Saturday, April 18, 2026

பள்ளிகளில் கட்டுழுங்கைப் பேணுவோம்-தான்ஸ்ரீ குமரன்

கோலாலம்பூர் அக்டோபர் 23:
பள்ளிகளில் நிகழும் கட்டொழுங்கு சிக்கல் தொடர்பாக
நாளிதழ்களில் அடிக்கடி வெளிவரும் தகவல் தமக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுப்பதாக கல்வியாளரும் மூத்த அரசியல்வாதியுமான தான்ஶ்ரீ க.குமரன் தெரிவித்துள்ளார்.

தன் இரண்டு பெயரப் பிள்ளைகள் பிரச்சினைக்குரிய பண்டார் உத்தாமா பள்ளியில் படித்ததாக குறிப்பிட்ட அவர், பொதுவாக பள்ளிகளில் நடைபெறும் கட்டொழுங்கு மீறிய செயல்கள், பள்ளிகளின் நற்பெயர் கருதி பள்ளி வளாகத்திலேயே தீர்த்துவைக்கப்படுகின்றன.

நாட்டின் நற்குடிமக்களை வார்த்தெடுக்கும் மையங்களாக பள்ளிகள் திகழ வேண்டும். அத்தகைய பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நீதி மன்ற படிகளில் ஏறிக்கொண்டும் சிறைச்சாலைக் கம்பிகளை எண்ணிக் கொண்டும் இருப்பதைக் காண கண் கலங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அரசனுக்கு முன்னறிந்து கூறும் ஆற்றல் படைத்தவர்களாக அன்றைய அமைச்சர்கள் இருந்தனர். இந்த நவீன உலகத்தில் அமைச்சரோ, துணை அமைச்சரோ ‘முன்னறிந்து கூறும்’ முழுப் பொறுப்பினை ஏற்க முடியாவிட்டாலும் நூற்றுக் கணக்கணக்கான- பல்வேறு நிலையிலான ஆசிரியர்களையும் அலுவலர்களையும் கொண்டுள்ள கல்வி அமைச்சகம் இது போன்ற பொறுப்புகளை ஏற்கத்தான் வேண்டும்”.

பள்ளிகளுக்குரிய கட்டொழுங்கு, பாதுகாப்பு, மனநல சோதனை, மறைகாணி-CCTV சேவை, கண்காணிப்பு அதிகாரிகள்(Wardens) நியமனம் போன்றவற்றிற்கு நிதி ஒதுக்கப் பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்திருப்பதை வரவேற்ற தான்ஸ்ரீ , முதல் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பு வரை பட்ட மாணவர்களுக்கு, நலத்துறை அமைச்சுடன் இணைந்து நடத்த விருக்கும் உளவியல் திட்டம் காலத்திற்கு ஏற்ற திட்டமென்று தான்ஶ்ரீ குமரன் பாராட்டி உள்ளார்.

“பள்ளிகளில் கட்டொழுங்கு பண்பு நலனை மேம்படுத்தும் திட்டங்களில் மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர் சங்கத்தினர் குறித்து அமைச்சின் அறிக்கையில் ஒன்றும் குறிப்பிடாதது வருத்தமளிக்கிறது”.

பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், மாணவர்களின் கல்வி நலனில் மட்டும் கவனம் செலுத்தாமல், பள்ளிக் கல்வியின்போது, முழு வளர்ச்சிபெற்ற மாணவனாக உருவாக ஆசிரியர்களுடன் இணைந்து பெற்றோர்களும் செயல்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை, புறநகர் மேம்பாட்டு துறைகளில் துணை அமைச்சராக கடமை ஆற்றிய வருமான தான்ஸ்ரீ க. குமரன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

ஒரு மாணவன் ஆரம்பள்ளியில் ஆறு ஆண்டுகள், இடைநிலைப் பள்ளியில் ஐந்து ஆண்டுகள் என்று பதினொரு ஆண்டுகளுக்கு கல்வி பெறுகிறான்; சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பண்டார் உத்தாமா பள்ளி மாணவன். ஏழு ஆண்டுகள் பள்ளியில் படித்திருக்கிறான். ஏழு ஆண்டுகளில் எத்தனையோ ஆசிரியரிடம் பயின்றிருப்பான். எந்த ஆசியரும் அவனிடம் எத்தகைய மாறுதலையும் காணவில்லையா?.

200 முறை கத்தியால் குத்தக்கூடிய வன்மம், துணிச்சல், பதின்மூன்று வயதில் அவனுக்கு எப்படி ஏற்பட்டது?.

பி-40 குடும்ப வறுமையா? வாழ்விட சூழ்நிலையா? சிதைந்த குடும்பமா? தனித்துவிடப்பட்ட தாயின் பிள்ளையா என்று பல கோணங்களில் ஆராய வேண்டும். பண்டார் உத்தாமா பள்ளியில் நடந்திருப்பது ஒரு பள்ளிக்கூட பிரச்சினையல்ல; ஒரு மாணவனின் பிரச்சினையல்ல; அவன் சார்ந்திருக்கும் சமூகத்தின் பிரச்சினையுமல்ல; உண்மையில், இது, நம் நாட்டுப் பிரச்சினை என்பதை கல்வி அமைச்சு பொறுப்பேற்றுக் கொண்டு நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டிற்குரியது.

ஆசிரியர் எண்ணிக்கைக் கூட்டுவது, உபகரணங்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது ஒருபுறமிருந்தாலும் மாணவர்களின் மனநலனில் குறிப்பாக மனித உறவில், குடும்ப உறவில், அன்பில், நல்லிணக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், பெற்றொரைத் தழுவிய பள்ளிக்கூடம்; சமுதாயத்தைத் தழுவிய பள்ளிக்கூடம் என்ற உணர்வோடு செயல்படும் திட்டங்களைக் கொண்டும் நன்னெறிக் கல்விக்கு முன்னுரிமை கொடுத்தும் நற்குடிமக்களை உருவாக்கும் மையங்களாக பள்ளிக்கூடங்கள் செயல்படவேண்டும் என்று இந்தச் சிக்கல் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தான்ஸ்ரீ குமரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை