
மலேசியாவில் இந்து சமயத்தையும் இந்து தர்மத்தையும் வளர்ப்பதற்காக 2026-ஆறாம் ஆண்டில் 6,000 சமய ஆசிரியர்களை உருவாக்கவும் அவர்களின் மூலம் 80,000 மாணவர்களுக்கு சமயக் கல்வியை பயிற்றுவிக்கவும் மலேசிய இந்து தர்ம மாமன்றம் இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அதன் தலைவர் ரிஷி குமார் என்று தெரிவித்தார்
தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கட்டாயமாக சமயக் கல்வியை போதிக்க வேண்டும் என்று மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் தலைவர் ரிஷிக் குமார் தெரிவித்தார்.
முஸ்லிம் அல்லாத மாணவர்களுக்கு சமயக் கல்வி அவசியமாகும். அந்த வகையில் நாட்டில் உள்ள அனைத்து தமிழ்ப் பள்ளிகளிலும் சமயக் கல்வி போதிக்கப்பட வேண்டும்.
இது தொடர்பாக கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம். இதன் தொடர்பில் தமிழ்ப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கமும் பள்ளி மேலாளர் வாரியமும் சமயக் கல்வி போதிக்க எங்களுக்கு பக்கம் பலமாக இருக்க வேண்டும் என்றார் அவர்.
பள்ளியில் விளையாட்டுப் போட்டி இடம் பெறவில்லை என்றால் குரல் கொடுக்கிறோம்; ஆனால் சமயக் கல்வி பற்றி யாரும் குரல் கொடுப்பது இல்லை.
இந்நிலை மாற வேண்டும். கடந்த 43 ஆண்டுகளாக தமிழ்ப் பள்ளிகளில் சமயக் கல்வி போதிக்க வேண்டும் என்று மலேசிய இந்து தர்ம மான்றறம் போராடி வருகிறது.
சமயக் கல்வி போதிக்க மலேசிய இந்து தர்ம மாமன்றம் பாடப் புத்தகத்தை தயாரித்துள்ளது. அண்மையில் பினாங்கு மாநிலத்தில் பிறை முனீஸ்வரர் ஆலய நிர்வாகத்தின் ஆதரவோடு சமயக் கல்வி புதிர் போட்டி நடைபெற்றது .
இதில் பினாங்கை சேர்ந்த 28 தமிழ்ப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டது பெருமையளிக்கிறது.
தமிழ்ப் பள்ளிகளில் சமயக் கல்வியை போதிக்க வேண்டும் என்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்ப வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் ஆதரவு கண்டிப்பாக தேவை என்றும் இன்று நவம்பர் 30-ஆம் நாள் அம்பாங்கில் உள்ள ஆதி சங்கரர் திருமடத்தில் நடைபெற்ற மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் பேரவைக் கூட்டத்திற்கு பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
இனி வரும் காலத்தில் மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் சார்பில் நடைபெறும் ஆண்டுக் கூட்டங்கள், இரு நாள் நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்படும் என்று இன்றைய நிர்வாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
காரணம் ஒரு நாள் நிகழ்ச்சியாக இருந்தால் ஜொகூர் – பினாங்கு போன்ற தொலைதூர மாநிலங்களில் இருந்து வருகின்றவர்கள் மதியத்துடன் புறப்பட வேண்டிய சூழ்நிலை தவிர்க்க முடியவில்லை;
அதனால் இந்து தர்ம மாமன்றத்தினர் சமய கருத்துகளை வலுவாக ஆலோசிக்கவும் எதிர்கால திட்டங்கள் குறித்து வகுக்கவும் ஏதுவாக ஒரு நாள் தங்குவதற்கு ஏதுவாக இரண்டு நாள் கூட்டமாக இனி ஏற்பாடு செய்யப்படும் என்று இன்றைய நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ரிஷி குமார் மேலும் தெரிவித்தார்.


