
இந்து கோவில்களை ‘ஹராம்’(சட்டவிரோதமானது) என்று கூறிவிட்டு இப்போது தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்குமுன் மன்னிப்பு கேட்கும் அன்வார் இப்ராகிமை இந்தியர்கள் மட்டுமல்ல; இனம், மதம் பாராமல் அனைத்து மலேசியர்களும் நிராகரிக்க வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தலைவர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்
இந்த மன்னிப்பு உண்மையான மனவருத்தத்தின் வெளிப்பாடு அல்ல. நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் ஏற்படப்போகும் சேதாரத்தை மட்டுப்படுத்துவதற்கான ஒரு தந்திர முயற்சி ஆகும். நெகிரி மாநில சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பெட்டி மூலம் பக்காத்தான் ஹரப்பானைத் தண்டிப்பதற்கு இந்திய வாக்காளர்கள் தயாராக இருக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிந்த பிறகு இந்த முயற்சி அரங்கேறுகிறது. அந்தோனி லோக் கூட சென்னா சட்டமன்ற தொகுதியில் மண்டியிடும் நிலையை எதிர்கொள்வதாகத் தெரிகிறது.
மலேசியர்கள் அன்வாரின் மன்னிப்பை நிராகரிக்க வேண்டியதற்கான 9 காரணங்கள்:
- இல்லாத ஒரு மன்னிப்பை அவர் புனைந்து கூறுகிறார்:
இந்து கோவில்களை ‘சட்டவிரோதமானவை’ என்று கூறியதற்காக, மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் மன்னிப்புக் கேட்டதாகக் கூறி, அன்வார் இப்போது ஒரு தவறான வரலாற்றுப் பதிவை உருவாக்க முயற்சிக்கிறார். அப்படி ஒரு மன்னிப்பு கேட்டதற்கான எந்தப் பதிவும் இல்லை; மாறாக, தன்னுடைய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்றுதான் சமாளிக்கப்பட்டது. ‘தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது’ என்பதை ஒரு மன்னிப்பாக மாற்றுவது வருத்தம் அல்ல; தேர்தல் களத்தில் பொதுமக்களை ஏமாற்றும் முயற்சி இது.
- இந்து கோவில்களைப் பகிரங்கமாக இழிவுபடுத்திய ஒரே பிரதமர் இவர்தான்:
இந்து கோவில்கள் ‘சட்டவிரோதமானவை’ என்று பகிரங்கமாக வகைப்படுத்திய முதல் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம்தான்; இதன்மூலம் வழிபாட்டுத் தலங்கள்மீது பொதுமக்களிடையே விரோதப் போக்கைத் தூண்டினார். அதேநேரத்தில், மெர்டேகாவுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே, காலனித்துவ ஆட்சிக் காலத்தில் பல இந்து கோவில்கள் நிறுவப்பட்டன என்ற வரலாற்று உண்மையை அவர் வேண்டுமென்றே மறைத்தார்.
- ஆண்டுதோறும் நடைபெறும் காவல்துறை நிகழ்வில் அவர் ஆற்றிய உரை ஒரு அபாயகரமான கருத்தை ஊக்குவித்தது.
2025-ல் நடந்த ஒரு தேசிய காவல்துறை நிகழ்ச்சியில், அன்வார் கோபமான தொனியில் ஆவேசமாக உரை ஆற்றினார். அந்த உரையானது, கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியா வட்டார கோயிலின் வரலாற்றுப் பதிவுகளை வெளியிட அரசாங்கம் தொடர்ந்து தவறியதை மறைத்து, அக்கோயிலை ஒரு ‘சட்டவிரோத கோவிலாக’ கருதுமாறு காவல்துறை உறுப்பினர்களை ஊக்குவிப்பதாகவும் ‘தூண்டுவதாகவும்’ அமைந்தது.
- அன்வாரின் வார்த்தைகள் சட்டவிரோதக் கும்பல் நடவடிக்கைகளைத் தூண்டிவிட்டன.
ஆலயங்கள் குறித்த சர்ச்சை உச்சத்தில் இருந்தபோது, அன்வார் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்திய ‘சட்டவிரோதக் கோயில்கள்’ என்னும் கருத்து, சட்டவிரோதக் கும்பல்கள், தங்கள் கையில் நடவடிக்கையை எடுத்துக் கொள்ள தூண்டியது. Waze உள்ளிட்ட டிஜிட்டல் வரைபடத் தளங்களில் நூற்றுக்கணக்கான இந்து கோயில்களை ‘சட்டவிரோதமானவை’ என்று தவறாக முத்திரை குத்தப்பட்டன, இது பொதுமக்களிடையே விரோதப் போக்கை மேலும் வளர்த்தது.
- அன்வாரின் கருத்து இனவெறியைத் தூண்டியது.
அன்வாரின் பேச்சுகள் இன உணர்வைத் தூண்டியது; அவரின் நம்பிக்கை வட்டத்தில் இருந்த தனிநபர்கள் ஊக்கமடைந்தனர். ‘மே 13’ போன்ற சம்பவம் மீண்டும் இடம்பெற வேண்டுமா என்று அச்சுறுத்தும் அளவிற்கு அவர்கள் சென்றனர். இந்து கோயில்கள்மீது குண்டு வைப்பதாக அச்சுறுத்தும்படியும் அவர்களைத் தூண்டியிருக்கலாம்.
- அன்வார் தன்னுடைய தவறான சித்தரிப்பைச் சரிசெய்ய மறுத்துவிட்டார்.
“தன்னுடைய பேச்சுகள் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே இன மற்றும் மத ரீதியான பதற்றத்தை தூண்டிவிட்டன என்பதை அன்வார் அறிந்திருந்தார். ஆயினும், அவர் சரிசெய்யும் நடவடிக்கையை எடுக்கத் தவறினார். 2025 மார்ச் 25 அன்று, இந்து கோவில்களின் வரலாற்றுப் பதிவுகளை வெளியிடவும் அன்வார் உருவாக்கிய தவறான சித்தரிப்பைச் சரிசெய்வதற்கும் ஓர் அவசர சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டுமாறு நான் அவரிடம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தேன். ஆனால், அந்த வேண்டுகோளை அவர் புறக்கணித்துவிட்டார்”.
- அதிகரித்து வரும் இனப் பதற்றத்தைத் தடுக்க அவர் தவறிவிட்டார்.
2025 ஏப்ரல் 23-ஆம் தேதியிட்ட எனது கடிதத்தை அலட்சியப்படுத்திய அன்வார், பிரதமராக தன் பொறுப்பை நிறைவேற்றத் தவறிவிட்டார், இது மே 13 பாணியில் மீண்டும் கலவரம் மற்றும் இந்து கோவில்களில் குண்டுவீச்சு என்றெல்லாம் அச்சுறுத்தும் போக்கை அதிகரிக்கத் தொடங்கியது.
- தேசிய நல்லிணக்கத்திற்கான உண்மையான முன்மொழிவை அவர் புறக்கணித்தார்:
மலேசியாவில் இன மற்றும் மத நல்லிணக்க நிலையை நேர்மையாக ஆராய்ந்து, அர்த்தமுள்ள சீர்திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்காக அரச விசாரணைக் குழுவை நிறுவுவதன் மூலம் தேசிய ஒற்றுமைக்கான உண்மையான அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று 2025 மே 19-ஆம் தேதியிட்ட என் கடிதத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க அன்வார் தவறிவிட்டார்.
- அவரின் தோல்வி தொடர்ந்து தேசிய நல்லிணக்கத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்.
இந்து கோவில்களின் வரலாறு மற்றும் சட்ட நிலையை தெளிவுபடுத்த அன்வாரின் தொடர்ச்சியான மறுப்பும் பொறுப்பான தேசிய தலைமையை வழங்கத் தவறியதும் இனவாத பதற்றத்தை அதிகரித்தன, 2026 ஜனவரி பிற்பகுதியிலும் பிப்ரவரி மாதத் தொடக்கத்திலும் கிட்டத்தட்ட இனமுறுகல்நிலை உச்சத்தை அடைந்தது.
அன்வார் இப்ராகிமின் இப்போதைய மன்னிப்பு கோரல், அவர் வெளிப்படுத்திய வார்த்தைகளால் அல்லது அவரின் செயலற்ற தன்மையால் ஏற்பட்ட சேதத்தை சீர்செய்ய முடியாது. உண்மையான மன்னிப்புக்கு நேர்மையும் அர்த்தமுள்ள நடவடிக்கையும் தேவை.
அப்படி இல்லாமல் நாளை சனிக்கிழமை நடைபெற இருக்கும் நெகிரி செம்பிலான் மாநில தேர்தலிலும் 16-ஆவது நாடளுமன்ற பொதுத் தேர்தலிலும் தோல்வி அடைவோம் என்ற பயத்தில் அவர் இப்போது மன்னிப்பு கேட்கிறார்.
இதை மலேசியர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாதென்று ஹிண்ட்ராஃப் தலைவரும் சட்ட வல்லுநருமான பொன்.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.


