
காளியம்மன், துர்க்கை அம்மன், இயேசுநாதர் உள்ளிட்ட கடவுளரையும் புத்தமதம் மற்றும் சீனர் கோயில்களையும் ஆபாச வார்த்தைகளில் இழிவாக பேசிய முகமட் அலி(எ) கே.ஆனந்தன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சிரம்பான் காவல்துறையில் முதல் போலீஸ் புகார் செய்யப்பட்டது. அதன் பிறகு தொடர்ச்சியாக 10க்கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டன.
தொடர்ந்து மாக் மண்டின் குமார், தேசம் குணாளன் மணியம் மற்றும் சிலர் கோம்பாக் காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.
கோம்பாக் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த அந்நபர் தற்போது சிரம்பான் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசும் சம்பவங்கள் தற்போது கண்மூடித்தனமாக அதிகரித்து வரும் நிலையில் முஸ்லீமாக மதம் மாறிய இந்த நபர், இந்து மத சிலைகள் குறித்து ஆபாசமாக பேசிய காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக ஆங்காங்கே 10க்கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்துவாக இருந்து முஸ்லீமாக மதம் மாறும் நபர்களுக்கு இந்து மதத்தை இழிவாகப் பேசுவது சர்வசாதாரணமாகி விட்டது. அந்த வகையில் செலாயாங் ஜெயாவை சேர்ந்த முகமட் அலி என்று அடையாளம் கூறப்பட்ட கே.ஆனந்தன் என்ற அந்நபர் காளியம்மன், துர்க்கை அம்மன், இயேசுநாதர் மற்றும் புத்த மதத்தை ஆபாச வார்த்தைகளைக் கொண்டு இழிவாக பேசியிருந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து கேள்விப்பட்ட சில இளைஞர்கள் அந்நபரைத் தேடினர். செலாயாங் ஜெயாவில் உள்ள ஓர் அங்காடியில் அந்நபர் இருப்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்று அந்நபரை கையும் களவுமாக பிடித்தனர்.
அதன்பின், மன்னிப்புக் காணொளியை வெளியிடும்படி அந்நபரை கேட்டுக் கொண்டதுடன் போலீஸ்சுக்கும் தகவல் கொடுத்து கோம்பாக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
அந்நபரை மாக் மண்டின் குமார் நேரில் பார்த்து எச்சரித்தோடு கோம்பாக் போலீஸ் தலைமையக காவல் நிலையத்திலும் புகார் செய்தார்;
3R சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கும்படியூம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பில் முதல் போலீஸ் புகார் சிரம்பானில் செய்யப்பட்டதால் சம்பந்தப்பட்ட நபர் சிரம்பான் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தேசம் ஊடகத்தின் தோற்றுநரும் தலைமை ஆசிரியருமான குணாளன் மணியமும் கோம்பாக் காவல்நிலையத்தில் புகார் செய்து 3R சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
தேசம் செய்திகள் ஹரி ஸ்ரீநிவாஸ்


