Monday, May 25, 2026

மலேசிய சைவ நற்பணிக் கழக ஏற்பாட்டில் சிவ சிந்தனை மிளிரும் ‘பெரிய புராணவிழா! -டத்தோஸ்ரீ மு.சரவணன் சிறப்பு வருகை!!

மலேசிய சைவ நற்பணிக் கழகம், ஆண்டுதோறும் நடத்தும் பெரியபுராண விழாவை இவ்வாண்டும் நடத்தவுள்ளது. சைவ மணம் கமழும் இவ்விழா வரும் ஞாயிற்றுக் கிழமை டிசம்பர் 7-ஆம் நாள் காலை முதல் மாலைவரை தலைநகரத்து டான்ஸ்ரீ சோமா அரங்கத்தில் நடைபெற உள்ளதென்று மலேசிய சைவ நற்பணிக் கழகத் தலைவர் முனைவர் தருமலிங்கம் நடராசன் அறிவித்துள்ளார்.

தமிழும் சமயமும் தமிழருக்கு இரு விழியென இக்காலத்தே கூறப்படுகிறது. உண்மையில், ‘தமிழும் சைவமும் தமிழருக்கு இரு விழிகளாம்’ என்பதே சைவம் செழித்த காலத்தில் ஆன்றோரும் சமயச் சான்றோரும் உரைத்த மொழியாகும்.

அத்தகைய சைவத்தின் இறையிலக்கியமான திருமுறைகளில் பன்னிரண்டாம் திருமுறையாக விளங்கும், சேக்கிழார் பெருமான் அருளிய, திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணத்தின் பெருமையை அனைவரும் உணரும் பொருட்டு, இந்த மங்களகரமான நிகழ்வு நடத்தப்படுகிறது.

இவ்விழா, பெரியபுராணத்தின் மகத்துவத்தைக் கொண்டாடுவதையும் காலத்தால் அழியாத அதன் சிவநெறிக் கூறுகளை தமிழ்ச் சைவர்களிடையே பரப்புவதையும் நோக்கமாகக் கொண்டு நடத்தப்படுகிறது.

இந்த மாபெரும் காவியம், ஒரு தமிழ்ச்சைவக் கருவூலமாகவும் பாரம்பரியத் தமிழர் சமய பண்பாட்டுப் பெட்டகமாகவும் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்று ஆவணமாகவும் சைவ அடியார் பெருமக்களின் சிறப்பினைப் பகரும் களஞ்சியமாகவும் திகழ்கிறது; போற்றப்படுகிறது.

மலேசிய அரசியல் – இலக்கிய உலகின் சொல்வேந்தர் டத்தோஸ்ரீ டாக்டர் மு. சரவணன் சிறப்பு வருகையாளராகக் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில், திருக்கயிலாய இசை, நாயன்மார்களின் வரலாற்றுச் சொற்பகர், திருமுறை நடனம், பெரியபுராண பட்டிமன்றம், திருமுறை இன்னிசை, பெரிய புராணச் சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு கலாச்சார மற்றும் சமய நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன என்று சைவ நெறியில் தேர்ந்த ஆசிரியரும் சிறந்த தமிழ்ச்சமய உரைஞருமான ‘திருமுறைச் செம்மல்’ ந.தருமலிங்கனார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்ச் சைவ சமயத்தைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள், தாங்கள் சார்ந்த இயக்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு, விழாவை மேலும் சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பதாகவும் தங்களின் வருகையும் பங்களிப்பும் எங்களுக்குப் பெருமை சேர்ப்பதோடு, இவ்விழாவின் மேன்மையை மேலும் உயர்த்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலவயமாகவும் மூவேளை உணவுடனும் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சி குறித்த மேற்றகவலுக்கு 012-3277061, 012-2340470 ஆகிய எண்களில் அழைக்கலாம் என்றும் பண்பாட்டு உடையில் கலந்து கொள்ளுதல் நலம் என்றும் தருமலிங்கனார் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை