Thursday, April 23, 2026

தேசிய முன்னணியில் ம.இ.கா.வின் எதிர்காலம்! -தான்ஸ்ரீ க.குமரன்

மஇகா. எண்பதாவது அகவையில் தன் பயணத்தைத் தொடங்கி இருக்கிறது.. .!

1955அம் ஆண்டுமுதல் கூட்டணியிலும் 1973-ஆம் ஆண்டு முதல் தேசிய முன்னணியிலும் அம்னோ-ம.சீ.ச.வுடன் இணைந்து அரசியலில் பயணித்த ம.இ.கா. தன் பாதைகளையும் பயணத்தையும் மறு ஆய்வு செய்யும் நிலைக்கு வந்துள்ளது.

2018-இல் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்திற்குப் பிறகு ம.இ.கா. உறுப்பினர் களிடையே மட்டுமல்லாது பொதுவாக எல்லா அரசியல் கட்சிகளிடமும் இத்தகையவொரு சிந்தனை மாற்றம் ஏற்ப்பட்டிருக்கிறது. ம.இகா.வை இந்தியர்களின் பிரதிநிதி, தாய்க்க்ட்சி என்று கூறியபோதெல்லாம் அதனை மறுத்தவர்கள் எதிர்த்தவர்கள் எல்லாம் இன்று ம.இ.கா.வின் நிலை குறித்து, அதன் பயணாம் குறித்து ஆலோசனை கூறிவருகின்றனர்.

இரண்டாம் உலகப் போருக்குப்பின் 1946-ஆம் ஆண்டில் இந்தியர்களின் அரசியல், சமூக நலன் பேண ம.இ.கா. அமைக்கப் பட்டிருந்தாலும் அன்றைய ம.இ.கா. தலைவர்கள் இனவாத அரசியலை ஏனோ ஆதரிக்கவில்லை.

காலனி அரசாங்கம் 1952-ல் கோலாலம்பூர் முனிசிபல் கவுன்சிலின் நான்கு தொகுதி களுக்கான தேர்தலை அறிவித்தபோது. அந்த தேர்தலை சந்திக்க அம்னோவும்-மலாயன் சீனர் சங்கமும் தங்களுக்குள் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொண்டபோது ம.இ.கா.அந்த கூட்டில் . இணையவில்லை.
அம்னோ தலைவர் ட்த்தோ ஓன் பின் ஜாபார், அம்னோவில் எல்லா இனத்தவர்களையும் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப் பட்டதால், தலைமைப் பதவியைத் துறந்து, எல்லா இனத்தவரையும் உறுப்பினர் களாகக்கொண்டு தோற்றுவித்திருந்த மலாயா சுதந்திர கட்சியுடன் இணைந்து ம.இ.கா. தேர்தலை சந்தித்தது.

பங்சார், இம்பி, பெட்டாலிங், செந்தூல் என நான்கு தொகுதிகளுக்கு, ஒரு தொகுதிக்கு மூவர் வீதம் பன்னிரண்டு உறுப்பினர்களுக் கான தேர்தல் அது. நான்கு தொகுதிகளில் பன்னிரண்டு இடங்களில் போட்டியிட்ட அம்னோ-ம.சீ.ச. கூட்டணி இம்பி, ,பெட்டாலிங், செந்துல் மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட ஒன்பது இடங்களில்லும் வாகை சூடியது.

பங்சார் தொகுதியில் கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய பெண்மணி எல்லிசி சோமசுந்தரம் வெற்றி வாய்ப்பை இழந்தார், பங்சார் தொகுதியில் மலாயா சுதந்திர கட்சி சின்னத்தில் போட்டியிட்ட ம.இ.கா. தலைவர் குண்டன்லால் தேவாசர், தேவகி கிருஷ்ணன் இருவருடன் சுயேச்சையாக போட்டியிட்ட் எச்.சி,இ,சிங்கம் என்ற ஒரு தமிழரும் வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து அம்னோ-மசீச கட்சிகள் கூட்டணி கட்சி என்ற பெயரில் பதிவு செய்யாமல் புரிந்துணர்வு அடிப்படையில் அரசியல் நடத்திவந்தனர். நாட்டில் பொதுத் தேர்தல் நடத்துதல் போன்ற பல கோரிக்கைகளுடன் 1954-ஆம் ஆண்டில் காலனி அமைச்சரைக் காண கூட்டணி குழுவினர் இலண்டன் சென்றனர்.

இக்குழு இலண்டன் சென்ற நிலையில், மலாயாவில் தேர்தல் நடைபெறும் என்று அரசாங்கம் அறிக்கை வெளியிட்டதால் அவர்கள் காலனி நாடுகளுக்கான அமைச்சரை சந்திக்காமல் திரும்பிவிட்டனர் என்பது செய்தி.

1954- ஏப்ரல் திங்களில் பினாங்கு பிறை நகரில் நடைபெற்ற ம.இ.கா.வின் எட்டாவது தேசிய மாநாட்டின் நிறைவில் ‘பொதுத் தேர்தலை முன்னிட்டு எங்கு எப்பொழுது அவசியம் ஏற்படுகிறதோ அப்பொழுது ம.இ.கா. மற்ற கட்சிகளுடன் ஓர் உடன்பாட்டுக்கு வருவது’ என்ற தீர்மானத்தை கட்சியின் மேனாள் தலைவர் க.இராமநாதன் முன் மொழிந்தவுடன் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்ட்து.

‘எல்லாத் தேர்தல்களிலும் ம.இ.கா .தனித்தே போட்டியிடுவது’ என்று கிள்ளான் பேராளர் வெ.மாணிக்கவாசகம் (தான்ஸ்ரீ) முன் மொழிந்த திருத்த தீர்மானமானத்திற்கு ஆதரவாக 33 வாக்குகளும் எதிராக 19 வாக்குகளும்பெற்று எல்லா தேர்தல்களிலும் ம.இ.கா. .தனித்தே போட்டியிடுவது என்று பொதுப்பேரவை முடிவு செய்தது.

தனித்து போட்டியிடுவது என்ற தீர்மானத்திற்கு எதிராகவும் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கவேண்டும் என்றும் பல ம.இ.கா. . கிளைகள் பொதுக்கூட்டம் நடத்தி ஆதரவுத் தீர்மான்ங்களை நிறைவேற்றின.

பொது மக்களும் கூட்டணியில் சேருவதற்கான ஆதரவான கருத்துக்களை நாளிதழ்வழி தெரிவித்தனர்.

கூட்டணியில் சேர்வதற்குக் கட்சியிலிருந்தும் சமுதாயாத்திடமிருந்தும் கிடைத்துவரும் ஆதரவைப் பார்த்த ம.இ.கா. 10.10.1954-இல் நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்தில் தேசிய மாநாட்டின் முடிவிற்கு மாறாக கூட்டணியில் இணைவதற்கான வழிவகைகளை ஆராய கூட்டணி செயலாளர் டத்தோ டி.எச்.தானுடன் பேச்சுவார்த்தை நடத்த கட்சித் தலைவர் கே.எல்.தேவாசர் தலைமையில், க.இராமநாதன், க.குருபாதம் (தான்சிறீ)வெ.மாணிக்கவாசகம், (தான்சிறீ) எஸ்.ஓ.கே.உபயதுல்லா உள்ளிட்ட ஐவர் கொண்ட குழுவை அமைத்தது.

இக்குழுவினர் அம்னோ-ம.சீ.ச. தலைவர்கள். கூட்டணியின் பொதுச் செயலாளர் டத்தோ டி.எச்.தானுடன் பல நாட்கள் தொடர் கருத்துப் பரிமாற்றம் நடத்திய பின்னர் 30.3.1955-இல் அதிகாரபூர்வமாக ம.இ.கா. கூட்டணியில் இடம் பெற்றது.

1955-ஜூலையில் நடைபெற்ற கூட்டரசு சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியுடன் இணைந்து ம.இ.கா. போட்டியிட்டது.

நாடு சுதந்திரம் அடைந்தபின் மூன்று கட்சிகளும் இணைந்து 30.10.1957ல் கூட்டணியை பதிவு செய்தன.

2022ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப்பிறகு 222 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் தேசிய முன்னணியின் பலம் அம்னோ 26, மசீச.2, ம.இ.கா.1,பி.பி.ஆர்.எஸ்.1 மொத்தம் 30 இடங்களைக்கொண்ட சிறிய கூட்டணியாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் பக்காத்தான் ஆட்சியில் இடம்பெற்றது.

பாரிசானில் உள்ள அம்னோவிற்கு மட்டும் ஆட்சியில் பங்கு, மற்ற மூன்று கட்சிகள் ம.இ.கா. உட்பட ஆதரவு என்ற நிலைமைதான் நிலவி வருகிறது.

இந்த சூழ்நிலையில் ம.இ.கா.வின் நிலைப்பாடு என்ன என்பதனை ம.இ.கா.பேராளர்கள் மாநில மாநாடுகள் அளவிலும், தேசியப் பேராளர் மாநாட்டிலும் முடிவு செய்தாலும், எண்பது ஆண்டுகளுக்குமுன் இந்தியர் நலன் பேண தோற்றுவிக்கப்பட் ம.இ.கா. , இந்திய சமுதாயத்தின் வாழ்விலும் தாழ்விலும் பின்னிப் பிணைந்து செயல்பட்டு வருகிற கட்சி அடைவிலும் நல்ல கட்டமைப்பு, பொருளாதாரம், உறுப்பினர் எண்ணிக்கை மட்டுமல்லாது நாட்டு சுதந்திரப் போராட்டத்திலும் பங்குபெற்ற கட்சி என்ற முறையிலும் கட்சி உறுப்பினர்களின் நலன் மட்டுமல்லாது இந்திய சமுதாயத்தின் நலனையும் மனதிலிறுத்தி ம.இ.கா. மத்திய செயலவியின் முடிவு அமைய வேண்டும்.

இந்திய சமுதாயத்தின் நன்மைகருதி, பல இன சமய மக்களின் நலனை மனதிலிறுத்தி முடிவெடுக்கக்கூடிய சக்தியையும், தூரநோக்கு சிந்தனையையும் ம.இ.கா.தலைவர்களுக்கும் மத்திய செயலவை உறுப்பினர்களுக்கும் எம்பிராட்டி கோலாலம்பூர் அருள்மிகு மகாமாரித்தாயும், தமிழ்க் கடவுளாய் தரணியை காத்திடும் செந்தூல் அருள்மிகு தண்டாயுதபாணியும் அருள்வார்களாக!.

காராணம், கோலாலம்பூர் மாமாரியம்மையின் சந்நிதியில் கருக்கொண்டு செந்தூல் முருகன் மலரடியில் உரு கொண்ட கட்சிதான் மலாயன் இந்தியன் காங்கிரஸ் என்ற பேரியக்கம்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை