
இந்த மாதம் இருபத்தி மூன்றாம் நாள் தமிழ்நாட்டு சட்டமன்றத்திற்கு நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் சிதம்பரம் சட்ட மன்றத் தொகுதி வாக்காளர்கள் ஒரு புதுமையை காண்கின்றனர்.
பாரம்பரியமாக வன்னியர் மற்றும் தலித் சமூக வாக்குகள் செறிந்து காணப்படும் இந்தத் தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.ஏ. பாண்டியன் வெற்றி பெற்றார்.
தற்போது திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் வேதாரண்யம் தோப்புத்துரை தமிமுன் அன்சாரி களம் இறங்குவதால், சிறுபான்மையினரின் வாக்குகள் திமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கி இணைந்து ஒரு வலிமையான சூழலை தமிமுன் அன்சாரிக்கு ஏற்படுத்துகிறது என்று கருத இடம் இருக்கிறது

வன்னியர் வாக்கு வலிமை ஏறக்குறைய 38%; பட்டியல் இனத்தவர் சுமார் 29%;
மீனவர் சமுதாய வாக்குகள் ஏறக்குறைய 9%;
அதைப்போல இஸ்லாமியர் வாக்கு வீதம் 9%;
இதர பிற்படுத்தப்பட்டோர் ஏறக்குறைய 16 விழுக்காட்டினர் என்று அளவில் வாக்காளர்கள் பதிவு பெற்றுள்ளனர்.
மறுமலர்ச்சித் ஜனநாயகக் கட்சி தலைவரான தமிமுன் அன்சாரி ஏற்கெனவே தேர்தல் களம் கண்டு வென்றவர்; ஜெயலலிதா காலத்தில் அவர் தலைமையிலான கூட்டணியில் இணைந்து நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் வென்றவர் இந்த தோப்புத்துறை அரசியல் தலைவர்.
இந்த சூழலில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள்-(விசிக), பொது உடைமை அரசியல் இயக்கங்களான கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய பெருங்கூட்டணியின் ஆதரவு அன்சாரிக்கு மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, திருமாவளவனின் கோட்டையான கடலூர் மாவட்டத்தில் விசிக-வின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிமுன் அன்சாரி இயல்பாகவே தரவுடன் கணீர்க் குரலுடன் பேச்சாற்றல் மிக்கவர்; அவரின் அனல் பறக்கும் பேச்சும் சட்ட மன்றத்தில் அவர் ஆற்றிய ஆக்கபூர்வமான பணியும் இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்கள் மத்தியில் அவருக்கு ஒரு நல்ல பிம்பத்தை உருவாக்கியுள்ளது என்பது திண்ணம்.
சிதம்பரம் பட்டணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள முஸ்லிம், கிறித்துவ சமுதாய வாக்குகளை முழுமையாக அறுவடை செய்து, தமிமுன் அன்சாரி தன் வெற்றிக் கொடியை நாட்ட வாய்ப்புண்டு.
தவிர இந்த சட்டமன்றத் தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக கடந்த பத்து ஆண்டுகாலமாக இருந்தவருக்கு எதிரான மனநிலை, இயல்பாக தொகுதி வாக்காளர்களிடையே எழுந்துள்ளது
தொகுதி மக்கள் சார்ந்த அடிப்படைப் பிரச்சனைகளான வடிகால் வசதி, குண்டும் குழியுமான சாலைகள் சீரமைக்கப்படாதது போன்ற காரணங்களால் அதிமுக-வின் பாண்டியன்மீது அதிருப்தி நிலவுவதும் அன்சாரிக்கு சாதகமாக இருக்கிறது.
அதேவேளை, அன்சாரி, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால், ‘வெளி வேட்பாளர்’ என்னுமா விமர்சனத்தை எதிர்த் தரப்பினர் முன்வைக்கக் கூடிய பிரச்சாரம் தமிமுன் அன்சாரிக்கு பின்னடைவை ஏற்படுத்தக் கூடும்

இத்தொகுதியில் மிக வலுவாக உள்ள வன்னியர் சமூக வாக்குகளைப் பெறுவதில் சவால் நிலவலாம்.
அதிமுக மற்றும் பாமக கூட்டணி அமைத்துப் போட்டியிடும் சூழலில், சமூக ரீதியான வாக்குகள் பிரியும் வாய்ப்பும் உள்ளது.
கலைக்கப்பட்ட சட்டமன்றத்தில் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அதிமுகவின் பாண்டியன் மீண்டும் போட்டியிடும் சூழ்நிலையில், அவருக்கும் அன்சாரிக்கும் இடையே கடும் போட்டி நிலவலாம்; சவாலாகவும் இருக்கும்.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), நாம் தமிழர் கட்சி ஆகியவை பிரிக்கும் இளைஞர்களின் வாக்குகள் யாருடைய வெற்றியைப் பாதிக்கும் என்பது கணிக்க முடியாததாக உள்ளது.
விசிக தலைவர் திருமாவளவனை முன்னிறுத்தி, தலித் மற்றும் முஸ்லிம் சமூக வாக்குகளை ஒரு புள்ளியில் இணைப்பதில் தமிழ் முன் அன்சாரி வெற்றி கண்டால், தேர்தல் வெற்றியும் உறுதி.
திமுகவின் உள்ளூர் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து, அவர்களின் முழு ஒத்துழைப்பைப் பெறுவதும் மிக அவசியம்.
சிதம்பரத்தின் நீண்ட காலப் பிரச்சனைகளான விவசாயம் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் கோவில் நகரமான சிதம்பரத்தின் வளர்ச்சி – மேம்பாடு குறித்துத் தெளிவான வாக்குறுதிகளை முன்வைப்பதன் மூலம் ‘வெளிஆள்’ என்ற பிம்பத்தை உடைக்கலாம்.
மொத்தத்தில், தமிமுன் அன்சாரி,, சிதம்பரம் தொகுதியில் களம் காண்பது சவாலாக அமைந்தாலும் திராவிட மாடல் நல்லாட்சி-யின் பயனும் உதயசூரியன் சின்னமும், திமுக கூட்டணியின் வலுவான வாக்கு வங்கியும் அவருக்குச் சாதகமாவே உள்ளன.
உள்ளூர் மக்களின் உணர்வோடு ஒன்றிணைந்து களம் கண்டால் 2026-ல் சிதம்பரம் தில்லை நகரின் பிரதிநிதியாக தமிழ் முன் அன்சாரி சட்டமன்றத்திற்குச் செல்வது உறுதியாகலாம்.


