
ஒற்றுமை மடானி அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் எந்த நேரமும் அறிவிப்பார் என்று அண்மைக் காலமாக தேசிய அரசியல் வட்டத்திலும் பொது வெளியிலும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
முதலில் வெளியுறவு அமைச்சுக்கு பொறுப்பேற்று பின்னர் உயர்கல்வித் துறைக்கு மாற்றப்பட்ட டத்தோஸ்ரீ முனைவர் ஜம்ரி அப்துல் காதர், “பிரதமர் விரைவில் அமைச்சரவை மாற்றத்தை அறிவிக்க இருக்கிறார்” என்று அறிவிப்பு செய்ததிலா இருந்து இந்த மாற்றம் குறித்து பரவலாக தேசிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று, டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பிரதமர் அறிவித்த அமைச்சரவை மாற்றத்தில் எவரும் எதிர்பாராத மாற்றத்தை அன்வார் அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு வளர்ச்சித் துறை துணை அமைச்சராக இருந்த டத்தோஸ்ரீ இரா. ரமணன் மனித வளத்துறை அமைச்சராக உயர்வு பெற்றிருக்கும் வேளையில் இதுவரை அந்த அமைச்சகத்தை வழிநடத்தி வந்த ஸ்டீபன் சிம், ரமணன் துணை அமைச்சராக இருந்த துறைக்கு அமைச்சராக மாற்றப்பட்டிருக்கிறார்; தொழில் முனைவோர் கூட்டுறவு வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த எவோன் பெனடிக், சபா மாநில அரசியல் காரணமாகவும் அந்த மாநிலத்தின் நிதி ஆதாரம் குறித்த அதிருப்தியினாலும் தான் வகித்த அமைச்சர் பொறுப்பைத் துறந்தார். சபா உப்கோ(UPKO) கட்சியின் தலைவருமான எவோன், சபா மாநிலத்திற்குரிய நாற்பது விழுக்காட்டு வருமானம் தொடர்பில் மடாணி அரசாங்கத்தின் மீது அதிருப்தி தெரிவித்து சபா மாநில 17-ஆவது சட்டமன்ற தேர்தலுக்கு முன், பதவியைத் துறந்தார்.

அதைப்போல தித்திவங்சா எம்பி ஜொஹாரி அப்துல் கனி, தொழில் வர்த்தகம் அந்நிய முதலீட்டுத் துறை அமைச்சராக மாற்றப்பட்டு இருக்கிறார்; எல்லாவற்றுக்கும் மேலாக, எவரும் சற்றும் எதிர்பாராத வகையில் இதுவரை இளைஞர் விளையாட்டு துறை அமைச்சுக்கு பொறுப்பேற்று இருந்த ஹன்னா இயோ, பிரதமர் துறையின்கீழ் இயங்கும் கூட்டரசு மேம்பாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்.

இதுவரை அவ்வமைச்சகப் பொறுப்பில் இருந்த டாக்டர் ஸலேகா முஸ்தஃபா அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். இவர், செக்கிஞ்சாங் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வானவர். மக்கள் நீதிக் கட்சி, பி கே ஆர்-ஐ சேர்ந்தவரும் கூட;
இளைஞர் விளையாட்டு அமைச்சகத்திற்கு சுங்கைப் பட்டாணி மக்கள் பிரதிநிதி தவ்ஃபிக் ஜொகாரி புதிதாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஜோகாரி அப்துல் கனி இதுவரை வகித்து வந்த தோட்டத் தொழில் மூலப்பொருள் அமைச்சுக்கு அம்னோவின் மகளிர் தலைவி நொரைனி அகமது புதிதாக பொறுப்பேற்கிறார்.

2022 நவம்பர் 19 பொதுத் தேர்தல் முடிவில், எந்தக் கூட்டணிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், நாட்டின் அரசியல் நிலைத்தன்மை கருதி அப்போதைய மாமன்னர், நம்பிக்கைக் கூட்டணியும் தேசிய முன்னணியும் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாட்டை செய்தார்.
அதன் அடிப்படையில் தான் எதிரும் புதிருமாக இருந்த இவ்விரு கூட்டணிகளும் இணைந்து ஒற்றுமைக் கூட்டணி என்ற பெயரில் வரலாற்றில் இல்லாத வகையில் ஆட்சியை அமைத்தன.
அன்வார் தலைமையிலான இந்த ஆட்சியின்
இப்போதைய இரண்டாவது அமைச்சரவை மாற்றத்தில் மிக முக்கியமாகக் கருதப்படுவது, ஜோகூர் பாரு மக்கள் நீதிக் கட்சி மக்கள் பிரதிநிதியான அக்மால் நாசீருக்கு வழங்கப்பட்ட பொருளாதார அமைச்சக பொறுப்புதான்.

மக்கள் நீதிக் கட்சி- பி.கே.ஆர். தேர்தலில் கட்சி தலைமையால் தனக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக கருதிய டத்தோஸ்ரீ ரஃபிஸி ரம்லி, தன்னுடைய அதிருப்தியை தெரிவிக்கும் முகமாக அமைச்சக பொறுப்பை துறந்தார்.
நாட்டின் முக்கியமான பொறுப்பான பொருளாதாரத் துறைக்கு, மாற்று அமைச்சரை நியமிக்க வேண்டும் என்பதில் பிரதமர் உறுதியாக இருந்திருப்பாரே யானால், அதை ஆறு மாதம் கழித்து செய்திருப்பது மிகவும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது;
ஒன்று, அந்த அமைச்சகத்தை நிதி அமைச்சகத்துடன் இணைத்திருக்க வேண்டும்; அல்லது அப்போதே புதிய அமைச்சரை நியமித்திருக்க வேண்டும்; எதையும் செய்யாமல் மற்றவர் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு, ஆறு மாதம் கழித்து புதிய அமைச்சரை நியமிப்பது அன்வாரின் தலைமையிலான இந்த அமைச்சரவைக்கு ஒரு கறையாகவே கருதப்படுகிறது.
இந்தச் சூழலில், சபா மாநில மக்கள் நீதி கட்சி பி கே ஆர் தலைவர், முஸ்தஃபா சக்முட்-ஐ, சபா-சரவாக் மாநிலங்கள் நல அமைச்சராக பதவி உயர்த்தி இருக்கிறார் அன்வார்; சக்முட், இதுவரை உயர்க் கல்வித்துறை துணை அமைச்சராக செயல்பட்டார்.
டத்தோ முனைவர் நைம் மொக்தாரும் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் துறையின்கீழ் இயங்கும் இஸ்லாம் சமய மேம்பாட்டுத் துறைக்கு பொறுப்பு ஏற்று இருந்த நைம் மொக்தார், டிசம்பர் 09-ஆம் நாள், நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இரண்டாவது தவணைக்கு பதவி உறுதிமொழி ஏற்றார். அவருடன் ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமியும் இரண்டாவது தவணைக்கு பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
இந்த இருவருமே தத்தம் பொறுப்பில் தொடர்வர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய அமைச்சரவை மாற்றத்தில் இவ்விருவருமே விடுபட்டு இருப்பது, அரசியல் வட்டாரத்தில் வியப்பாக பார்க்கப்படுகிறது.
சரஸ்வதியின் இடத்திற்கு சிகாமாட் மக்கள் பிரதிநிதி யுவனேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.


