Thursday, April 23, 2026

சமுதாயம் மேம்பாடுகாண தலைவர்கள் ஒருமித்து சிந்திக்க வேண்டும்! -டாக்டர் குணராஜ்

அரசியல், ஆன்மீகம், கல்வி மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் மலேசிய இந்திய சமுதாயம் சீரான வளர்ச்சியைக் காண வேண்டும் என்றால் நம் சமுதாயத் தலைவர்கள் ஒருமித்து ஒன்றிணைந்து சிந்திக்கவும் செயல்படவும் முன்வர வேண்டும்; மாறாக தொடர்ந்து கருத்து வேறுபாடுகளை முன்வைத்து காலமெல்லாம் எதிரெதிர் அரசியல் புரிவதில் எந்தப் பயனும் இல்லை என்று பி கே ஆர் தலைவர்களில் ஒருவரான டாக்டர் ஜி குணராஜ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான மடாணி அரசாங்கத்தில் மலேசியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் எவ்வித பாகுபாடும் இன்றி எல்லா வாய்ப்பும் உள்ளன. இதன் தொடர்பில் எல்லா அமைச்சுகளுக்கும் பிரதமர் அறிவுறுத்தி உள்ளார்.

சமூக நல உதவி, விளையாட்டு, தொடக்கக்கல்வி உள்ளிட்ட எல்லா வகையான உதவிகளுக்கும் அந்தந்த துறையை நாடினால் நிச்சயம் உதவி கிடைக்கும்.

இதையெல்லாம் எண்ணிப் பாராமல் அனைத்து தரப்பினரும் அனைத்து அரசு சாரா அமைப்புகளும் அனைத்து தலைவர்களும் மித்ராவையே மையம் கொண்டு சிந்திக்கவும் செயல்படவும் முனைக்கின்றனர்.

ஒரு தரப்பினருக்கு உதவி கிடைத்தால் இன்னொரு தரப்பினர் ஏற்றுக் கொள்வதில்லை;

அதேவேளை அவர்களுக்கும் நிதி ஆதாரம் கிடைத்திட எத்தனையோ மார்க்கம் இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் சிந்திக்காமல் முனைப்பு காட்டாமல் மித்ரா மானியத்தை மட்டும் கருத்தில் கொண்டு காலமெல்லாம் கருத்து மாறுபாட்டோடும் விமர்சனத்தோடும் நம் தலைவர்களும் மக்களும் வாழ்கின்றனர்.

சிறுபான்மை சமுதாயமான மலேசிய இந்தியர்கள், காலமெல்லாம் தங்களுக்குள்ளேயே பிளவுபட்டு பிரிவினை எண்ணத்தோடு தொட்டதற்கெல்லாம் விமர்சித்து, மாறுபட்ட எண்ணத்தோடு வாழ்க்கையைத் தொடர்வதை முதற்கண் நிறுத்த வேண்டும்.

அனைத்து மட்டத்திலும் விமர்சனம்; எதை எடுத்தாலும் அறிக்கைப் போர்
என்பதை விடுத்து, சமுதாயத்தின் பொதுநலன் கருதி பொது சிந்தனையை யாரும் முன்வைப்பதில்லை.

உதாரணத்திற்கு மித்ரா நிதியைக் கொண்டு நாட்டின் மையப்பகுதியில் ஓரிடத்தை வாங்கி அதில் ஒரு பொது மண்டபத்தைக் கட்டி அதை நிர்வகிக்க இந்திய சமுதாயம் சார்ந்த அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஒரு நிர்வாகக் குழுவை உருவாக்கி அதை காலமெல்லாம் வழி நடத்தலாம்.

இப்படி எத்தனையோ வகையில் பொதுநலத்தோடு சிந்திப்பதை விடுத்து அந்த நிதியை வாங்கவும் கிடைத்தவர்கள் மீது கிடைக்காத தரப்பினர் விமர்சனம் செய்வதும் தொடர்ந்தால் இந்தியர்கள் ஒற்றுமை இல்லாத சமூகத்தினர் என்ற தாக்கம் பரவலாக ஏற்படும்.

இவற்றையெல்லாம் விடுத்து பொது நன்மை கருதி பொதுவாக செயல்பட்டால் நம் சமுதாயம் இன்னும் வலிமைபெறும்.

ஒற்றுமை ஒன்றுதான் அதற்கான ஒரேவழி என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான ஜி. குணராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை