
கோலாலம்பூர் டிச 6-
கடந்த
நவம்பர் 24 ஆம் தேதி மலாக்கா, டுரியான் துங்காலில் மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட குரல் (ஒலிப்)பதிவு இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் மூன்று இந்திய இளைஞர்களின் குடும்பத்தினர் ஆடியோ பதிவை மேலதிக விசாரணைக்காக இன்று புக்கிட் அமான் தலைமை போலீஸ் நிலையத்திற்கு ஒப்படைக்க வந்தனர்.
அவர்கள் வழக்கறிஞர்கள் ராஜேஷ் நாகராஜன், லத்தீஃபா கோயா, என். சுரேந்திரன், சமூக செயற்பாட்டாளர் அருண் துரைசாமி மற்றும் பொதுமக்கள் சிலருடன் வந்திருந்தனர்.
இந்தச் சம்பவம் முதலில், போலீசாரால் கொல்லப்பட்ட மூவரும் பாராங் கத்தியால் போலீசரை தாக்க முயன்றதாகவும் அதனால் போலீசார் தங்களின் பாதுகாப்பிற்காக மேற்கொண்ட தற்காப்பு நடவடிக்கை இது எனவும் மலாக்கா போலீஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவரின் மனைவி பதிவு செய்ததாகக் கூறப்படும் கடைசி தருணங்களின் அதிர்ச்சியூட்டும் ஆடியோ வெளிவந்த பின்னர் இப்போது இந்த விவகாரம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ சவப் பரிசோதனையில், இரத்த நாளத்தில் இன்னும் ஒரு குண்டு இருக்கிற ஒருவரின் உடலில், அவர் மிக அருகில் இருந்து சுடப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
அந்த குண்டு மூக்கின் வழியாக நுழைந்து இதயம் வரை சென்றுள்ளது.
“இந்த ஆடியோ, சம்பந்தப்பட்ட வழக்கில் மிக முக்கியமான ஆதாரமாக விளங்குகிறது என்று வழக்கறிஞர் ராஜேஷ் தெரிவித்தார்.
சுயேட்சை விசாரணை ஆணையத்தை நியமித்தது இந்த புகார் விசாரிக்கப்பட வேண்டும்.
மூன்று இந்திய இளைஞர்களை சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.
இதனிடையே பாராங் கத்தியால் தாக்க வந்ததால் சுட்டோம் என்று போலீசார் சொல்வதில் உண்மை இல்லை என்று அருண் துரைசாமி தெரிவித்தார்.
மூவரையும் சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவம் மின்னல் வேகத்தில் நடந்துள்ளது .
ஆகவே இந்த சமயத்தில் போலீசார் சொல்வதை நம்ப முடியவில்லை.
சம்பவம் நடந்த போது பதிவு செய்யப்பட்ட குரல் பதிவு ஆதாரமாக உள்ளது. மூன்று இந்திய இளைஞர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


