Monday, May 25, 2026

இந்திய தலைவர்களைப் பிரித்தாள அன்வார் மேற்கொள்ளும் சதி அரசியல்!

நம்பிக்கைக் கூட்டணியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பி கே ஆர் கட்சியினராக இருந்தாலும் இந்தியத் தலைவர்களை பிரித்தாள்வதற்கான வேலையை பிரதமர் அன்வார் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்.ஏ.பி. கெடா மாநிலத் தலைவர் விவேகானந்தன் அம்மாசி தெரிவித்துள்ளார்.

தவிர, மலேசிய இந்தியர் சமூக பொருளாதார உருமாற்றப் பிரிவு- மித்ராவை சீர்குலைக்கவும் அவர் எண்ணம் கொண்டுள்ளார்.

மித்ராவை நிருவகிப்பதற்காக தொடக்கத்தில் ரமணன் தலைமையில் பல கட்சி நிர்வாகக் குழுவை நியமித்தார்; அடுத்து, துணை
அமைச்சர் சரசுவதி கொஞ்ச காலத்திற்கு தலைகாட்டினார்; பின்னர் அப்படியே எடுத்து பத்து எம்பி பிரபாகரனிடம் கொடுத்து, அவரை முழு பொறுப்பாளராக நியமித்தார் அன்வார்; இப்பொழுது அதை வாரியெடுத்து எவ்வித வெளிப்படை தன்மையும் இல்லாமல் மீண்டும் ரமணனிடம் கொடுத்திருக்கிறார்.

பதவி மாற்றம் இடம்பெறும் ஒவ்வொரு முறையும் பி கே ஆர் மற்றும் ஜசெக கட்சிகளைச் சேர்ந்த இந்திய தலைவர்களிடையே அவநம்பிக்கையும் ஒற்றுமை இன்மையும் ஏற்படுத்தப்படுகின்றன.

இவ்வாறு குழப்பத்தையும் நிலையற்ற தன்மையையும் ஏற்படுத்தி மித்ரா நிருவாகத்தை சீர்குலைத்து, அதற்கான பழியை இந்திய தலைவர்கள்மீது சுமத்தி, தான் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார் அன்வார்.

அன்வாரின் இந்தத் திட்டமிடல் எளிதாக புரிந்து கொள்ளக்கூடியது; இந்திய தலைவர்களிடையே ஒற்றுமை இல்லை; அவர்கள் திறமையாக செயல்படாதவர்கள் என்ற கட்டமைப்பை ஏற்படுத்தி இந்தியர்களின் விரலை எடுத்து அவர்களின் கண்ணையேக் குத்தும் வேலையை அன்வார் மேற்கொண்டு வருகிறார்.

இந்திய சமுதாயம் மீட்சிபெற வேண்டும் என்றோ மித்ரா சிறப்பாக செயல்பட கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்ற எண்ணமோ அன்வாருக்கு கடுகளவும் இல்லாததால் மித்ராவை வெற்றுக் கூடாரமாக்கி, அதேவேளை அதன்மூலம் அரசியல் அணுகூலம் அடையவும் அன்வார் கங்கணம் கொண்டுள்ளார்.

இது தலைமைத்துவமே அல்ல; நிர்வாகத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் சீர் குலைப்பு நடவடிக்கை ஆகும்.

இவை அனைத்தையும் மலேசிய இந்திய சமுதாயம் உற்று நோக்க வேண்டும். மித்ராவின் சீர்குலைவிற்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் காரணம் அல்லர்; அவர்களைப் பிரித்தாளும் பிரதமரே முழு காரணம் என்று சரித்திர சாதனை இயக்கம் ஹிண்ட்ராஃப் அமைப்பின் கெடா மாநில தலைவருமான அ. விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை