
மலாக்கா மாநில டுரியன் துங்கால் பட்டணத்தில் கடந்த நவம்பர் மாதம் 24-ஆம் நாள் 21 வயது எம்.புஷ்பநாதன், 24 வயது டி.புவனேசுவரன், 29 வயது ஜி. லோகேஸ்வரன் ஆகிய மூன்று
இந்திய இளைஞர்கள் போலீசாரால்
அதிரடியாக சுட்டுக் கொல்லப்பட்டது, முந்தைய தேசிய முன்னணி ஆட்சியில் போலீஸ் காவலில் அடுத்தடுத்து இந்திய இளைஞர்கள் மர்ம மரணம் அடைந்த சம்பவம் மீண்டும் இந்த ஆட்சியில் புதுப்பிக்கப்படுகிறதோ என்று அச்சம் கொள்ள வைக்கிறது என்று ஹிண்ட்ராஃப் ஜோகூர் மாநிலத் தலைவர் எ. மோகன் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த மூன்று ஆடவரும் போலீசாரால் மடக்கப்பட்ட பின்னர் அவர்கள் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் சரணடைந்திருப்பதாகத் தெரிகிறது.
இருந்த போதும் அவர்கள் காரிலிருந்து இறக்கப்பட்டு தரையில் மண்டியிடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றுவதைப் போல அருகில் இருந்து சுட்டுக் கொல்லப் பட்டிருப்பது சட்டத்தின் ஆட்சி நடைபெறு-கின்ற இந்த நாட்டின் நடைமுறைக்கு ஏற்புடையது இல்லை.
உயிர் நீத்த மூன்று ஆடவரும் எவ்வித தீங்கும் செய்யாதவர்கள் அல்லது குற்ற நடவடிக்கையை மேற்கொள்ளாதவர்கள் என்று யாரும் எந்த இடத்திலும் குறிப்பிட வில்லை;
சம்பந்தப்பட்ட மூன்று ஆடவர்களும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தால் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகின்ற இந்த நாட்டில் அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றம் சுமத்தப்பட்டு இருக்க வேண்டும்.
அதைவிடுத்து எவ்வித கேள்வியும் நியாயமும் விசாரணையும் இல்லாமல் எடுத்த எடுப்பிலேயே சுட்டுக்கொன்று காவலர்களே தீர்ப்பை தங்கள் கையில் எடுத்திருப்பது ஒரு ஜனநாயக நாட்டிற்கும் பல இன மக்களும் வாழும் அமைதியான மலேசியாவிற்கும் கொஞ்சமும் பொருத்தம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
குற்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை தற்காக்கவோ பாதுகாக்கவோ எவரும் முன்வரவில்லை.
அப்படிப்பட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டால் அவர்கள் முறையான சட்ட விசரனைக்கு உட்பட்டு நீதிமன்றத்தின் வழியே தீர்ப்போ தண்டனையோ வழங்கப்படுவது தான் முறையேத் தவிர, எடுத்து எடுப்பிலேயே சுட்டுக் கொள்வது பன்னாட்டு சட்ட நடைமுறைகளுக்கு முரணானது என்று மலேசிய முன்னேற்ற கட்சி- (எம்ஏபி) ஜோகூர் மாநிலத் தலைவருமான எ.மோகன் இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


