
கோலாலம்பூர், டிச.08:
ஐநா மன்றம் டிசம்பர் 10-ஆம் நாளை, பன்னாட்டு மனித உரிமைகள் தினமாக, 1948-இல் பிரகடனம் செய்தது. இதன் அடிப்படையில், மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி-உடன் ஹிண்ட்ராஃப் பேரியக்கமும் இணைந்து மலேசியர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு மனித உரிமை மீறல்களை முன்னிலைப்படுத்தும் வகையில் தலைநகரில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி சட்ட ஆலோசகர் கார்த்திகேசன் சண்முகம் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சிறுபான்மை சமூகத்தினர் எதிர்கொள்ளும் அவலங்களை வெளிச்சப்படுத்த விரும்புகிறோம். பேறுகுறைந்தோர் எதிர்-கொள்ளும் தடைக்கற்கள், நம்நாட்டு வளத்தைப் பங்கிடுவதில் நிலவும் ஏற்றத்தாழ்வு, கிறிஸ்துவர்கள்-பௌத்தர்கள்-இந்துக்கள்-சீக்கியர்கள்-தாவோ சமயத்தினர்-பஹா மதத்தினர் உள்ளிட்ட சமயப் பிரிவினருக்கும் நிதி அளிப்பதில் நிலவும் பின்னடைவு; அடித்தட்டு மக்கள் மீட்சிக்கான பொருளாதார திட்டமின்மை; இனப் பாகுப்பாடு, பூர்வகுடி மக்கள் மீதான அத்துமீறல் எல்லாம் இங்கு வெளிச்சம்பெறும்.
அடுத்த வாரம் டிசம்பர் 10-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை இரவு 7:30 மணி அளவில் கோலாலம்பூர், பிரிக்ஃபீல்ட்ஸ் முச்சந்திப்புப் பகுதியில் நடைபெற வுள்ள இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து அரசுசாரா அமைப்பினரையும் அழைப்பதாக மனித உரிமை ஆர்வலளருமான ச.கார்த்திகேசன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இதில் கலந்துகொள்ளும் அரசுசாரா அமைப்பினர், தங்களின் பதாகைகளை கொண்டுவரும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அவை தங்களையும் தங்கள் அமைப்பையும் அமைப்பின் கருத்தையும் அடையாளப் படுத்துவதாக அமையும்.
இந்த ஒன்றுகூடல், மனித உரிமை குறித்த கொண்டாட்டத்திற்காக மட்டுமல்ல; நம் அச்சத்தை, சமூகப் பார்வையை வெளிப்படுத்தும் ஒரு தளமாகவும் இது அமையும். நாம் வாழும் இந்த மண்ணில் எதிர்கொள்ளும் பின்னடைவுகளை வெளிச்சம்போட்டுக் காட்டும் அதேவேளை, நம் சுதந்திரத்தையும் கொண்டாட அணிதிரள்வோம் வாரீர் என்றுதெரிவித்துள்ள ஹிண்ட்ராஃப் இயக்க சட்ட ஆலோசகருமான கார்த்திகேசன் சண்முகம், இதன் தொடர்பில் மேல் விவரம் அறிய விரும்புவோர் முனைவர் அ. குமரனை(016-9067380) அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.


