
கெடாவில் சூராவ், பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி சத்தத்திற்கான புதிய விதிமுறைகளை மஇகா வரவேற்கிறது என்று மஇகா தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ஏகே ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
கெடா மாநில இஸ்லாமிய நலத் துறையின் பள்ளிவாசல், சூராவ் மேலாண்மைப் பிரிவு புதிய வழிக்காட்டலை வெளியிட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல்கள், சூராவ்களில் ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதலை அப் பிரிவு வெளியிட்டுள்ளது.
சட்ட விதிமுறைகள், சமூகத் தேவைகளுக்கு இணங்க பள்ளி வாசல்கள், சூராவ் ஒலிபெருக்கிகளின் சத்தமும் அதன் பயன்பாடும் கட்டுப் படுத்தப்பட்டுள்ளன.
இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியுள்ளகுடியிருப்பாளர்களுக்கு தொந்தரவு ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் இப்புதிய விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன.

மேலும் இஸ்லாமிய போதனைகள் ஞானத்துடன் தெரிவிக்கப்பட வேண்டும்;
தவிர, சுற்றியுள்ள சமூகத்திற்கு இடையூறு விளைவிக்காத அளவிற்கு
ஒலி அளவு சீராக இருக்க வேண்டும்.
நேரம், இடத்திற்கு ஏற்ப அனுமதிக்கப் பட்ட அளவைவிட அதிகமாக இருக்கக் கூடாது;
வெளிப்புற ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது தொழுகைக்கான அழைப்பு போன்ற முதன்மை நோக்கங்களுக்காக மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
பொது சொற்பொழிவுகளுக்கு அல்ல என அவ்வறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.வரும் நவம்பர் 1ஆம் நாள் முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரவுள்ளது.
கெடா மாநில இஸ்லாமிய நலத் துறையின் பள்ளிவாசல், சூராவ் மேலாண்மைப் பிரிவின் இந்த வழிகாட்டுதலை மஇகா முழுமையாக மதிக்கிறது.
அதேவேளையில் மாநிலத்தில் வாழும் மற்ற இன மக்களையும் கருத்தில் கொண்டு இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஒன்றாக வாழும் பிற இன மக்களின் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மஇகா கருதுகிறது.
பல்லின மக்களைக் கொண்டுள்ள மலேசிய கூட்டு சமுதாயத்தில் அனைவரும் அடுத்தவரின் இனம், மதம், கலை, கலாச்சாரத்திற்கு உரிய மதிப்பு வழங்க வேண்டும்.
இவ்வேளையில் கெடா மாநில அரசுக்கும் கெடா மாநில இஸ்லாமிய நலத் துறையின் பள்ளிவாசல், சூராவ் மேலாண்மைப் பிரிவுக்கும் மஇகா நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது என்று டத்தோ ராமலிங்கம், இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


