
1988 ஜூலை 31 அன்று மலேசியாவின் பினாங்கு மாநிலம் பட்டர்வொர்த் நகரின் ஜெட்டியில் அமைந்திருந்த சுல்தான் அப்துல் ஹலீம் ஃபெர்ரி நிலைய பாலம் இடிந்து விழுந்தது.
மலேசிய வரலாற்றில் மிகப் பெரிய அளவில் பொதுமக்கள் மடிந்த விபத்துகளில் இதுவும் ஒன்றாகும். இவ்விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர்; 1,634 பேர் காயமடைந்தனர்.
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில், மெர்டேக்காவிற்கு முந்தைய ஆண்டில்,
1956-இல் கட்டப்பட்ட இரு நிலை பாலத்தின் மேல் நிலை பயணிகள் பயன்பாட்டிற்கும் கீழ் நிலை வாகனங்களுக்கும் என வடிவமைக்கப்பட்டது.
சம்பவ தினத்தில் மாலை 4:30 மணி அளவில், ஏறக்குறைய 10,000 பேர் அந்தப் படகு போக்குவரத்து நிலையத்தில் இருந்தனர். பினாங்கு மாநிலத்தில் நடைபெற்ற இரண்டு பெரும் விழாக்கள் காரணமாக ஏற்பட்ட கூட்டம் அது.
பினாங்கு மாநிலத்தில் இரண்டு பெரிய சமய விழாக்கள் ஒரே நேரத்தில் நடைபெற்றன; தீவில், குவான் யின் தேவியின் விழாவும் பெருநிலத்தில் புனித அன்னம்மாள் விழாவும் ஒரே நேரத்தில் இடம்பெற்றன.
சீன புத்தமதக் குழுவினரிடையே 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விழாதான், குவான் யின் தேவித் திருவிழா; அதைப்போல, புனித அன்னம்மாள் விழாவும் கிறித்துவ சமயத்தினரைக் கடந்து தேசிய அளவில் மக்களைக் கவரக் கூடியது.
இந்த இரண்டு விழாக்களும் ஒரே நாளில் நடந்ததால், ஆயிரக்கணக்கான மக்கள் பினாங்கு தீவுக்கு ஃபெர்ரி மூலம் செல்ல முயன்றனர். அந்த கூட்டம் ஜெட்டியின் திறனை மீறியது.
இதன் விளைவாக, ஃபெர்ரி நிலையத்தின் மேல் நிலை நடைபாதை மக்கள் கூட்டத்தின் எடையைத் தாங்க முடியாமல் இடிந்து விழுந்தது.
32 பேர் இறந்ததுடன், ஏறக்குறைய 1,634 பேர் சிறு-பெருங் காயத்திற்கு ஆளாகினர். தவிர, ஏராளமான வாகனங்களும் நொறுங்கின; துறைமுக அலுவலகமும் சேதமடைந்தது.
அப்பொழுது போக்குவரத்து அமைச்சராக இருந்த லிங் லியோங் சிக் முழுமையான விசாரணை நடத்துவதாக அறிவித்தார்; பினாங்கு முதல்வர் லிம் சாங் யூ பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி அளிக்க முன்வந்தார்.
இது மலேசியாவின் பொது பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு பராமரிப்பு குறித்து அரசாங்கம் கடுமையாக சிந்திக்கத் தூண்டிய நிகழ்வாகும்.
இந்த நிகழ்வு, பொது இடங்களில் மக்கள் கூட்ட கட்டுப்பாடும் கட்டமைப்பு பாதுகாப்பும் எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தியதுது. இன்றைய காலத்தில், பெரிய விழாக்கள் அல்லது நிகழ்வுகளில் மக்கள் எண்ணிக்கை கட்டுப்பாடு, கட்டமைப்பு பரிசோதனை, அவசர உதவித் திட்டம் ஆகியவை அவசியம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
இந்த விபத்து, 1980களில் மலேசியாவில் நடந்த மூன்று முக்கிய துயர சம்பவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது
1989-இல் பேராக் மாநிலத்தில் புக்கிட் மேரா ரேடியோஆக்டிவ் மாசு பரவலும் இவ்விரு துயரங்களுக்கும் முன்னதாக 1982-இல் மதரசா கெடாவில் ஏற்பட்ட தீ விபத்தும் மற்ற இரு நிகழ்ச்சிகளாகும்.
புக்கிட் மேரா ரேடியோஆக்டிவ் மாசு (1982)
பேராக் மாநிலத்தில் உள்ள புக்கிட் மேரா பகுதியில், ஏசியா ரேர் எர்த்(Rare Earth) நிறுவனம் ரேடியோஆக்டிவ் கழிவுகளை சரியான முறையில் அகற்றாமல் விட்டது. இதனால் சுற்றுப்புறம் மாசடைந்து, அப்பகுதி மக்களுக்கு புற்றுநோய், பிறவிக் குறைபாடுகள் போன்ற நோய்கள் அதிகரித்தன.
இந்தச் சம்பவம், தொழில்துறை வளர்ச்சி நாட்டின் மேம்பட்டிற்கு மிக முக்கியம் என்றாலும் அது, மனித ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கக் கூடாது என்னும் விழிப்புணர்வை அரச மட்டத்திலும் சமூக அளவிலும் ஏற்படுத்தியது.
மதரசா கெடா தீ விபத்து (1989)
கெடா மாநிலத்தில் இருந்த மதரசா விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பல மாணவர்கள் உயிரிழந்தனர். மின்சார கோளாறு அல்லது பாதுகாப்பு குறைபாடு காரணமாக ஏற்பட்ட இந்தச் சம்பவம், கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பு விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது.
இந்த மூன்று துயர நிகழ்வுகளும் மலேசிய சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தின.
மலேசியாவின் சமூக வரலாற்றில் சில நிகழ்வுகள் வெறும் விபத்துகளாக மட்டுமல்லாமல், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பொறுப்பு, மற்றும் சமூக விழிப்புணர்வு குறித்து ஆழமான பாடங்களைச் சொல்லிக் கொடுத்துள்ளன.


