
பக்தர்களுக்கும் ஆலயங்களில் குடி கொண்டிருக்கும் இறையருக்கும் ஆன்மீகத் தூதராக செயல்படுகின்ற குருக்கள்மாரின் நலம்கருதி அமைக்கப்பட்டுள்ள மலேசிய குருக்கள் சங்கத்திற்கு சொந்தக் கட்டிடம் தேவை என்பதால் அரசாங்கம், பொதுமக்கள், வர்த்தகப் பெருமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் நிதியை எதிர்பார்க்கிறோம் என்று மலேசிய குருக்கள் சங்கத்தின் தலைவர் பிரகலாதன் குருக்கள் நேற்று வேண்டுகோள் விடுத்தார்.

வழிபாட்டு தலங்களில் பணிபுரிகின்ற இசைக்கலைஞர்கள், அர்ச்சகர் போன்றவர்களை உள்நாட்டிலேயே தயார்ப்படுத்த வேண்டும் என்பது அரசாங்கத்தின் இலக்காக இருக்கிறது.
அதற்கு இசைவாக நாங்களும் உள்நாட்டிலேயே குருக்கள்களுக்கு பயிற்சி அளித்து, பொதுமக்களின் இறை வழிபாட்டிற்கும் ஆலய நடவடிக்கைக்கும் நாங்கள் துணையாக இருந்து வருகிறோம்.

அதன் அடிப்படையில் பக்த பெருமக்களுக்கும் ஆலய நிர்வாகத்திற்கும் பாலமாக திகழ்கின்ற குருக்கள்களை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் அவர்களுக்கு அடிக்கடி பயிற்சி அளித்தும் வருகிறோம்.

அந்தவகையில் அண்மைக் காலத்தில் ஆறு கட்டங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த பயிற்சிகளில் கலந்து கொண்டு நிறைவு செய்த குருக்கள்மாருக்கெல்லாம் நேற்று சான்றிதழ் வழங்கும் விழா நடைபெறுகிறது என்று தெரிவித்த பிரகலாதன் குருக்கள்,
ஒவ்வொரு முறையும் பயிற்சி நடத்தும் பொழுது கட்டட வாடகைக்காக நான்காயிரம், ஐந்தாயிரம் வெள்ளி என்று வாடகையை மட்டும் செலுத்தி வருகிறோம்.

இது எங்களுக்கு பொருளாதாரம் அளவில் பெரும் சுமையாக இருப்பதால் மத்திய-மாநில அரசுகளுடன் கொடை நெஞ்சத்தினர் உள்ளிட்ட பொதுமக்களும் மலேசிய குருக்கள் சங்கத்திற்கு நிதி உதவி அளித்து சொந்த கட்டடம் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எங்களுக்கு துணை நிற்கும்படி கேட்டுக் கொள்வதாக நேற்று கலா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது பிரகலாதன் குருக்கள் வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமர் துறையில் இந்திய பிரதிநிதியாக இருக்கும் சண்முகம் மூக்கன், அம்பாங் ஆதிசங்கரர் திருமடத்தின் நிறுவனர் தவத்திரு மகேந்திர சுவாமிகள், சிவத்திரு முத்துக்குமார சிவாச்சாரியார் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொண்டு தலைமையேற்றனர்.


