
மலேசிய தேசிய அரசியல் நாளுக்கு நாள் புதுப்பாங்கை எட்டிவருகிற நிலையில், பதினாறாவது பொதுத் தேர்தல் நெருங்கநெருங்க இந்த நிலை இன்னும் வேகமடைகிறது.

மேநாள் பிரதமர்களான துன் டாக்டர் மகாதீர் முகமது, தான்ஸ்ரீ முகைதீன் யாசின் ஆகிய இருவரும் முன்னாள் அமைச்சர் பொன். வேதமூர்த்தியின் இல்லத்திற்கு தீபாவளி திருநாள் தொடர்பில் அடுத்தடுத்து வருகை மேற்கொண்டது, அரசியல் எல்லையைச் சார்ந்தோரின் புருவங்களை உயர்த்தி உள்ளது.

இரு முன்னாள் பிரதமர்களும் ஏறக்குறைய மூன்றே முக்கால் மணி நேரத்தை பொன். வேதமூர்த்தியின் இல்லத்தில் செலவிட்டது குறிப்பிடத்தக்கது;

குறிப்பாக நாட்டின் எட்டாவது பிரதமர் முகைதீன் யாசின், ஏறக்குறைய இரண்டே கால் மணி நேரத்தை பொன். வேதமூர்த்தி இல்லத்தில் செலவிட்டது இன்னும் குறிப்பிடத்தக்கது.

தேசிய ஒருமைப்பாடு, சமய-சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை இந்தத் தலைவர்கள் சந்தித்துக் கொண்டது வெளிப்படுத்தினாலும் இதில் ஆழமான அரசியல் உள்ளீடு இருக்கத்தான் செய்கிறது.

பண்டிகைக் காலத்தில் அரசியல் தலைவர்கள் இனம் கடந்து, மொழி கடந்து, சமயம் கடந்து சந்தித்துக் கொள்வதில் வியப்பேதும் இல்லைதான்;

ஆனாலும் ‘மடாணி’ முழக்கத்துடன் ஒற்றுமை அரசாங்கத்தை வழிநடத்துகின்ற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் நேரெதிர் அரசியல் முகாமில் இருக்கின்ற ஒரு முதுபெரும் தலைவரும் இன்னொரு மூத்த தலைவரும் இந்திய சமுதாயம் சார்ந்த இன்னொரு அரசியல் கட்சியான மலேசிய முன்னேற்ற கட்சி-எம்.ஏ.பி. தலைவரும் மலேசிய இந்திய சமுதாயத்தின் நாளைய நம்பிக்கை நட்சத்திரமுமான பொன். வேதமூர்த்தியின் இல்லத்தில் சந்தித்து வெகுநீண்ட நேரம் பல்வேறு அரசியல் சூழல் குறித்து தகவல் பரிமாறிக் கொண்டிருப்பதாக வரும் தகவல் நம் கவனத்தை பதினாறாவது பொதுத் தேர்தலை நோக்கியும் அதையடுத்து அமைய இருக்கும் புத்தரசாங்கத்தைப் பற்றியும் இன்னும் குறிப்பாக நாட்டின் அடுத்த பிரதமரைப் பற்றி நாமெல்லாம் ஊகிக்க வழிவகுக்கிறது.


