Thursday, April 23, 2026

தமிழ்ப் பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற நடவடிக்கையா?ஜோகூர் கல்வித்துறைக்கு கண்டனம்!

Made with LogoLicious Add Your Logo App

ஜொகூர் மாநில தமிழ்ப் பள்ளிகளில் உள்ள திருவள்ளுவர் சிலையை அகற்றும் முன்மொழிவை மலேசியத் தமிழர் சங்கம் கடுமையாக எதிர்க்கிறது அதன் புதிய தலைவர் பரமசிவம் மருதை தெரிவித்துள்ளார்

ஜொகூர் மாநில கல்வித்துறை, மாநிலத்திலுள்ள பல தமிழ் பள்ளிகளின் வளாகங்களில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை அகற்ற வேண்டும் என முன்மொழிந்திருப்பது, தமிழ்ச் சமூகத்தில் பெரும் அதிருப்தியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மலேசியத் தமிழர் சங்கம் தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்கிறது.

இதன் தொடர்பில் கருத்தும் கண்டனமும் தெரிவித்துள்ள ம.பரமசிவம்,
“திருவள்ளுவர் உலகளவில் ஞானத்தின் சின்னமாகவும் மனிதநேய மதிப்புகளின் முன்னுதாரணமாகவும் மதிக்கப்படுபவர். அவரின் திருக்குறள் எந்த மதத்துடனும் சார்பில்லாத பொதுமறை. அறிவையும் ஒழுக்கத்தையும் போதிக்கும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் உருவத்தை மதச் சின்னமாக கருதுவது தவறான புரிதலின் விளைவு” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ்ப் பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை, அவரின் உருவம் மாணவர்களுக்கு ஒழுக்கம், நேர்மை, மனிதநேயம் போன்ற அடிப்படை மதிப்புகளை வளர்க்கும் வழிகாட்டியாக உள்ளது. கல்வி வளாகங்களில் இருந்து இப்படியான சின்னங்களை அகற்றுவது தேவையற்ற சர்ச்சையையும் சமூக ஒற்றுமைக்கு விரோதமான சூழலையும் உருவாக்கும்” எனவும் அவர் தெரிவித்தார்.

மலேசியத் தமிழர் சங்கம்,

ஜொகூர் மாநில கல்வித்துறை, இந்த முன்மொழிவை உடனடியாக திரும்பப் பெறுமாறு மலேசியத் தமிழர் சங்கம் வலியுறுத்துகிறது.

மேலும், தமிழ்க் கல்வி அமைப்புகள், சமூகத் தலைவர்கள், பெற்றோர் மற்றும் அறிஞர்களுடன் ஆலோசனை நடத்தாமல் எடுக்கப்படும் எந்த முடிவும் ஏற்க முடியாதது எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.

“பன்முக மக்கள் வாழும் மலேசியாவில் ஒவ்வொரு சமூகத்தின் கலாச்சாரச் சின்னங்களும் மொழி மரபுகளும் மதிக்கப்பட வேண்டும். உலகப்புகழ்பெற்ற அறிஞர் திருவள்ளுவரின் உருவத்தை அகற்றும் முயற்சி நாட்டின் பன்முக ஒற்றுமைக் கொள்கைக்கு எதிரானது,” என பரமசிவம் மருதை தெரிவித்துள்ளார்.

மலேசியத் தமிழர் சங்கம் தமிழ் மொழி, கல்வி, கலாச்சாரம் மற்றும் சமூக நலன் ஆகிய துறைகளில் பல தசாப்தங்களாகச் செயல்படும் முந்நிலை அமைப்பாகும். நாட்டின் தமிழர் சமூகத்தின் உரிமை மற்றும் முன்னேற்றத்தைக் காக்கும் பணியில் முக்கிய பங்கு வகித்து வருகின்ற சமூக- மொழி இயக்கம் என்னும் அடிப்படையில் வள்ளுவத்தையும் வள்ளுவர் சிலையையும் கட்டிக்காக்கும் முயற்சியில் என்னாலும் முன்னிற்கும் என்று பரமசிவம் மருதை மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை