
நாட்டின் மையப் பகுதியான சிலாங்கூர் மாநிலத்தில் மிகவும் பழைமை வாய்ந்த இந்திய குடியிருப்புப் பகுதிபான பத்துமலை இந்தியன் செட்டில்மெண்ட் பகுதியில் வசிக்கின்ற 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஏறக்குறைய இரண்டாவது மூன்றாவது தலைமுறையை எட்டிவிட்ட இன்றைய சூழ்நிலையில் கடந்த ஓரிரு ஆண்டுகளாக பெரும் அல்லலுக்கும் நிம்மதி இன்மைக்கும் ஆட்பட்டு அல்லலுற்று வருகின்றனர்.
இங்கு சாலை விரிவாக்க பணியை மேற்கொள்ள இருப்பதாகவும் அதன் தொடர்பில் மந்திரி பெசார்(மாநில முதல்வர்) டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையிலான சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் இசைவு பெற்ற ஒரு மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் இந்தப் பகுதியில் மேம்பாட்டு பணிகள் இடம்பெற இருப்பதாகவும் அதனால் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உடைப்பட இருப்பதால் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் கேட்டு கோம்பாக் மாவட்ட நில அலுவலகத்தின் சார்பில் தொடர்ந்து நெருக்குதல் கொடுக்கப்பட்டு வந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ஆம் நாள் இந்த வீடுகள் உடைக்கப்பட இருப்பதாகவும் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் பத்து ஆராங் பகுதிக்கு இடம்பெயர்ந்து செல்ல வேண்டும் என்றும் நெருக்கடி கொடுக்கப்பட்டதுடன் இதன் தொடர்பில் கோம்பாக மாவட்ட நில அலுவலகத்தின் சார்பில் எச்சரிக்கை நோட்டீசும் அனுப்பப்பட்டன.
முன்னதாக இவ்வாண்டு தொடக்கத்தில் மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தலைவரும் சரித்திர சாதனை இயக்கம் ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன்.வேதமூர்த்தி, இந்தச் சிக்கல் குறித்து மந்திரி பெசாரருக்கு கடிதம் அனுப்பினார்.
நிலப் பட்டா உரிமையுடன் சொந்தமாக விடுகட்டி வாழும் குடும்பங்களின் வீடுகளை இப்படி உடைக்க முற்படுவது ஜனநாயக விரோதமானது என்றும் இதை மறுபரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட குடும்பங்கள் அங்கேயே நிலைத்திட மாநில அரசு அணுசரனையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அக்கடிதத்தில் பொன்.வேதமூர்த்தி வலியுறுத்தி இருந்தார்.
அப்படி இருந்தும், ஆகஸ்ட் 15-ஆம் நாள் சம்பந்தப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் உடைக்கப்படும் என்று எச்சரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்ட நிலையில், பாதிப்பிற்கு ஆளான குடும்பங்களின் தலைவர்கள் நிம்மதி இழந்து தவித்ததாக இந்த ‘பத்துமலை இந்தியன் செட்டல்மெண்ட்’ குடியிருப்போர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் சேரன் தெரிவித்தார்.

இதற்கிடையில் புத்ரா ஜெயா பிரதமர் அலுவலகத்திற்குமுன் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுடன் அணிதிரண்டு புகார் மனு கொடுத்ததாகவும் கடந்த நான்கு பொதுத் தேர்தல்களில் முதலில் மக்கள் கூட்டணி, பிறகு நம்பிக்கைக் கூட்டணி, குறிப்பாக மக்கள் நீதிக் கட்சி-பிகேஆர் வேட்பாளர்களை ஆதரித்து பத்துமலை சட்டமன்றத் தொகுதி, இத்தொகுதி உள்ளிட்ட கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து, அவர்களை வெற்றி வேட்பாளர்களாக உருவாக்கிவரும் இந்தியன் செண்ட்டல்மெண்ட் குடியிருப்பாளர்களுக்கு பிகேஆர் கட்சி செய்யும் நன்றிக் கடன் இதுதானா என்று இந்த குடும்பத்தினர் கேட்டு வருகின்றனர்.
தற்பொழுது, இந்த இரு தொகுதிகளிலுமே வென்று சட்டமன்ற & நாடாளுமன்ற உறுப்பினராகவும் மந்திரி பெசாராகவும் இருக்கும் அமிருடின் ஷாரி, பாரா முகமாக இருப்பதாக இந்தக் குடும்பத்தினர் மிகுந்த வேதனை தெரிவிப்பதாக சேரன் மேலும் தெரிவித்தார்.
பிரதமர் துறை அலுவலகத்தில் இந்திய சமுதாய பிரதிநிதியாக செயல்படும் அதிகாரி சண்முகம் மூக்கன், இந்தச் சிக்கல் தொடர்பில் சிலாங்கூர் மாநிலச் செயலாளர் முகமது ஹிடாயாத் முகமது சௌஃபிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அனுப்பிய கததத்தில் மலேசியத் தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவருமான சேரன் பிரதமர் அலுவலகத்தில் வழங்கிய கோரிக்கை மனுகுறித்து, உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டிருந்தார்.

இந்த நிலையில், குறிப்பிடப்பட்ட ஆகஸ்ட் 15-ஆம் நாள் வீடுகள் உடைக்கப்பட வில்லை என்னும் அதேவேளை இதன் தொடர்பில் எந்தக் கடிதமோ அல்லது தகவலோ தங்களுக்கு இதுவரை தெரிவிக்கப்படாததால் இந்தக் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கை கலக்கத்துடனும் நிச்சயமற்ற நிலையிலலும் தொடர்வதாக சேரன் தெரிவிக்கிறார்.
பத்து நாட்களுக்கு முன் கொண்டாடப்பட்ட தீபாவளிப் பண்டிகையைக் கூட இந்த மக்கள் கொண்டாடவில்லை; எந்த நேரத்தில் என்ன நோட்டீஸ் வரும்? எந்தச் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என்பது தெரியாததால், இப்பொழுதும் சம்பந்தப்பட்ட குடும்பங்களின் தலைவர்கள் கவலையுடன் இருப்பதாக க.சுரேஷ் என்னும் சேரன் மேலும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மூ. சண்முகம், பத்துமலை இந்தியன் செட்டல்மெண்ட் பகுதியில் நீண்ட காலமாக வாழும் மக்கள், கல்வி-வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்தையும் அந்தப் பகுதியைச் சுற்றி அமைத்துக் கொண்டுள்ள நிலையில், அதுவும் சொந்த நிலப் பட்டாவைக் கொண்டிருக்கும் அம்மக்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படாத வகையில் இருதரப்பு நலனும் காக்கப்படும் என்று தெரிவித்தார்.
அதேவேளை, “அனைத்துத் தரப்பினரும் சற்று அமைதி காக்க வேண்டும். காரணம், இது மாநில அரசு தொடர்பான விவகாரம் என்பதால், சிலாங்கூர் மந்திரி பெசார் மட்டுமே இதில் தீர்க்கமான முடிவெடுக்க முடியும்; ஆனாலும், பிரதமர் அலுவலகத்தின் சார்பில் அனைவருக்கும் பொதுவான தீர்வை எட்டும்படி வழிகாட்ட முடியும்”.
வாய்ப்பு கிடைக்கும்பொழுது, இந்தப் பிரச்சினையை பிரதமரின் கவனத்திற்கு நிச்சயம் கொண்டு செல்வேன் என்றும் மூக்கன் நம்பிக்கைத் தெரிவித்தார்.


