Monday, April 20, 2026

பத்து மலை இந்தியன் செட்டில்மெண்ட் வீடுகள் உடைப்பு!சுல்தானின் கருணையை நாடுகின்றனர்!!

குடியிருப்பு நிலங்களின் சட்டப்படியான தன்மை குறித்து பொன் வேதமூர்த்தி சிலாங்கூர் அரண்மனை வளாகத்தில் விளக்கம் அளித்தார்

கோலாலம்பூர், நவ.20:
நாட்டில் இந்தியர்களின் பாரம்பரிய குடியிருப்புப் பகுதியான பத்துமலை இந்தியன் செட்டில்மெண்ட்-இல் உள்ள வீடுகளை உடைப்பதற்கு சட்டத்திற்கு புறம்பாக முடிவு செய்துவிட்ட நிலையில் அங்கு குடியிருக்கின்ற மக்கள் மாட்சிமைக்குரிய சிலாங்கூர் சுல்தானின் கருணையையும் தலையீட்டையும் நாடியுள்ளனர்.

தலைமுறை தலைமுறையாக இங்குவாழும் குடும்பங்களை மேம்பாடு, சாலை அமைப்பு என்ற பெயரில் அப்புறப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பகுதியில் தொடர்ந்து வசிப்பதற்குரிய சட்டப்பூர்வ உரிமையைக் கொண்டிருந்தாலும் மாநில அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்த வீடுகளை உடைக்கும் வேலை மேற்கொள்ளப்படுவதால் தங்களுக்கு வேறு வழி இல்லை என்று ஷா ஆலம், புக்கிட் காயாங்கான் அரண்மனை முன்பு நேற்றைய முன்தினம் மலேசியத் தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீ ரமேஷ் தலைமையில் ஒன்றுதிரண்ட இந்தியன் செட்டில்மெண்ட் குடியிருப்பு வாசிகள் கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்துள்ளனர்.

மலேசிய முன்னேற்றக் கட்சித் தலைவர் பொன் வேதமூர்த்தியும் இந்தப் பேரணியில் கலந்துகொண்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் ஊடகத்தாரிடம் பேசினார்.

மெர்டேக்காவிற்கு முன்பே ஆங்கிலேய நிர்வாகத்தினரால் தமிழ்த் தோட்ட பாட்டாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்பு நிலங்கள் இவை; அரசு நிர்வாகமே சட்டப்படியாக இவர்களை குடி அமர்த்தியதற்கு ஆதாரமாக 1986 முதல் 1989-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் 39 குடியிருப்பாளர்கள் சட்டபூர்வமான நிலப்பட்டாவைப் பெற்றனர் என்று பொன். வேதமுர்த்தி விளக்கம் அளித்தார்.

அரண்மனைக்கு அணிவகுத்துச் செல்லும் குடியிருப்பு வாசிகள்

இந்த நிலப்பட்டாக்கள் 2046-ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் நாள்வரை வசிப்பதற்கான சட்டப்படியான உரிமைக் கொண்டுள்ளன; தவிர, 2013 ஆம் ஆண்டில் மேலும் 77 குடும்பத்தினருக்கு 99 ஆண்டுகளுக்கான உரிமையுடன் நிலப்பட்டாக்கள் வழங்கப்பட்டன என்ற விவரத்தையும் முன்னாள் அமைச்சருமான பொன் வேதமூர்த்தி சிலாங்கூர் அரண்மனையில் மகஜுர் வழங்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளக்கம் அளித்ததுடன் நேரில் ஆதரவும் வழங்கினார் என்று ரமேஷ் தெரிவித்தார்.

அரண்மனை வளாகத்தில் திரண்ட ஏறக்குறைய எண்பது பேரில், எண்பது வயதுக்கு மேற்பட்ட முதியோர் முதல் பிறந்த கைக்குழந்தையுடன் வந்த இளந்தம்பதியர், சிறாரும் அடங்கியிருந்தனர். அனைவரின் முகத்திலும் கவலையும் எதிர்காலம் குறித்த கேள்விக்குறியும் வெளிப்பட்டன.

தலைமுறை தலைமுறையாக சட்டப்பூர்வமான நிலத்தில் வாழ்ந்து வந்த தங்களின் வீடுகள் இன்னும் சில தினங்களில் உடைக்கப்பட்டு நிர்க்கதியாகும் நிலையை அறிந்து இவர்கள் அனைவரும் பரிதவிப்புக்கு ஆளாகி இருப்பதாக ரமேஷ் கூறினார்.

வேலை இடம் பள்ளிக்கூட வசதி உட்பட அனைத்தையும் பத்து கேவ்ஸ் வட்டாரத்தைச் சுற்றி அமைத்துக் கொண்டு காலம் காலமாக வாழ்ந்துவரும் இந்த மக்களை சட்டத்திற்குப் புறம்பாக வெளியேற்றுவதுடன் அவர்கள் வாழ்ந்துவந்த வீடுகளையும் சட்டத்திற்குப் புறம்பாக இடிப்பதன் தொடர்பில் நவம்பர் 10-ஆம் நாள் காலை 11:00 மணி அளவில் கோம்பாக் மாவட்ட நில அலுவலக அதிகாரிகளும் காவல்துறையினரும் இந்தப் பகுதியில் நோட்டம் இட்டதாக ரமேஷ் மேலும் கூறினார்.

சாலைத் தடுப்பை எங்கு மேற்கொள்வது, எத்தனை மணிக்கு எந்த நாளில் விடுகளை உடைப்பது என்பதையெல்லாம் அவதானிப்பதற்காக வந்த இந்த அதிகாரிகள், காவல் துறையினருடன் செலாயாங் நகராண்மைக் கழக அதிகாரிகளும் சீருடை அணியாமல் வந்திருக்கலாம் என்று ஐயுறுவதாக ரமேஷ் இதன் தொடர்பில் மேலும் தகவல் தெரிவித்தார்; இந்த மக்கள் உரிமையுடன் வாழ்வதற்கான சட்டப்படியான ஆதாரங்களை ரமேஷ் ஊடகத்தாரிடம் காண்பித்தார்.

நாடு விடுதலை பெறுவதற்கு முன்பிருந்தே இங்கு வாழும் மக்களை, கோம்பாக் மாவட்ட நில அலுவலக அதிகாரிகள் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த சில சுயநல-ஊழல் தன்மை கொண்ட தனி நபர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு இந்த மக்களை வெளியேற்றவும் வீடுகளை உடைக்கவும் முன்னதாக நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்; நோட்டீஸில் குறிப்பிடப்பட்ட நாளைக் கடந்து திடீரென்று இந்த வீடுகளை உடைக்கும் முயற்சியில் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் பகுதியில் வாழ்கின்ற மக்களின் சட்டமன்ற பிரதிநிதியாக இருப்பவர் மாநிலத்தின் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமீருடின் ஷாரி ஆவார். இந்த மக்கள் தொடர்ந்து இவருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்திருக்கும் நிலையில் இப்படி அல்லல்பட்டு நிற்கின்ற மக்களை மந்திரி பெசார் சந்திக்கக்கூட விரும்பவில்லை.

இப்படி அல்லல்பட்டு எதிர்கால நிச்சயமற்ற தன்மையுடன் பரிதவிக்கின்ற மக்களை நம்பிக்கை கூட்டணியை சேர்ந்த மத்திய- மாநில மக்கள் பிரதிநிதி எவரும் கண்டு கொள்ளாமல் அடியோடு கைவிட்டு விட்டனர்.

இந்த நிலையில்தான் வேறுவழியே இல்லாமல் மாட்சிமைக்குரிய சிலாங்கூர் சுல்தானை அணுகியதுடன் தங்கள் குடியிருப்புகளை உடைக்காமலும் வெளியேற்றாமலும் இருக்க கருணை காட்டும்படியும் இதில் தலையிட்டு நல்ல முடிவை அறிவிக்கும் படியும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நவம்பர் 18 ஆம் நாள், நேற்றைய முன்தினம் செவ்வாய்க்கிழமை சிலாங்கூர் ஆட்சியாளரிடம் கோரிக்கை மனுவை சமர்ப்பித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ரமேஷ் சிலாங்கூர் மாநில அரசு மனிதநேயத்துடனும் நியாயமாகவும் நடந்து கொள்வதுடன் பத்துமலை இந்தியன் செட்டில்மெண்ட் குடியிருப்பாளர்களை அவரவர் இல்லத்திலேயே வசிக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை