Tuesday, May 26, 2026

மக்களுக்கு தேவை ஆன்மிகம்!ஆர்எஸ்எஸ்-பாஜக-விற்குத் தேவை காலமெல்லாம் மதக்கலவரம்!!-நாடாளுமன்றத்தில் அடித்தாடிய மதுரை எம்பி!!!

இந்து மத சாயமும் சாயலும் பிரதிபலிக்கும் வகையில் ஆர்எஸ்எஸ்-பாஜக அரசு எழுப்பி உள்ள புதிய நாடாளுமன்ற வளாகத்தில் மக்களின் வழிபாட்டிற்குரிய 12 இறை உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன.

பிரம்மன், விஷ்ணு, சிவன், துர்கா, யோகினி, லிங்கேசன் உள்ளிட்ட 12 இறை உருவங்களும் ஒரே சமயத்தை சார்ந்தவை; அச்சமயம் இந்து சமயம்.

அதேவேளை, இந்தியாவின் பன்முகத் தன்மையை பிரதிபலிக்கின்ற வகையில் குர்ஆனை மறைநூலாகக் கொண்ட இஸ்லாம் குறித்து ஒரேவொரு உருவமும் வைக்கப்படவில்லை; பைபிளை வேத நூலாகக் கொண்ட கிறித்தவம் குறித்தும் ஒரே ஒரு உருவமும் வைக்கப்படவில்லை. இப்படி எல்லா சமயங்களையும் சமயத்தினரையும் அடியோடு புறக்கணித்து விட்டு இந்து சமயத்தை மட்டும் முன்னிலைப்படுத்துகின்ற பாஜக அரசும் பாஜக என்னும் அரசியல் இயக்கத்தின் தாய் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரும் தேச ஒருமைப்பாட்டை பற்றி பேசலாமா என்று பிரதமர் மோடியின் இருக்கையை நோக்கி வினாத் தொடுத்த மதுரைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்,

தேச ஒற்றுமை குறித்து பேசவும் அதை, இந்த மக்கள் மன்றத்தில் முன்னெடுப்பதற்கும் உங்களுக்கெல்லாம் என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டு நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை கிழிகிழியென கிழித்து விட்டார்.

அண்மையில் கொண்டாடப்பட்ட கார்த்திகைத் திருவிழா என்னும் தமிழர் சமய நிகழ்ச்சியின்பொழுது எல்லோருக்கும் தெரிந்தது திருச்சி உச்சிப் ள்ளையார் ஆலயத்தின் மீது ஏற்றப்பட்ட தீபம்; ஆனால் உங்களுக்கு எல்லாம்(ஆர்.எஸ்.எஸ்.-பாஜக-வினருக்கு) கண்களை உறுத்தியது, திருப்பரங்-குன்றத்து பள்ளிவாசல்தான்; மக்களுக்கு தேவை பக்தி; ஆனால் உங்களுக்குத் தேவை பகை; எல்லோருக்கும் தேவை ஆன்மீகம்; ஆனால் உங்களுக்கெல்லாம் தேவை காலமெல்லாம் கலவரம். என்று வெங்கடேசன் முழங்கியபோது நாடாளுமன்றத்தில் எழுந்த மேசையொலி அடங்க சற்று நேரமானது.

கவியரசு கண்ணதாசன் குறிப்பிட்ட ஒரு கதை இங்கு நினைவுகூரத் தக்கது; சொர்க்கத்திற்கும் நகரத்திற்கும் இடையில் இருந்த சுவர் விழுந்து விட்டதால் அதை யார் மீல எழுப்புவது என்ற விவாதத்தில் இருதரப்பாரும் நீண்ட காலமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த நிலையில், இதன் தொடர்பில் வழக்கு தொடரப் போவதாக சொர்க்கத் தரப்பினர் ஒரு கட்டத்தில் தெரிவித்தனர். அதற்குப் பதில் சொன்ன நரக தரப்பினர் “நீங்கள் வழக்கு தொடுத்தாலும் பயனில்லை; காரணம் தீர்ப்பளிக்கப் போவது எங்கள் தரப்பினர்தான்” என்று சொன்னார்களாம்; இந்த நிலை இன்று தமிழகத்திற்கு மிகவும் பொருந்தும்; அதைவிட மதுரைக்கு இன்னும் பொருந்தும்; இன்னும் மேலாக திருப்பரங்குன்றத்திற்கு வெகுவாக பொருந்துகிறது.

புண்ணியவான்கள் விளக்கேற்றலாம் என்று எழுதப்பட்டுள்ள தூணில் தீபமேற்றும் நடைமுறை நீண்ட காலமாக பின்பற்றப்படுகிறது; ஆனால் நாங்கள் புண்ணியவான்கள் அல்லர்; அந்த இடத்திலும் தீபம் ஏற்ற மாட்டோம் என்று ஒருவர் நீதிபதி என்ற பெயரில் அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார். இருந்தபொழுதும் இவருடைய தீர்ப்புக்கு முன்னர் உண்மையான நீதி ஒரு போதும் தலை வணங்காது என்று இந்த அவையில் தெரிவித்துக் கொள்வதாக வெங்கடேசன் முழங்கினார்.

காலமெல்லாம் தேர்தலை இலக்காகக் கொண்டு வஞ்சகமாகவும் சூழ்ச்சியாகவும் செயல்படுகின்ற ஆர்எஸ்எஸ்-பாஜக:

தொழிலாளர் நல சட்டங்கள் என்ற பெயரில் நான்கு தொழிலாளர் விரோத சட்டங்களை இயற்றி இருக்கும் பாஜக அரசினால் கோடிக்கணக்கான இளைஞர்கள் பாதிப்பு அடைந்திருக்கின்றனர்; அதைப்பற்றி விவாதிக்க இந்த அவையில் உங்களால் (பாஜக அரசு) முடியவில்லை; விமான போக்குவரத்து அடியோடு நிலைகுத்தி இருப்பதால் லட்சக்கணக்கானோர் பாதிப்பிற்கும் பெரும்பரிதவிப்பிற்கும் ஆளாகியுள்ளனர் அதைப் பற்றி நீங்கள் (ஆர் எஸ் எஸ் ஆளுந்தரப்பு) பேச முன்வரவில்லை; காற்று மாசால் புதுடில்லியே மூச்சடைத்துக் கிடக்கிறது; அதைப் பற்றி பேச மோடிக்கும் அவர் தலைமையிலான அரசுக்கும் எண்ணம் இல்லை.

வந்தே மாதரம் பாடலை 1875ம் ஆண்டு வங்கம், சமஸ்கிருதம் மொழிகளில் எழுதினார் பங்கிம் சந்திர சாட்டர்ஜி. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நாடு விவாதித்துக் கொண்டு இருக்ஸ்கும் இப்பாடலுக்கு இசை அமைத்துப் பாடியவர் ரவீந்திரநாத் தாகூர். பின்னர், தான் இயற்றிய ‘காரே வைரே’ என்ற நாவலிலும் இந்த பாடலைப் பற்றி தாகூர் விவாதித்து இருக்கிறார். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு ஆன்மாவாக அமைந்தது அப்பாடல் என்று தாகூர் குறிப்பிட்டது உண்மைதான்.

இந்தியா விடுதலை அடைந்தபின் நேரு உருவாக்கிய,அரசியல் சாசன நிர்ணயக் குழுவும் அந்தப் பாடலைப் பற்றி ஆலோசித்து முதல் இரு பத்திகளை மட்டும் எடுத்துக் கொண்டது; மீதி 4 பத்திகளைத் தவிர்த்து விட்டது.

இந்த நிலையில் ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பாடல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று குறிப்பிடும் பாஜக, தன் வழக்கமான பக்தி வேடத்துடன் இப்பொழுது தேசபக்தி வேடத்தையும் போடுகிறது; அதுவும் வங்க மொழியை பொறிவைத்து போடும் இவ்வேடம் அடியோடு பொருந்தவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டதை போல வந்தே மாதரம் எனும் முழக்கம் இந்திய விடுதலை போராட்டத்தின் ஆன்மாவாக அமைந்தது உண்மைதான்;

பங்கிங் சந்தர் சட்டர்ஜி

இந்த ஒரு முழக்கம் மட்டுமல்ல; வந்தே மாதரம் என்ற முழக்கத்திற்கு கடுகளவும் குறைந்தது அல்ல ஜெய்ஹிந்த் என்ற முழக்கம்; நீர்முழ்கிக் கப்பல் பொறியியலாளரும் நேதாஜிக்கு உதவியாக விளங்கியவருமான செண்பகராமன் உருவாக்கிய ‘ஜெய்ஹிந்த்’ முழக்கத்திற்கு எள்ளளவும் சளைத்ததல்ல ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்னும் முழக்கம்.

ஒவ்வொரு முழக்கத்தின் பின்னாலும் லட்சக்கணக்கான பேர் திரண்டனர்.

தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்கள், துப்பாக்கி இரவைக்கு நெஞ்சைக் காட்டியவர்கள், பீரங்கியின் வாயிலில் வைத்து சுட்டு தள்ளப்பட்டவர்கள், குதிரையின் காலடிக் குளம்பினால் எட்டி உதைக்கப்பட்டவர்கள், ஜாலியன் வாலாபாக் படுகொலையில் ஜெனரல் டயர் என்பவனால் சுட்டு வீழ்த்தப்பட்ட பல பத்தாயிரம் பேர், சிட்டகாங் ஆயுத கிடங்கை கொள்ளை அடித்தவர்கள், தண்டியில் உப்பு காய்ச்சியவர்கள், அதேபோல தூத்துக்குடியில் இருந்து கப்பலோட்டியவர்கள் என்று ஒவ்வொரு முழக்கத்துக்கும்-நடவடிக்கைக்கும் பின்னால் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்.

ஆனால் ஆர் எஸ் எஸ் பாஜகவினர் எந்த முழக்கத்திற்கு பின்னால் திரண்டனர் என்று வினவினார் வெங்கடேசன்.

இந்த முழக்கம் எல்லாம் யாருக்கு எதிராக எழுப்பப்பட்டதோ அவர்களுக்கு பின்னால் இருந்தவர்கள்; அவர்களின் மறைமுக ஆதரவாளர்களாக இருந்தவர்கள் நீங்கள் என்று பாஜக அமைச்சர்களையும் எம்பி-க்களையும் பார்த்து கையை முடிந்தமட்டும் நீட்டி கர்ச்சித்தார் வெங்கடேசன்.

தப்பி தவறி விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தால் கூட, தவறுதலாக பங்கேற்றி விட்டதாக மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்ததுடன் வெள்ளையர்-களிடம் ஓய்வூதியம் பெற்றதும் இந்த ஆர்எஸ்எஸ்-பாஜக கூட்டத்தினர்.

மேற்குறிப்பிட்ட முழக்கங்களை எழுப்பிய அனைவரும் விடுதலைப் போராட்டத்தில் நேரடியாக பங்கு எடுத்தவர்கள்; தங்கள் இன்னுயிரை ஈகம் செய்யத் துணிந்தவர்கள்.

அதேவேளை, இதே காலக்கட்டத்தில் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொள்ளாமல் ஒதுங்கி நின்றதுடன் அவர்களுக்கு மறைமுக சேவகம் செய்தவர்களும் ஆர் எஸ் எஸ் பாஜக தரப்பினர்.

இப்படி எல்லாம் இருந்துவிட்டு இப்பொழுது திடீரென்று வந்தே மாதரம் என்னும் முழக்கத்தை மேற்குவங்க தேர்தலை மனதில் கொண்டு எழுப்புவதால் இதைப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டி இருக்கிறது என்று உணர்ச்சி பொங்க பேசினார் இலக்கியவாணருமான வெங்கடேசன்.

இந்தியாவின் பன்முகத் தன்மை, பல கட்டங்களிலும் பல்லோராலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது; அதனால்தான் ஈஸ்வர அல்லா தேரே நாம் என்ற பாடல் எல்லோருக்கும் பிடிக்கிறது உங்களைத்(ஆர்எஸ்எஸ் பாஜக கூட்டத்தினர்) தவிர;

வந்தே மாதரம் என்னும் பாடலை விட ஈஸ்வர அல்லா தேரே நாம் என்ற பாடல் இன்னும் உச்சத்தை தொட்டது; என்றைக்காவது ஒரு நாளாவது நீங்கள் எல்லாம் (ஆர்எஸ்எஸ் பாஜக கூட்டத்தினர்) ஈஸ்வர அல்லா தேரே நாம் என்று உச்சரித்திருக்கிறீர்களா?

இப்படிப்பட்ட நிலையில் இப்பொழுது பாஜக தலைமையிலான மாநில அரசுகள் வந்தே மாதரம் பாடல் குறித்து முழுமையாக விவாதிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. வந்தே மாதரம் என்ற பாடலின் ஆறு சரணங்கள் குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று மராத்திய மாநில அரசு சுற்றறிக்கை அனுப்புகிறது.

மற்றவரின் உதடுகள் என்ன பாடல் பாட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சுதந்திரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது என்று பிரதமர் மோடி தரப்பினரை பார்த்து கைசொடுக்கி பேசினார் வெங்கடேசன்.

காயங்கள் ஆற்றப்பட வேண்டுமே அல்லாமல் அது மீண்டும் மீண்டும் கிளரப்படக்கூடாது. ஆனால், காயங்களை கிணறுவதுதான் உங்களுக்கு லாபம் தருகிறது என்பதால் நீங்கள் காயங்களை கிளறிக் கொண்டே இருக்கிறீர்கள்.

இந்தக் கட்டிடத்திற்குள் 12 திருவுருவச் சிலைகளை நீங்கள் வைத்திருக்கிறீர்கள். யார் யாருடைய சிலைகள் தெரியுமா அவை?; பிரம்மன், விஷ்ணு, சிவன், துர்கா மிதுனா, லிங்கேசன், யோகினி உள்ளிட்ட ஒரே சமயம் சார்ந்த சிலைகளை வைத்திருக்கிறேன் நீங்கள் எங்காவது இஸ்லாம் சார்ந்தோ கிறிஸ்தவம் சார்ந்தோ சிலைகளை நிறுவி இருக்கிறீர்களா.

இப்படி அப்பட்டமாக மத துவேஷமும் இன பாகுபாடும் புரிகிற உங்களுக்கெல்லாம் தேசப்பற்றைப் பற்றி பேச தகுதி இருக்கிறதா என்று வினவினார் வெங்கடேசன்

உங்களின் இந்த வரலாறுதான் இப்பொழுது, திருப்பரங்குன்றம் வரை நீள்கிறது

வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150-ஆவது ஆண்டு என்று நீங்கள் இப்பொழுது பம்மாத்து காட்டுகிறீர்கள் இந்த வரலாற்றை நீங்கள் எங்கே இருந்து எடுத்தீர்கள் என்று தெரியவில்லை.

அந்தப் பாடலின் முதல் இரண்டு சரணம் முதலில் எழுதப்பட்டது; அந்தப் பாடலின் ஏனைய 4 சரணங்களும் இன்னொருவரால் பின்னர் எழுதப்பட்டது. இவ்வாறு இரு கட்டங்களாக வெவ்வேறு தருணங்களில் எழுதப்பட்ட இப்பாடல் எந்தெந்த ஆண்டுகளில் இயற்றப்பட்டது என்ற விவரமே தெரியாத நிலையில் 150 ஆண்டுகள் வரலாறு கொண்டது இந்தப் பாடல் என்பதி உங்களால் எப்படி உறுதி செய்ய முடிகிறது? உங்களுக்கே பழக்கமான-வழக்கமான பொய்க் கட்டமைப்புதான் இது;

காரணம் உங்களுக்கெல்லாம் ஒரு தேவை இருக்கிறது.

வந்தே மாதரம் என்னும் பாடலை இயற்றப்பட்டது வங்க மொழியில்; அந்த வங்க மொழியை தாய்மொழியாக கொண்ட மக்கள் வாழ்கின்ற மாநிலம் மேற்கு வங்காளம்; அங்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் அந்தப் பாடலை ஒரு தேர்தல் ஆயுதமாக பயன்படுத்த இப்பொழுது வஞ்சகமாக நீங்கள் எல்லாம் முனைந்திருக்கிறீர்கள் என்று மோடி தரப்பினரை பார்த்து கையை உயர்த்தி வழக்காடும் விதமாக உரையாடினார் வெங்கடேசன்.

காலமெல்லாம் உங்களின் தேவை தேர்தலில்பெறும் தில்லுமுல்லு வெற்றியாகவே இருக்கிறது,

பிரதமர் மோடி பாரதியின் பாடலை நினைவு படுத்தியதால் இந்த வேளையில் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன்; 1908ல் வந்தே மாதரம் எனும் வங்க மொழி பாடலை தமிழில் மொழி பெயர்த்தபொழுது

தாயை கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சியிரார்
வாயைத் திறந்தே சும்மா சொல்வார் ‘வந்தே மாதரம்’
என்று!

மாகவி பாரதி அவ்வாறு குறிப்பிட்டது, உங்களைப் போன்றோரை மனதில் கொண்டுதான் என்று இந்த அவையில் பதிவு செய்கிறேன் என்று பிரதமர் மோடியை பார்த்து குறிப்பிட்ட வெங்கடேசன், தன் குளிர்கால கூட்டத் தொடர் உரையை நிறைவு செய்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை