
மலேசிய இந்திய சமுதாயம் மீட்சிபெற வேண்டுமென்றால் கல்வி ஒன்றுதான் ஒரேவழி யென்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தலைவரும் சரித்திர சாதனை இயக்கம் ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன்.வேதமூர்த்தி மாணவர்களையும் இளைஞர்களையும் சந்திக்கும் பொழுதெல்லாம் மறக்காமல் வலியுறுத்தி வருவகிறார். இதை உணர்ந்த நம் மாணவர்களும் முடிந்தவரை முயன்று படித்து எஸ்பிஎம் தேர்வில் அனைத்துப்பாடங்களிலும் ‘ஏ’ நிலையில் தேர்ச்சி பெறுவதுடன் அல்லாமல், எஸ்டிபிஎம் அல்லது மெட்ரிகுலேசன் கல்வியிலும் 4.0 புள்ளி அன்ற அளவில் முழு தேர்ச்சி பெற்றாலும்கூட, அவர்களின் கல்வி ஆற்றலை மதித்து, அவர்கள் விரும்பும் துறையில் மேற்கல்வியைத் தொடர வாய்ப்பு கிடைப்பதில்லை.
இப்படிப்பட்ட சிறந்த மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வென்னும் தேவை யில்லாத தடைக்கல் எதற்கு என்று எம்ஏபி மற்றும் ஹிண்ட்ராஃப் கெடா மாநிலத் தலைவர் விவேகானந்தன் அம்மாசி வினாத் தொடுத்துள்ளார்.
நல்ல அடைவுநிலையுடன் தேர்ச்சிபெற்ற மாணவர்கள் விரும்பும் துறையை வழங்காமல் அவர்களைப் புறக்கணிப்பது ஒருபுறம் இருக்க, மேலும் அவர்களை நுழைவுத் தேர்வுக்கு உட்படுத்தி தரம்பிரித்தல் என்னும் பெயரில் வெவ்வேறு பிரிவுகளுக்கு மாற்றிவிடும் உத்தியகத்தான் கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக், இந்த நுழைவுத் தேர்வை எஸ்பிஎம் மாணவர்கள்மீது திணிக்கிறார் என்று விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.
விரும்பிய துறை கிடைக்காதபட்சத்தில், ஏதோ ஓரளவு வசதி உள்ள பெற்றோர் நகை-நட்டுகளை அடகு வைத்தும் வீட்டுப் பத்திரத்தை அடைமானம் வைத்தோ அல்லது விற்றோ வெளிநாடுகளில் படிக்க தங்களின் பிள்ளைகளை அனுப்புகின்றனர்.
அந்த வாய்ப்பு இல்லாத சிறந்த மாணவர்கள், கல்வி அமைச்சர் விரித்துள்ள நுழைவுத் தேர்வென்னும் கண்ணியில் சிக்கி, வேறு வழியில்லாமல் கிடைத்தத் துறையில் அரை மனதுடன் கல்வியைத் தொடர்கின்றனர்.
உண்மைநிலை இவ்வாறிருக்க, நுழைவுத் தேர்வு மூலம் பலவகையான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாக கல்வி அமைச்சர் தம்பட்டம் அடித்துக் கொள்வது, உண்மையை மறைக்கும் வேலையென்று அ.விவேகானந்தன் கல்வி அமைச்சின் பிற்போக்குத் தனத்திற்கும் ஏமாற்று வேலைக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


