
ஜகார்த்தா: கிழக்கு இந்தோனேசியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க டெர்னேட் தீவு அருகே இன்று அதிகாலை 7.4 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலுக்கா கடலில் 35 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த அதிர்வால் ஆழிப் பேரலை – சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள இந்தோனேசிய வானிலை ஆய்வு நிறுவனம், ஹல்மஹேரா பகுதியில் 0.3 மீட்டர் உயரமும் பிட்டுங் பகுதியில் 0.2 மீட்டர் உயரமும் கொண்ட சுனாமி அலைகள் எழுந்துள்ளதாக பதிவு செய்துள்ளது.

இடிபாடுகள் காரணமாக ஒருவர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) மற்றும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், 1,000 கி.மீ. சுற்றளவில் ஆபத்தான சுனாமி அலைகள் உருவாகக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளன. இதனால் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் கடலோர பகுதிகள் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன.


