Monday, May 25, 2026

அன்வாரின் மூன்றாவது அமைச்சரவையிலும் மிஞ்சுவது ஏமாற்றமே!

நாட்டின் 15 ஆவது நாடாளுமன்ற தவணைக்குள் பிரதமர் டத்தோ அன்வார் அமைத்த மூன்றாவது அமைச்சரவையிலும் தமிழருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

மலேசிய இந்திய சமுதாயம் என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும் ஏறக்குறைய 85 விழுக்காட்டினர் தமிழராகத்தான் இருக்கின்றனர்.

மலேசியாவில் மட்டுமல்ல; பொதுவாக உலக அளவில் வாழ்கின்ற சீக்கிய சமுதாயம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் தங்களை இந்தியர் என்ற கட்டமைப்புக்குள் கொண்டு வருவதில்லை.

இனம் மொழி சமய அடிப்படையில் தங்களை தனித்த இனமாகவே வகைப்படுத்திக் கொள்வர். மலேசியவாழ் சீக்கியரும் அப்படித்தான்.

ஆனால் இந்திய சமுதாயத்திற்கான நிதி ஒதுக்கீடு, மானியம், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட சலுகைகளில் பங்கு போடுவதற்கு மட்டும் வந்து இணைந்து கொள்வார்கள்.

இந்த நடைமுறையெல்லாம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு நன்கு தெரிந்திருந்தும் அமைச்சராக இருக்கிற கோபிந்த் சிங்கும் பினாங்கு துணை ‘முதல்வர்-2’ பொறுப்பு வகிக்கின்ற இவரின் சகோதரரும் ஜனநாயக செயல் கட்சி-ஜசெக ஒதுக்கீட்டில் பொறுப்பு வகிப்பவர்கள் என்று காரணம் கூறி, ஒதுங்கிக் கொள்ள முடியாது.

நேற்று முழு அமைச்சராக நியமிக்கப்பட்ட டத்தோஸ்ரீ இரா ரமணனும் ஏறக்குறைய பாதி கோபிந்த் சிங்கை போலத்தான்.

யாழ்ப்பாணத் தமிழர் மரபைச் சேர்ந்தவர் இவர் இப்பொழுதுகூட மலேசியத் தமிழ் சமூகத்தில் அன்றாட நிகழ்ச்சிகளில் ரமணன் எங்காவது தலை காட்டுகிறாரா?; கலந்து உறவாடுகிறாரா என்பதை பிரதமர் அன்வாரே கண்டுபிடித்து சொல்லட்டும்.

இவர் மட்டுமல்ல; பொதுவாக பிகேஆர் கட்சியை சேர்ந்த எந்த இந்தியத் தலைவரும் தமிழ்ச் சமூகத்திற்கு அந்நியப்பட்டு தான் நிற்கின்றனர்.

அன்றாட இலக்கிய-சமூக-சமய நிகழ்ச்சிகளில் எவரும் தலை கட்டுவதே இல்லை; அவர்களிடம் தமிழியப் பாங்கும் இல்லை.

இந்த நிலையில் ரமணனின் நிலை இன்னும் மோசம்.

அன்வாரின் இரண்டாவது அமைச்சரவையில், தொழில் முனைவோர்- கூட்டுறவு மேம்பாட்டுத் துறைக்கு துணை அமைச்சராக நியமிக்கப்பட்ட ரமணன், வகை தொகை இன்றி கடன் வசதி அளித்ததையே அடிக்கடி செய்தியாளர் கூட்டத்தின் மூலம் பறை சாற்றிக் கொண்டே இருந்தார். இது ஒரு வகையில், நலிந்த இந்திய சமுதாயத்தை மேலும் கடன்கார சமுதாயமாக மாற்றுவதாகும்.

இதில் என்ன மறுமலர்ச்சி ஏற்படப் போகிறது என்று தெரியவில்லை. மாறாக, ஏன் நிதி உதவியோ அல்லது மானியமோ வழங்கப்படுவதில்லை?

மொத்தத்தில் தமிழில் பேசி, தமிழ்ச் சமூகத்துடன் ஒட்டி உறவாடுகின்ற தலைவர் ஒருவரை தன்னுடைய அமைச்சரவையில் இணைத்துக் கொள்ள அன்வாருக்கு விருப்பம் இல்லையா அல்லது வாய்ப்பில்லையா என்பது தெரியவில்லை. வாய்ப்பு இருந்தும் ஒருவேளை விருப்பம் இல்லாமல் இருக்கலாம்.

மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு சரவணனனுக்கு அமைச்சர் பதவி வழங்குவதில் அன்வாருக்கு மாறுபட்ட கருத்து இருக்கக்கூடும்.

பொதுவாக அன்வார் சிறையில் இருந்த காலத்தில் மஇகாவின் பார்வையும் தலைவர்களின் விமர்சனமும் ஓரொரு வேளையில் சற்று கடுமையாக இருந்தது என்னவோ உண்மைதான்.

அது, துன் சாமிவேலனார், மலேசிய இந்திய சமுதாயத்திற்கு குறிப்பாக தமிழருக்கு தலைமை ஏற்றிருந்த சூழல்.

அதைவிட 2022 நவம்பர் 19 தேர்தலுக்குப் பிறகு எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலையில் ஆட்சி அமைப்பதில் ஐந்தாறு நாட்களுக்கு இழுப்பறி நிலை நீடித்தது.

அந்த சமயத்தில் சரவணன், தன்னை முதல் முதலில் முழு அமைச்சராக்கிய மேனாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் மீது கொண்டிருந்த அபிமானத்தின் காரணமாகவோ என்னவோ அவர் பிரதமராக வருவதற்கு ஆதரவு தெரிவித்தார்; அதுவும் தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சி என்ற முறையில் அம்னோ, மசீச கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து இவரும் ஆதரவு தெரிவித்திருந்தார்.
அந்த அரசியல் நகர்வு, அன்வாருக்கு ஒருவேளை கசப்பான எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.

2018 ஏப்ரல் மாத அளவில் மலேசிய சிறைத்துறை வெளியிட்ட அறிக்கையில் அந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ஆம் நாள் சிறைவாசம் முடிந்து அன்வர் வெளியே வருவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அன்வர் சிறையில் இருக்கும் காலத்திலேயே 14-ஆவது போதுத் தேர்தலை நடத்தி அடுத்த அமைச்சரவையையும் அமைத்துவிட வேண்டும் என்ற உந்துதலில்- உத்தியில்தான் அந்த ஆண்டு மே மாதம் பத்தாம் நாள் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று ஏப்ரல் மாதம் ஒன்பதாம் நாள் அறிவித்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜுப், அதேநாளில் நாடாளுமன்றத்தையும் கலைத்தார்.

அதற்குப் பின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்த நேரத்தில்தான் சிறைத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஜூன் மாதம் 12இல் அன்வார் விடுதலை ஆவார் என்று தெரிவிக்கப்பட்டது.

அடுத்த நாளே அதை மறுத்து அப்போதைய துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாகிட் அமிடி,(இவர் இப்போதும் துணை பிரதமர்தான்; எப்போதும் இவருக்கு நாவலர் நெடுஞ்செழியனைப் போல இரண்டாம் இடம்தான் போலிருக்கிறது) அறிக்கை வெளியிட்டார்.

ஜூன் மாதம் 12ஆம் நாள் அன்வார் சிறைவாசம் முடிந்து வெளியே வருவார் என்பது நிச்சயம் அல்ல; முறையாக கணக்கிட்டால் அவர் இன்னும் அதிக நாட்களுக்கு சிறையில் இருக்க நேரிடலாம் என்று பொடி வைத்து பேசினார். இத்தனைக்கும் அம்னோ கட்சிக்குள்ளேயே துன் மகாதீரை எதிர்த்து அன்வார் அரசியல் நடத்திய காலத்தில் அன்வாரின் தலைமைத் தளபதியாக இருந்தவரே இதை ஜாகிட் அமிடி என்பது குறிப்பிடத்தக்கது

2014 தேர்தல் முடிவோ, இவரும் நஜுப்பும் நினைத்தபடி அமையவில்லை;ஆட்சி மாறியதால் மே மாதம் 16ஆம் தேதியே அன்வார் சிறைவாசம் முடிந்து வெளியே வந்தார் என்பது வேறுகதை.

இங்கே குறிப்பிட விரும்பும் கதை வேறு; அப்படிப்பட்ட ஜாகிட் அமிடியையேப் பொறுத்துக் கொண்டு தன்னுடைய அமைச்சரவையில் துறை பிரதமர் பதவியை வழங்கியுள்ள அன்வார், ஏன் சரவணனை ஏற்றுக்கொள்ள கூடாது?

சரவணனுக்கும் ஓர் அரசியல் நிலைப்பாடு-நெருக்கடி இருந்திருக்கலாம் அல்லவா? அந்த சூழலுக்கு ஏற்றவாறு அவர் அப்போது முடிவெடுத்தார்.

பொதுவாக அரசியலில் நேற்றைய கணக்கு இன்று செல்லுபடி ஆகாது.

அரசியல் களத்தில் நாளுக்கு நாள் காட்சியும் கணக்கும் மாறிக்கொண்டே இருக்கும்; உறவும் பிரிவும் நிகழ்ந்து கொண்டே இருப்பதை அன்வர் ஏனோ உணரவில்லை போலும்; உணர்ந்தாலும் பகை உணர்வு மேலோங்கி இருக்கிறது போலும்!

இந்த ஒரு விடயத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்தைப் போன்ற மனநிலையை அன்வாரும் கொண்டிருக்கிறாரோ என்று கருத இடம் இருக்கிறது.

சென்னையில் தனக்கு சொந்தமான அழகர் மண்டபம் திமுக ஆட்சியில் உடைக்கப்பட்டதையே காலமெல்லாம் மனக்கண்முன் நிறுத்திக் கொண்டு, அதன் அடிப்படையில் அரசியல் நடவடிக்கையை மேற்கொண்ட விஜயகாந்த் கடைசியில் தோற்றேப் போனார். அந்த மண்டபம் அரசாங்க நிலத்தையும் இணைத்து கட்டப்பட்டதாக காரணம் சொல்லப்பட்டாலும் அந்த நேரத்தில் கலைஞருக்கு எதிராக விஜயகாந்த் மேற்கொண்ட அரசியலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மறு நடவடிக்கையாக அமைந்தது என்னவோ உண்மைதான்

யாரை அடித்தால் எவருக்கு வலிக்கும் என்பதை நன்கு உணர்ந்த அரசியல் வல்லி இந்திரா காந்தி, தான் கொண்டு வந்த மிசா-(Maintenance of Internal Security ACT) என்னும் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தை கலைஞர் திரும்ப பெறவிட்டால், “I will crush the DMK”என்று கொக்கரித்தபடியே செய்தும் காட்டினார்.

1976 ஜனவரி 30 ஆம் நாள் திமுக ஆட்சியை கலைத்த இந்திரா, புது மாப்பிள்ளை ஆக இருந்த இன்றைய முதல்வர் மு க ஸ்டாலினை வளைத்து சிறையில் தள்ளி போலீசை ஏவி மிருகத்தனமாக தாக்க வைத்தார்.

அதில் வஞ்சகமான உள்நோக்கம் இருந்தது.

திமுக கொள்கை மறவர்கள் மட்டுமல்ல; கலைஞரின் அபிமானியருமான சிட்டிபாபுவும் பால தண்டாயுதமும் ஸ்டாலினுக்கு விழுந்த அடியை தாங்கள் வாங்கியே மடிந்தனர் சிறை கொட்டடியில்.

அப்படி இருந்தும் அடுத்த நான்காண்டுகளில் “நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சியைத் தருக!!” என்று 1980ல் மெரினா கடற்கரைக்கு இந்திராவை அழைத்து அரசியல் உறவு கொண்டார் கலைஞர்.

இதுதான் நிதர்சன அரசியல்!

இதையெல்லாம் உணராத அன்வார், இன்னமும் சரவணன்மீது காழ்ப்பு கொள்வதில் பொருள் இல்லை.

அண்மைய தீபாவளி சமயத்தில் அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் நாட்டின் பாரம்பரிய தலைநகரான கோலாலம்பூரில் அமைந்துள்ள தமிழர்களின் வர்த்தகப் பகுதியான பிரிக் ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் அலங்கார விளக்குகள் இல்லை; பண்டிகைக் கால வாழ்த்துப் பதாகை இல்லை; ஆண்டுதோறும் நடைபெறும் கலை நிகழ்ச்சியும் இல்லாமல் போனது.

இருந்தபொழுதும் பதவியில் இல்லாத சரவணனின் பதாகைதான் எங்கும் தென்பட்டன.

இப்பொழுதும் அந்தப் பகுதியின் நாயகனாக சரவணன்தான் வலம் வருகிறார்.

அவர் அரசியல்வாதி மட்டுமல்ல; இனம் மொழி சமயம் சார்ந்த தலங்களில் அன்றாடம், ஏன் மணிக்கு மணி அப்பகுதி வர்த்தக சமுதாயத்துடன் உறவாடி வருகிறார்.

ஆனால் ரமணன் இவருக்கு நேர் மாறாக பத்திரிகையாளர்களை மட்டும் சந்தித்துக் கொண்டு சந்து முனை சிந்து பாடியாக இருக்கிறார்.

மலேசியத் தமிழர்களுடன் ஒட்டும் உறவும் இல்லாத அவரை முழு அமைச்சராக நியமித்ததில் அன்வாருக்குத்தான் நட்டம்!

காலம் என்னும் நல்லாள் கட்டியம் கூறுவாள் அனைத்திற்கும்!
காத்திருப்போம் காண்பதற்கு!!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை