Tuesday, February 17, 2026

சிம்பன்சி குரங்குகளை அடுத்து கருவியை பயன்படுத்தும் விலங்கு பசு!

மனிதர்களைத் தவிர விலங்குகளைப் பொறுத்தவரை சிம்பன்சி குரங்குகள் மட்டுமே கருவிகளைப் பயன்படுத்தியதற்கான பதிவுகள் இதுவரை உள்ளன.

இப்பொழுது பசுக்களும் தங்கள் தேவைக்காக ஏதோ ஒரு வகையில் கருவிகளைப் பயன்படுத்தும் விதத்தைக் கண்டு அறிவியல் உலகமே வியப்பில் ஆழ்ந்துள்ளது

ஏறக்குறைய 10,000 ஆண்டுகளாக பசுக்கள் மனிதர்களுடன் இணைந்து வாழ்ந்து வந்தாலும் அவை இத்தகைய கருவிகளைப் பயன்படுத்துவது குறித்துப் பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறை என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

இந்த அதிசயம் நடந்துள்ள நாடு ஆஸ்திரியா; அந்த நாட்டில் உள்ள ஒரு பசுவின் நடவடிக்கைகளைக் அவதானித்தபின் கால்நடைகளின் திறன் குறித்து அறிவியல் உலகம் மீண்டும் சிந்திக்கத் தொடங்கியுள்ளது..

வெரோனிகா என்று பெயரிடப்பட்ட அந்தப் பசு, தன்னைச் சுற்றியுள்ள சில பொருட்களைப் பயன்படுத்தும் விதத்தையும், அது கொண்டுள்ள திறனையும் கண்டு அறிவியலாளர்கள் வியப்பின் எல்லைக்கே சென்றுள்ளனர்.

இதுவரை அறிவியல் மேதையர் நினைத்-திருந்ததைவிட பசுக்களுக்கு அதிக ஆற்றலும் சமயோசித குணமும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

ஆஸ்திரியா நாட்டில், ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்த வெரோனிகா என்ற பசு, தான் வாழும் தொழுவத்தில் கிடைக்கும் குச்சி, வாறுகோல் போன்றவற்றைப் பயன்படுத்தி தன் முதுகைத் தானே சொரிந்து கொள்கிறது.

அந்தப் பசுவை அவர்கள் உற்றுநோக்கிய போது, அது ஒரே கருவியை வெவ்வேறு வேலைகளுக்காக வெவ்வேறு வழிகளில் பயன்படுத்துவது தெரியவந்தது.

தன் உடலின் இடப் பக்கத்திலிருந்து ஒரு விதமாகவும், வலப் பக்கத்திலிருந்து வேறு விதமாகவும் அந்தப் பொருளைப் பயன்படுத்துகிறது அந்த சாமர்த்திய பசு.

இந்தப் பசு தனது முதுகைத் தேய்க்க விரும்பும் போது நீண்ட தூரிகையின் ஒரு பகுதியையும் வயிற்றுப் பகுதியைத் தேய்க்க விரும்பும் போது அந்தத் தூரிகையின் மென்மையான பகுதியையும் பயன் படுத்துவதை ஆராய்ச்சியாளர்கள் கவனித்து வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

விலங்கு உலகில் ஆங்காங்கே இதுபோன்ற விஷயங்கள் காணப்பட்டாலும், பசுக்கள் போன்ற விலங்குகள் இதுபோன்று செய்ததாக உலக அளவில் இதுவரை எங்கனுமே அறிந்ததில்லை; அதற்கான காட்சிப் பதிவும் இல்லை.

வியன்னா கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் அந்தோனியோ இது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.

“பசுக்கள் இது போன்ற கருவிகளைப் பயன்படுத்தும் என்றோ, அல்லது வெவ்வேறு வேலைகளுக்காக அவற்றை வெவ்வேறு விதமாகப் பயன்படுத்தும் என்றோ இதுவரை எவரும் அறிந்ததில்லை” .

“இத்தகைய செயல்கள் சிம்பன்சி குரங்குகளிடம் மட்டுமே பதிவாகியுள்ளன” என்றார்.

விலங்குகளைப் பொறுத்தவரை சிம்பன்சி குரங்குகள் மட்டுமே இவ்வளவு விரிவான முறையில் கருவிகளைப் பயன்படுத்தி-யதற்கான பதிவுகள் உள்ளன.

உண்மையில், நாம் நினைப்பதை விட பசு மாடுகள் புத்திசாலித்தனம் கொண்டவை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

வெரோனிகா மட்டுமல்ல, வாய்ப்பு கிடைத்தால் மற்ற பசுக்களும் காளைகளும் இது போன்று கருவிகளைப் பயன்படுத்தக் கூடும்.

வெரோனிகாவை வளர்க்கும் விவசாயி விட்ஜர் வைசல், “தன் பசு வெளிப்படுத்தும் இந்த அசாதாரண திறமை மூலம், இயற்கை-யின் மதிப்பை மக்கள் அங்கீகரிக்க வேண்டும்” என்று கூறுகிறார்.

தகவல்: தமிழோசை, பிபிசி.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை