Sunday, April 19, 2026

வங்கதேச இந்துக்களின் அவலம்தீர 7-அம்சத் திட்டம்எம்.ஏ.பி. – ஹிண்ட்ராஃப் முன்மொழிவு!

கோலாலம்பூர், டிச.14:
வங்கதேச தந்தை ஷேக் முஜிஃபூர் ரகுமானின் மகள் ஷேக் ஹசினா தலைமையிலான ஆட்சி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கவிழ்ந்தபின், அந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை இந்துக்கள், தீவிரவாத மதக் குழுக்களின் தொடர்தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். அங்கு வாழ்கின்ற இந்துக்களின் பெருந்துயரமும் அவலமும் தீர, மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபியும் ஹிண்ட்ராஃப் சரித்திர இயக்கமும் இணைந்து 7-அம்சத் திட்டத்தை முன்மொழிந்துள்ளன.

பன்னாட்டு மனித உரிமை தினம் தொடர்பில் டிசம்பர் 10ஆம் நாள், மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபியும் ஹிண்ட்ராஃப் இயக்கமும் கோலாலம்பூர் பிரிக்ஃபீல்ட்சில் உலக மனித உரிமை நாள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தன. முக்கிய அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், மனித உரிமை வழக்க-றிஞர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என அதில் கலந்துகொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர், வங்கதேச இந்துக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் ஆதரவாக முழக்கம் எழுப்பினர்.

அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தலைவரும் ஹிண்ட்ராஃப் இயக்கத் தலைவருமான பொன்.வேதமூர்த்தி, பிரதமர் அன்வார் இப்ராகிம் இதில் தலையிட்டு, வங்காள தேச இந்துக்களின் பாதுகாப்பை அந்த நாட்டின் இடைக்கால ஆட்சியாளர் முகமட் யூனுஸ் உறுதிசெய்யும்படி கேட்க வேண்டும்; பாலஸ்தீனர்களின் அவலத்திற்காக குரல்கொடுக்கும் அன்வார், வங்கதேச இந்துக்களின் துயரைக் கண்கூடாக கண்டபின்னும் அவர்களுக்காக குரல் கொடுக்காமல் ஏன் அமைதி காக்கிறார் என்றும் வினவினார்.

வங்க தேசத்தில் சிறுபான்மையினர் தாக்கப்படுவதைத் தடுப்பதற்கு அங்குள்ள இடைக்கால அரசு தவறியதுடன் அவர்களுக்கு உரிய பாதுகாப்பும் அளிக்கவில்லை; இதை ஆட்சேபித்து அமைதிவழி போராட்டம் நடத்திய துறவியான சின்மயி கிருஷ்ண தாசிற்கு எதிராக பொய்க்குற்றம் சுமத்தி சட்டத்திற்கு புறம்பாக கைதுசெய்து தடுத்து வைத்தனர்; அவரை பிணையில் எடுப்பதற்கு முயற்சி செய்த வழக்கறிஞர்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது; இத்தகைய நிலையில், வங்கதேச சிறுபான்மை மக்களின் அவலம்குறித்த உண்மையைப் பேசுவதற்கு அன்வார் ஏன் தயங்குகிறார் என்றும் அந்தக் கூட்டத்தில் பொன்.வேதமூர்த்தி பேசினார்.

இதில் மிகவும் கொடுமையானது, கிருஷ்ண தாசை பிரதிநிதிக்கும் வழக்கறிஞர்களை இஸ்லாமிய வழக்கறிஞர்கள் வெளிப்படையாக மிரட்டியது-தான்; கிருஷ்ணதாஸ், சட்டத்திற்குப் புறம்பாக தீவிரவாத முத்திரை குத்தப்பட்டுள்ளார்.

அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் முக்கியத்துவத்தை பொன்.வேதமூர்த்தி வலியுறுத்தினார். இந்தத் தீர்மானங்கள் வெறும் முன்மொழிவுகள் மட்டுமல்ல, வங்கதேச சிறுபான்மை இந்துக்களின் இக்கட்டான சூழ்நிலையை களைவதற்கான முக்கிய அம்சங்களாகும்:

  1. வங்காள தேச இந்துக்களின் அவல நிலைக்காக பிரதமர் குரல் கொடுக்க வேண்டும்; இனியும் அமைதிகாக்கக்கூடாது;
  2. பிரதமர் ஓர் உண்மையறியும் குழுவை வங்கதேசத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்.
  3. பிரதமரின் நடவடிக்கைக்கு அப்பாற்பட்டு, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் தனியாக ஒரு நடவடிக்கைக் குழுவை வங்காளதேசத்திற்கு அனுப்பி, அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் உதவியுடன் சிறுபான்மை இந்துக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.
  4. பிரதமரும் இந்திய மக்கள் பிரதிநிதிகளும் அவ்வாறு செய்யத் தவறினால், மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபியும் ஹிண்ட்ராஃப் இயக்கமும் சேர்ந்து மலேசியர்களின் சார்பாக, குறிப்பாக தங்களின் சகோதர-சகோதரியர் வங்காள தேசத்தில் அல்லல்படுவதைக் கண்டு வேதனைப்படும் மலேசிய இந்துக்கள் சார்பில் சிறப்பு நடவடிக்கைக் குழுவை அனுப்பும்.
  5. சட்டத்திற்கு புறம்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சின்மயி கிருஷ்ண தாசிற்காக முன்னிலையாகும் வழக்கறிஞர்களை நேரிடியாக மிரட்டு-வதுடன் சட்ட-ஒழுங்கிற்கு மிரட்டலாக இருக்கும் வங்கதேச வழக்க-றிஞர்களின் செயல்குறித்து விசாரிக்கும்படி வங்கதேச வழக்கறிஞர் மன்றத்திற்கு ஹிண்ட்ராஃப் இயக்கம் மற்றும் எம்ஏபி சார்பில் கடிதம் அனுப்பப்படும்.
  6. சர்வதேச வழக்கறிஞர் மன்றத்திற்கும் மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி மற்றும் ஹிண்ட்ராஃப் இயக்கத்தின் சார்பில் கடிதம் அனுப்பப் படும்; அதில், சின்மயி கிருஷ்ண தாஸ் சார்பில் முன்னிலையாகும் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் சம்பந்தப்பட்ட வழக்கைக் கண்காணிக்கவும் ஒரு சிறப்புக் குழுவை அனுப்பிவைக்கும்படி கோரிக்கை வைக்கப்படும்.
  7. ஐநா மன்றத்தின் மனித உரிமை ஆணையத்தின் சார்பில் வங்காள தேசத்திற்கு உண்மை அறியும் குழுவை அனுப்பி, அங்கு சிறுபான்மை இந்துக்களுக்கு எதிராக ஏவப்படும் வன்கொடுமைப் பற்றி விசாரணை மேற்கொள்ளும்படி மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி மற்றும் ஹிண்ட்ராஃப் இயக்கத்தின் சார்பில் கடிதம் அனுப்பப்படும். நீதி நிலைநாட்டப்படுவதற்கான நம் போராட்டத்தில் பன்னாட்டு ஆதரவு மிகவும் முக்கியமானது.

இந்த ஏழு தீர்மானங்களும் சர்வதேச மனித உரிமை தின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை