Sunday, May 31, 2026

ஜப்பானில் ஊர்வலத்துடன் பாரதியார் விழா!

-நக்கீரன்

கோலாலம்பூர், டிச.03:
ஜப்பானியத் தலைநகரம் தோக்கியோ மாநகரில் ஈரோட்டு மக்கள் சிந்தனைப் பேரவை, ஜப்பான் கிளை சார்பில் பாரதியார் 142-ஆவது பிறந்த நாள் விழாவும் உலக அறிவியல் நாள்-2024 நிகழ்ச்சியும் இரு தினங்களுக்குமுன் ஒருசேர மிகச் சிறப்பாக நடைபெற்றதாக கிளை ஒருங்கிணைப்பாளர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.

பாரதி வேடமணிந்த குழந்தைகள் பாரதியின் படத்தை ஏந்தி முன்னேவர, குழந்தைகள், பெரியவர்கள் எனச் சுமார் 30 பேர் பங்கேற்ற பாரதி ஊர்வலம், தோக்கியோ நகர வீதிகளில் நடமாடியோரின் உள்ளங்களில் யார் இந்த பாரதி என்ற ஆர்வத்தை எழுப்பியது. விழா அரங்கின் முகப்பில் காத்திருந்த சிறப்பு விருந்தினர்களிடம் படங்கள் தரப்பட்டு ஊர்வலம் நிறைவபெற்றது.

பொதுவுடைமை சிந்தனையாளரா, தமிழிலக்கியப் பற்றாளரா, நூல் வெளியீட்டாளர்களை அரவணைப்பவரா, இளந்தலைமுறையினர்தம் சிந்தையில் படிப்பார்வத்தை விதைப்பவரா, உலக அளவில் இலக்கியப் பேச்சாளர்களை மேடையேற்றுபவரா என எந்த வகையாலும் வரையறுக்க முடியாவண்ணம், இவை யாவும் ஒருங்கிணைந்த தமிழ் மகனாகத் திகழும் த. ஸ்டாலின் குணசேகரைனின் செம்மாந்த தலைமையில் பீடுநடை பயிலும் மக்கள் சிந்தனைப் பேரவை, தமிழகமெங்கும் தமிழிலக்கிய பேரார்வத்தை எழுப்பிவருகிறது.

இதுபோதாதென்று பேராசைகொண்ட இந்த இயக்கம், உலக நாடுகளிலும் கிளைகளை நிறுவி, அவற்றின்வழி தமிழியப் பணியாற்றி வருகிறது. அந்த வகையில் மக்கள் சிந்தனைப் பேரவையின் ஜப்பான் கிளையின் ஆலோசகர் ச. கமலக்கண்ணன் தலைமையில் டோக்கியோ நகரில் இரு தினங்களுக்கு முன்னம் பாரதியார் விழா நடைபெற்றது.

அவ்விழாவின் தொடக்கத்தில் பேரவையின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரனின் அறிமுகவுரை காணொளிவழி இடம்பெற்றதைத் தொடர்ந்து இந்த விழாவுக்கென்றே எழுதப்பட்ட ‘பாரதியும் ஜப்பானும்’ நூல் வெளியிடப் பட்டது. சிறப்பு விருந்தினர் அறிவியல் மேதை முனைவர் மயில்சாமி அண்ணாதுரை நூலை வெளியிட, ஜப்பான்வாழ் இலக்கியவாதிகள் கு. கோவிந்தராஜனும் இரா. செந்தில்குமாரும் முதல்படியைப் பெற்றுக் கொண்டனர்.

பாரதியியல் அறிஞர் பேராசிரியர் ய. மணிகண்டன் பாரதி பற்றிய பல அரிய தகவல்களைக் கூறியது பார்வையாளர்களை நிகழ்ச்சியுடன் ஒன்றவைத்தது. ஊர்வலத்தில் பங்கேற்ற குழந்தைகளுக்குச் சான்றிதழும் பாரதியார் நூலும் வழங்கப்பட்டது, குழந்தைகளையும் அவர்தம் பெற்றோரையும் மனநிறைவு கொள்ளச் செய்தது. இத்துடன் பாரதிவிழா இனிதே நிறைவுற, உலக அறிவியல்நாள் கொண்டாட்டம் தொடங்கியது.

மாந்த வாழ்வில் நாளொரு வண்ணம் மறுமலர்ச்சியைத் துலக்கும் அறிவியலைக் கொண்டாட முடிவுசெய்தப் பேரவை, அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற ஜப்பான்வாழ் தமிழர்களுக்குப் பாராட்டுவிழா நடத்தியது. ஒவ்வொருவரின் ஆய்வுத்தளங்களை எடுத்துரைத்து அவர்களின் உருவப்படத்தையும் பெயரையும் ஆய்வின் பொருண்மையையும் பொறித்த பதக்கம், முனைவர் மயில்சாமி அண்ணாதுரையால் வழங்கப்பட்டது.

முதல் தலைமுறைப் பட்டதாரியர் பதினெழுவரும் அரசுப்பள்ளியில் தமிழ்வழி பயின்ற 19 அறிவியலாளர்களும் இவ்விழாவில் பாராட்டப்பட்டனர். அறிவியலையும் அறவியலையையும் இரு கண்களாகக் கொண்ட மக்கள் சிந்தனைப் பேரவை, அயல் மண்ணில் தங்களின் கடின உழைப்பின் மூலம் உயர்ந்தவர்களையும் ஜப்பானியர்களுக்கே வழிகாட்டும் அளவிற்கு அறிவியல் ஆய்வில் சிறந்தவர்களையும் பாராட்டுமுகமாக இந்த அங்கம் இடம்பெற்றது.

தொடர்ந்து, முனைவர் மயில்சாமி அண்ணாதுரை உரையாற்றியபோது, தன் விண்வெளி ஆய்வு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். சந்திரயானில் நீரைத் தேடியதில் இந்தியாவும் மற்ற நாடுகளும் கைக்கொண்ட வழிமுறைகளில் இருந்த வேறுபாடுகளை அவர் விளக்கியபோது அரங்கமே வியப்பின் உச்சத்துக்குச் சென்றது.

மாணவர் கலந்துரையாடலின்போது, இரு பள்ளிகளைச் சேர்ந்த தமிழ் மாணவர்களுடன் விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்ட தமிழரல்லாத மாணவர்களும் பங்கேற்றதால், இந்த அங்கம் ஆங்கிலத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கியபின் பேரவையின் ஜப்பான் கிளையின் தலைவர் வே. கிருஷ்ணசாமியின் நன்றி உரையுடன் விழா நிறைவுற்றது.

தொடர்ந்து, அரங்குக்கு வெளியே கொட்டும் பனியையும் பொருட்படுத்தாது சிறப்பு விருந்தினர்களுடன் சுமார் ஒரு மணிநேரம் பார்வையாளர்கள் உரையாடியும் புகைப்படம் எடுத்தும் தம் ஆர்வத்தைத் தணித்துக் கொண்டனர். எதிர்பார்த்ததைவிட விழா பெருவெற்றி பெற்ற மனமகிழ்வில் பேரவை நிர்வாகிகளும் விடைபெற்றனர் என்று கமலக்கண்ணன் தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை