்றைய மலாயாவில் விடுதலை முழக்கம் உச்சத்தில் இருந்த காலத்தில் நாட்டிற்கு வந்து தமிழ் நேசன் நாளேட்டில் துணை ஆசிரியராக சேர்ந்த முருகு சுப்பிரமணியன், ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுக்கு மேல் நிலைக்க முடியவில்லை.

பாவேந்தர் பரம்பரை வட்டத்தில் தமிழிய வீச்சுடன் எழுச்சி உலா வந்த அவருக்கு மெர்டேக்கா காலத்து தமிழ் நேசன் அலுவலகத்தில் நிலவிய சூழல் ஒத்து வராமல் போனது; முருகு சுப்பிரமணியன், தானறிந்த வரையில் ஒரு போராட்டவாதி; மனித நேயம் மிக்கவர் என்று மேனாள் துணை அமைச்சரும் மூத்த சமூக தலைவருமான டான்ஸ்ரீ க. குமரன் பேசினார்.

1953-மூன்றாம் ஆண்டில் வந்தவர் அடுத்து சில காலத்தில் சிங்கப்பூருக்கு சென்று விடுகிறார்; ஏறக்குறைய 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் மலேசியாவிற்கு திரும்பியவர் தன்னுடைய பத்திரிகை பயணத்தோடு ஏறக்குறைய 20 ஆண்டுகள் நம்மோடு வாழ்ந்திருக்கிறார் என்று கா. குமரன் தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.

பத்திரிகையாளர் முனைவர் பெரு.அ. தமிழ்மணி, பெரும்கவிஞர் முரசு நெடுமாறனையும்போல சுப்பிரமணியனுடன் தான் நெருங்கிப்பழகியதில்லை; ஆனாலும், அவரின் எழுத்தோடும் கருத்தோடும் பழகி இருக்கிறேன்; குறிப்பாக அவரின் கொள்கையோடு நெருங்கி பழகியவன் என்றார் குமரன்.

அதன் அடிப்படையில்தான் முருகு சுப்பிரமணியனுக்காக நாங்கள் எல்லாம் ஈப்போவில் பொன்விழாவை ஏற்பாடு செய்தோம் என்று குமரன் மேலும் குறிப்பிட்டார்.

ஈப்போவின் கலாச்சார மண்டபம் அந்த காலத்தில் குறிப்பிடத்தக்க அரங்கமாக இருந்தது; அந்த அரங்கம் நிரம்பி வழிந்த அளவிற்கு முரு.சோ. நாச்சியப்பன் தலைமையில் முருகுவிற்கு தாங்கள் எடுத்த பொன்விழா அமைந்தது;

“நான், வழக்கறிஞர் மதியழகன், முரு. சொ. நாச்சியப்பன் ஆகியோர் முருக்கு சுப்பிரமணியன் மீது கொண்ட பற்றினால் அவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

50 ஆண்டுகளுக்கு முன்னால் முருகு சுப்பிரமணியனுக்கு பொன்விழா எடுத்த நாங்கள், இப்பொழுது அவர் நூற்றாண்டை யெட்டி, நூற்று ஓராவது பிறந்தநாள் விழாவில் உரையாற்றுவதையும் எண்ணி பெருமை அடைகிறேன் என்றார் குமரன்.

17 வயதில் ஆசிரியர் பணியில் சேர்ந்த தான், தமிழ்மீதும் சமூகத்தின்மீதும் அதிக அக்கறை கொண்டிருந்ததாகவும் குறிப்பாக தமிழை அதிகமாக கற்க முனைந்ததாகவும் அதன் அடிப்படையில் நாளேடுகளுடன் நெருக்கம் ஏற்பட்டது; அந்த காலக்கட்டத்தில் கணவனை இழந்த பெண், விபத்தில் சிக்கி அல்லல் பட்ட குடும்பம் போன்றவர்களுக்கெல்லாம் உதவுவதற்காக நாளேட்டின் வழி நிதியை திரட்டியவர் முருகு சுப்பிரமணியன் என்ற தகவலெல்லாம் நாளேட்டின்வழி தெரியவந்ததாக டான்ஸ்ரீ குமரன் குறிப்பிட்டார்.

அது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலேயே வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் ஏற்பட்டு மக்கள் பெரும் துயருக்கு ஆளான பொழுதும் நிதி திரட்டினார் முருகு சுப்ரமணியன்; அதைப்போல துருக்கியில் ஏற்பட்ட பேரிடருக்கவும் நிதி திரட்டினார் முருகசுப்பிரமணியன்.

எந்த ஆண்டு என்று நினைவில் இல்லை; இந்தியாவிற்கும் சீனாவிற்கும் போர் நடந்து நேரம் அது; அந்த காலக்கட்டத்தில் ‘ஜனநாயக நட்பு அமைப்பு’ என்ற பெயரில் நிதி திரட்டினார் முருகு சுப்பிரமணியன்.

ஒரு பத்திரிகை ஆசிரியராக இருப்பவர், அன்றாடம் தேசிய அளவிலும் உலக மட்டத்திலும் கிடைக்கின்ற செய்தியை திரட்டி வெளியிடுபவராக மட்டும் இருந்துவிடாமல் சமூகப் பாங்காளராகவும் மொழிப்பற்றாளராகவும் இருக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப வாழ்ந்தவர் முருகு சுப்பிரமணியன்.

தனக்கு முன்னாள் பேசிய தமிழ்மணி குறிப்பிட்டதைப்போல அவருடைய படைப்புகள் குறிப்பாக கட்டுரைகள் யாவும் அச்சிடப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்;

சமுதாய நிலையையும் போராட்டங்களையும் வெளிப்படுத்திய அத்தகைய கட்டுரைகள் குறித்து அவரிடம் துணை ஆசிரியராக இருந்த பாதரசன் போன்றவர்கள் எல்லாம் அதுகுறித்து நன்கு அறிவார்கள்.

“இதற்கெல்லாம் காரணம், அவர் ஈடுபாடு காட்டிய திராவிட சித்தாந்தமாக இருக்கும்; அதேவேளை, அவர் முதலில் இணைந்தது திராவிட இயக்கம் அல்ல; அவரை ஈர்த்தது பாவேந்தர் பாரதிதாசன்தான்”.

சுயமரியாதை எல்லையில் பயணித்த முருகு சுப்ரமணியன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவைப் பற்றி எல்லாம் அதிகம் தெரிந்து தனித்தமிழ் பற்றாளர் மறைமலை அடிகளார் போன்றோடனும் நெருங்கிப்பழகி சமூக- மொழித் தாக்கங்களை மனதில் அதிகம் நிலை நிறுத்தினார்.

முருகு சுப்பிரமணியன் யார் எதை சொன்னாலும் பொறுமையாகவும் நிதானமாகவும் கேட்டு உள்வாங்கிய பின்னர் கருத்து சொல்லும் பண்புடையவராக இருந்தார்;

1964-இல் மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்ற பேரவை அமைத்த காலத்தில், மணி மன்ற நடவடிக்கையை முன்னெடுக்கவும் தேசிய அளவில் வளரவும் முறுகு சுப்பிரமணியன் தமிழ் நேசன் நாளிதழ்வழி ஒத்துழைப்பு வழங்கினார்; இதற்கெல்லாம் காரணம், அவர் சிங்கப்பூரில் இருந்த காலத்தில் கோ சாரங்கபாணியிடம் பெற்ற தமிழ் உணர்வும் இன உணர்வும்தான் என்று குமரன் கூறினார்.

1960 ஆம் ஆண்டுகளில் கல்விக் கொள்கை அறிவிக்கப்பட்ட நேரத்தில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக அதிகம் பாடுபட்டவர் முருகு சுப்ரமணியன். அந்த வகையில் அவருடன் மணிமன்றத்தின் சார்பில் துணைநின்ற தான், சங்கநாதம் க. கிருஷ்ணசாமி, பாதாசன் போன்றோர் எல்லாம் முருகு சுப்பிரமணியன் எடுத்த முயற்சிக்கு துணை நின்றோம்; அதைப்போல தமிழ் பள்ளி வளர்ச்சிக்காகவும் நிதி திரட்டினார் அவர்;

சிக்கந்தர் பாட்ஷா என்ற அன்பர் முதல் முறையாக நிதி வழங்கி அந்த நிதியத்தை தொடக்கி வைத்தார்; அந்த அமைப்புக்கு செயலாளராக இருந்தவர் வழக்கறிஞர் விஜயேந்திரன்.

தன் பேனா முனையால் லட்சக்கணக்கான வெள்ளியைத் திரட்டி தமிழ் பள்ளிகளுக்கு உதவியவர் முருகு சுப்ரமணியன்.

அப்படிப்பட்ட நல்ல தமிழருக்கு விழா எடுத்திருக்கின்ற என் அன்பிற்குரிய இளவல், கண்ணதாசன் அறவாரியத் தலைவர் சரவணனனை மிகவும் பாராட்டுகிறேன் என்றெல்லாம் 60 ஆண்டு நினைவுகளை காட்சிப்படுத்தினார் குமரன்.

முருகு சுப்பிரமணியன் வாழ்ந்த காலத்தில் சரவணன் பிறந்திருக்க மாட்டார்; பிறந்திருந்தாலும் பள்ளி மாணவராக இருந்திருப்பார்; இருந்த பொழுதிலும் முருகு சுப்பிரமணியனின் சேவையையும் தமிழ்த் தொண்டையும் படித்து தெரிந்திருக்கிறார். குறிப்பாக, கடந்த ஆண்டு நடைபெற்ற முருகு சுப்பிரமணியன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டபொழுது அவருக்காக செய்த ஏற்பாடு நிறைவு இல்லை என்பதாகக் கருதி, இந்த ஆண்டு அவர் பிறந்த நாளில் மற்றொரு விழாவை ஏற்பாடு செய்து அவரை நினைவுகூரும் விதமாக நூலையும் வெளியீடு செய்திருக்கிறார் சரவணன் என்று குமரன் தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை