Saturday, April 18, 2026

எதுவாக இருந்தாலும் நடராஜாவும் பாப்பா நாயுடுவும் வட்டமேசையில் பேசுங்கள்! சமுதாயம் கவனிக்கிறது!!

பத்துமலை ஆலய வளாகத்தில் மின் படிக்கட்டு(Escalator) அமைப்பதன் தொடர்பில் தற்பொழுது எழுந்துள்ள முறுகல் நிலை உடனே தணிக்கப்பட வேண்டும்.

மற்ற மொழி ஊடகங்களும் இனத்தினரும் மதத்தினரும் இதில் கருத்து சொல்லவும் விமர்சிக்கவும் தொடங்கிவிட்ட நிலையில், இந்தச் சிக்கல் இப்படியேத் தொடர்வது, எந்தத் தரப்புக்கும் நல்லதல்ல:

இந்திய சமுதாய ஒற்றுமையை முன்னிறுத்தியும் சமய நல்லிணக்கத்தை அதனிலும் மேலாகக் கருதியும் இர. நடராசாவும் வீ.பாப்பா ராய்டுவும் சமாதானப் புறாவைப் பறக்கவிட வேண்டும். தற்போதைய பண்டிகைப் பருவத்தில் இருவரும் உடனே சமாதானக் கொடியை கையில் ஏந்த வேண்டும்.

மலேசிய இந்துக்களின் அடையாளமாகவும் இந்து சமய ஆன்மிக-பண்பாட்டு மையமாகவும் உருமாறியுள்ள பத்துமலை திருத்தலம் உலகோரைக் கவரும் சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

இத்தகைய சுற்றுலாத் தலத்தில் மின் படிக்கட்டை நிர்மாணிப்பதன் தொடர்பில் தற்பொழுது கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் ‘திருப்பணிச் செம்மல்’ டத்தோஸ்ரீ டாக்டர் ஆர்.நடராசாவிற்கும் நாட்டின் மையப்பகுதியாக, நில அமைப்பால் மட்டுமல்ல; தொழில் வளம்-நிதி ஆதாரம், உற்பத்தித் திறம் ஆகியவற்றின் அடிப்படையிலும் நடுநாயகமாக உள்ள சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் ஜனநாயக செயற்கட்சித்(ஜசெக) தலைவர்களில் ஒருவரும் பந்திங் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு வீரமான் ஆகிய இருவருக்கும் இடையே எழுந்துள்ள பகைமை உணர்வு நீதிமன்ற கதவைத் தட்டும் அளவிற்கு சென்றிருக்கக் கூடாது.

அதுவும் தற்போதைய பண்டிகைப் பருவத்தில் இந்த நிலை, தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

அண்மையில்தான், ஆங்கிலப் புத்தாண்டை குதூகலத்துடன் கொண்டாடி வரவேற்றனர் மக்கள்; அதற்கு ஒரு வாரத்திற்குமுன், மலேசியக் கூட்டு சமுதாயத்திற்கே உரிய பாரம்பரிய ஒருமைப்பாட்டின் வெளிப்பாடாக இனம்-மொழி-சமயம் பாராமல் அனைவரும் கிறிஸ்துமஸ் பாண்டிகையைக் கொண்டாடினோம்;

இந்த நிலையில், அடுத்த வாரத்தில் பொங்கல் திருநாளையும் திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கத்தையும் ஒருசேர கொண்டாட இருக்கிறோம்; அடுத்த இருவாரத்தில், தைப்பூசத் திருவிழா; அதற்கடுத்த இரு வாரங்களில் சீனப் புத்தாண்டு; அடுத்த ஒரு மாதத்தில் நோன்புத் திருநாள் எனத் தொடரும் தற்போதைய பண்டிகைப் பருவத்தில் மலேசிய இந்திய சமுதாய எல்லையில் ஆன்மிகத் தலைவர் ஒருவரும் அரசியல் தலைவர் ஒருவரும் மல்லுக்கு நிற்பது அத்துணை பொருத்தமாகப்படவில்லை;

அதுவும் ஊடகத்தார் முன்னிலையிலும் நீதிமன்ற மேடையிலும் ஒருவருக்கொருவர் கம்பு சுழற்றுவது அடியோடு நல்லதல்ல; தத்தம் கையில் இருக்கும் தடியை இருவரும் கீழேப் போட்டுவிட்டு, இருவரும் மலர்க் கொத்தை பரிமாறிக் கொள்ள வேண்டும்.

ஒரு வழிபாட்டுத் தலத்தில்-சுற்றுலாத் தலத்தில் மக்கள் நலம் சார்ந்து மேற்கொள்ள வேண்டிய ஒரு நலத் திட்டம் தொடர்பான சிக்கல், தனிப்பட்ட முறையில் இருவருக்கிடையே முட்டலாகவும் மோதலாகவும் வெடித்த புள்ளி எது?

கடந்த டிசம்பர்த் திங்கள் நிறைவுக் கட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடராசா, தன் ஆதங்கம் அத்தனையையும் செய்தியாளர்களிடம் கொட்டித் தீர்த்தார். அவரின் பக்கம் நியாயம் இருப்பதால், அவர் வெளிப்படுத்திய ஆதங்கத்தில் கொஞ்சம் ஆத்திரம், கொஞ்சம் கவலை யாவும் இழையோடி இருந்தன.

அடுத்த ஆண்டு தைப்பூசத்தின்பொழுது, பக்தப் பெருமக்கள் ‘கேபல் காரை”ப் பயன்படுத்தலாம்; மாநில அரசு கொள்கை அளவில் ஒப்புதல் தெரிவித்துள்ளது. முழு ஒப்புதல் கிடைத்ததும் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று ‘திருப்பணிச் செம்மல்’ நடராசா, சில ஆண்டுகளுக்குமுன் தைப்பூச விழாவின்போது தெரிவித்தார்.

அடுத்த இரு ஆண்டுகள் கழித்து, கேபல் கார் மின்படிக்கட்டாக மாறியது; ஒவ்வொரு தைப்பூசத் திருநாளின்போதும் ‘அடுத்தாண்டு மின் படிக்கட்டு வந்துவிடும்’, ‘அடுத்தாண்டு மின் படிக்கட்டு வந்துவிடும்’ என்று அறிவித்து.. . அறிவித்து.. . சளிப்படைந்த நடராசா, இன்னும் எத்தனைக் காலத்திற்கு இதைச் செய்வது? என்று வருத்தம் அடைந்திருக்கலாம்;

ஆண்டுதோறும் வெறும் அறிவிப்புத்தான் வருகிறதேத் தவிர, மின் படிக்கட்டைக் காணவில்லையே என்று பொதுமக்களும் ஊடகத்தாரும்கூட கருதக்கூடும் என்றெல்லாம் எண்ணி நடராசா கலக்கமும் அடைந்திருக்கக் கூடும்.

அதன் வெளிப்பாடோ என்னவோ, 2025-ஆம் ஆண்டு நிறைவுக் கட்டத்தில் செய்தியாளர்முன் சற்று பொறிந்து தள்ளிவிட்டார், நடராஜா.

“பிரதமரும் சரி; மந்திரி பெசாரும்(மாநில முதல்வர்) சரி, வாக்குறுதி தருகின்றரேத் தவிர ஒன்றும் நடக்கவில்லை; மானிய உதவியும் சரியாகக் கிடைக்கவில்லை. எல்லாம் வெற்று வாக்குறுதியாக உள்ளன; நாங்களா மின்படிக்கட்டு கேடோம்; நீங்கள்தானே முன்மொழிந்தீர்கள்; முன்மொழிந்துவிட்டு, பின்னர் ஏன் இதுவ்ரை அனுமதி தரவில்லை” என்றெல்லாம் வருத்தப்பட்ட அவர், பிரதமரிடமும் மந்திரி பெசாரிடமும் இதுகுறித்து கேளுங்கள் என்று செய்தியாளர்களிடம் இரண்டு-மூன்று முறை நடராஜா கேட்டுக் கொண்டார்.

தைப்பூசத்தின் பொழுது மந்திரி பெசார் கட்டாயம் வருவார்; பிரதமருக்கும் அழைப்புவிட இருக்கிறோம்; முறைப்படி கடிதம் எழுத இருக்கிறோம் என்றெல்லாம் நடராசா பேசியதை நேரடி ஒலிபரப்பு செய்ததுதான் இந்த அளவிற்கு வில்லங்கமாக உருவெடுத்துள்ளது.

ஆலய நிருவாகத் தரப்பினராவது, சமூக வலைதளத்தில் நேரடி ஒலிபரப்பு செய்வதைத் தவிர்க்கும்படி கேட்டிருக்கலாம்;

அதேவேளை, காட்சி ஊடகத்தினரும் அச்சு ஊடகத்தினரும் நடராஜாவின் கருத்தைத் தணிக்கை செய்து பாங்குற வெளியிட்டனர். மாறாக, அவரின் கருத்தையும் உள்ளக் குமுறலையும் நேரடி ஒலிபரப்பின் மூலம் கண்ட சம்பந்தப்பட்டத் தரப்பினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.

‘டிக்-டோக்’ காட்சி ஊடகத்தின்வழி எதை நேரடி ஒலி-ஒளிபரப்பு செய்ய வேண்டும்? எதைத் தவிர்க்க வேண்டும் என்று ஊடக எல்லையைச் சேர்ந்தவர்கள் ஆய்ந்து செயல்படுதல் நலம் பயக்கும்

பத்து மலைக்கு வருகின்றவர்கள் குகைக் கோயிலைக் காணவும் வழிபடவும் மேலேச் செல்வதென்றால் 272 படிகளில் ஏற வேண்டும். முதியவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், சிறார் உள்ளிட்ட தரப்பினரின் நலனை கருத்தில் கொண்டு, Rope car அல்லது Cable car அமைத்திடத்தான் முதலில் திட்டமிடப்பட்டது.

பொதுமக்களின் நலம் கருதி ஆலய நிருவாகம் முன்னெடுத்த இந்தத் திட்டத்திற்கு, சுண்ணாம்புப் பாறையால் ஆன இந்த மலையின் உறுதித் தன்மையில் ஐயம் கொண்டு மாநில அரசு மறுத்ததிலும் நியாயம் இருக்கிறது; பொதுநோக்கும் பொதிந்துள்ளது.

அதேவேளை, மாற்று ஏற்பாடாக மின்படிக்கட்டுத் திட்டத்தை முன்மொழிந்துவிட்டு இதுவரை ஏன் அனுமதி தரவில்லை என்ற கேள்வியில் இருந்த நியாயமும் உண்மையும் பின் தள்ளப்பட்டன.

இந்த நிலையில், இவ்வாரத் தொடக்கத்தில் செலாயாங் நகராண்மைக் கழக வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில மனித வள-பூர்வகுடி மேம்பாட்டுப் பிரிவிற்குப் பொறுப்பான ஆட்சிக் குழு உறுப்பினரும் மாநில ஆட்சி மன்றத்தின் இந்தியப் பிரதிநிதியுமான பாப்பா ராய்டு, மின் படிக்கட்டு அமைப்பதற்கான இடத்தை தனிப்பட்ட ஒருவரின் பெயருக்கு மாற்றித் தரும்படி அனுமதி கேட்டிருப்பதால், அதற்கு மாநில அரசு மறுப்பு தெரிவித்துள்ளது; அரசாங்க நிலத்தை தனிப்பட்ட ஒருவரின் பெயருக்கு மாற்றிக்கொடுக்க முடியாது;

மாறாக சங்கப் பதிவகத்தில்(ROS) பதிவு பெற்றுள்ள ஏதோவொரு அமைப்பின் பெயரில்தான் மின் படிக்கட்டு அமைப்பதற்கான இடத்தை பதிவு செய்ய முடியுமேத் தவிர, தனிப்பட்ட நபர்கள் எல்லாம் இப்படி செயல்படக் கூடாதென்று அதிரடியாகக் கருத்து தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, தேவஸ்தான நிருவாகத்தின் சார்பில் அறங்காவலரும் மகிமா அமைப்பின் தலைவருமான டத்தோ ந.சிவகுமார் விளக்கமளித்தார்.

“பாப்பா ராய்டு விவரம் தெரியாமல் பேசுகிறார். மாரியம்மன் தேவஸ்தானம், சங்கப் பதிவக பதிவின்படி இயங்கவில்லை; மாறாக, நீதிமன்ற உத்தரவின்படி, கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின்கீழ் நேரடியாக செயல்படுகிறது. அந்த வகையில் அரசாங்க சட்டத்துறைத் தலைவருக்குத்தான் தேவஸ்தான நிருவாகம் பொறுப்புகூற கடமைப்பட்டுள்ளது என்றும், அதன் அடிப்படையில் மின்படிக்கட்டிற்காக முதலில் தேவஸ்தானத்தின் பெயரில் செய்யப்பட்ட விண்ணப்பத்திற்கு மாநில அரசு அனுமதி மறுத்தது என்றும் அதன் பின்னரே தேவஸ்தான அறங்காவலர் வாரிய உறுப்பினர்களின் ஆலோசனையின்படி தலைவர் நடராஜாவின் பெயரில் விண்ணப்பம் செய்யப்பட்டது; இந்த விவரம் எல்லாம் தெரியாமல் பாப்பா ராய்டு தப்பாகவும் சமுதாயத்தில் தவறான அபிப்பிராயம் ஏற்படும் வகையிலும் கருத்து தெரிவித்துள்ளார்” என்றும் அன்று(ஜனவரி 05) மாலையே விளக்கம் அளித்தார்.

இவ்வாறு முறுகல் நிலைமை மெல்லமாக உருவெடுத்த நிலையில், நேற்று ஜனவரி 08-ஆம் நாள் முற்பகலில் மீண்டும் செய்தியாளர்களை தன் வழக்கறிஞர் செல்வா மூக்கையாவுடன் சந்தித்தார் நடராஜா.

அப்போது, தன்மீது களங்கம் கற்பிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள பாப்பா ராய்டுமீது வழக்கு தொடுத்திருப்பதாகவும் ஒரு வாரத்திற்குள் வருத்தம் தெரிவிக்காவிட்டால், அவர்மீது மானநட்ட வழக்கு தொடர இருப்பதாகவும் தெரிவித்தார்.

தவிர, மிகவும் தன்மையாக செய்தியாளர்களிடம் பேசிய நடராஜா, மந்திரி பெசாருடன் தனக்கு எந்த மாச்சரியமும் இல்லை யென்றும் அவருடன் நல்ல உறவு இருக்கிறதென்றும் குறிப்பிட்டார். முந்தைய செய்தியாளர்க் கூட்டத்தில் தான் பேசியதை அப்படியே பதிவு செய்து, பாப்பா ராய்டுவின் கவனத்திற்கு ஊடக வட்டத்தைச் சேர்ந்த யாரோ கொண்டு சென்றுள்ளனர் என்றெல்லாம் நடராஜா நேற்று பேசியது,

ஒரு மாநில நிருவாகமும் ஒரு சமய அமைப்பும் சாத்தியமான முறையில் அடுத்தடுத்து ஆலோசனை மேற்கொண்டு நிறைவேற்ற வேண்டிய ஒரு திட்டம் குறித்து கடந்த செய்தியாளர்க் கூட்டத்தில், தான் பேசியது அத்துணைப் பொருத்தமில்லை என்பதை நடராசாவே உணர்ந்ததன் வெளிப்பாடாகும்.

இந்தச் செய்தியாளர்க் கூட்டத்தைப் பற்றி அறிந்த பாப்பாவும், நேற்று பிற்பகலே இன்னொரு செய்தியாளர்க் கூட்டத்திற்கு தன்னுடைய அலுவலகத்தில் ஏற்பாடு செய்தார்.

அப்போது, அவர் கருத்து தெரிவித்த விதம், எரிகின்ற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் விதமாக இருந்தது;

மாரியம்மன் ஆலய நிருவாகம், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின்கீழ் செயல்படுகிறதா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் தனக்கு எதுவும் தெரியாது; அது குறித்து கவலையும் இல்லை; சங்கப் பதிவகத்தில் பதிவு செய்து, அந்தப் பதிவெண்ணுடன் யார் வந்தாலும் அனுமதி வழங்க மாநில அரசு தயாராக இருக்கிறது.

ஏதோ நான்கைந்து பேர் ஒன்று சேர்ந்து, சங்கப் பதிவகப் பதிவுடன் ஓர் அமைப்பாக வந்தாலும் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை; அவ்வாறு ஆர்.ஓ.எஸ். பதிவு இல்லாமல் எந்த நபர் தனியாக வந்தாலும் கூட்டாக வந்தாலும் பதிவு கிடைக்காது என்று சொன்னார்.

இதுகூட ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான்; ஆனால், அடுத்தடுத்து அவர் வேற்று இனத்தார் முன்னிலையிலும் வேற்று ஊடகத்தினர் முன்பும் வெளிப்படுத்திய கருத்து ஏற்புடையதாக இல்லை.

‘ஒற்றைக்கு ஒற்றை’ என்னும் அடிப்படையில் வம்படியாக பாப்பா ராய்டு பேசியிருக்க வேண்டியதில்லை; நடராசா தொடுத்துள்ள வழக்கு குறித்து, மாநில சட்டப் பிரிவுபார்த்துக் கொள்ளும் என்று கூறிய அவர், உண்மையில் தான்தான் மான நட்ட வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் எனவும் அதிரடியாகப் பேசினார்.

பத்துமலை வளாகத்தில் எவ்வளவு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றுள்ளன. ஒரேயொரு கட்டடத்திற்காவது அனுமதி பெற்றார்களா? அங்கு வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கிறார்களே, அதற்கு மாநில அரசிடம் அனுமதி பெற்றார்களா என்றெல்லாம் மற்றமொழி ஊடகத்தினர் முன்னிலையில் பாப்பா ராய்டு பொங்கியிருக்க வேண்டியதில்லை.

தமிழ் மொழி ஊடகத்தினர் மட்டும் இருந்து, அந்தச் சூழலில் பாப்பா ராய்டு எத்தகைய் கருத்தையும் வெளிப்படுத்தி இருக்கலாம்; ஆனால், வெறும் வாயையே மெல்லக் கூடியவர்களின் வாயில் அவலை அள்ளிப் போட்டவிதமாக பேசியதை, சற்று நிதானித்து தவிர்த்திருக்கலாம்;

கடந்த ஆண்டு மையப் பகுதியில், ‘கோயில் ஹாராம்’ என்று ஒரு குழு பிரச்சாரம் மேற்கொண்டதை பாப்பா ராய்டுவும் அறிவார்.

கோலாலம்பூர், மஸ்ஜித் இந்தியா பகுதியில் உள்ள அருள்மிகு பத்ரகாளியம்மன் கோயில் விவகாரத்தின்பொழுதுதான் இந்த சட்ட விரோத ஆலய பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இப்படிப்பட்ட கூட்டம் இருப்பது தெரிந்திருந்தும் மாற்றினத்தார்-வேற்று ஊடகத்தார் முன்னைலையில் அரச அனுமதி இன்றி பத்துமலை திருத்தல வளாகத்தில் அலுவலகம் உள்ளிட்ட கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன என்று அம்பலப்படுத்தியதை பாப்பா ராய்டு தவிர்த்திருக்க வேண்டும்.

போனது போகட்டும்; ஆனது ஆகட்டும்.

இனி பாப்பா ராய்டு புதிய அத்தியாயத்தைத் தொடங்க வேண்டும். “என் ஆலயம், என் சமயம், என் மக்கள்” என்று சொல்லும் பாப்பா ராய்டு, அதற்கேற்ப பத்து மலை ஆலய வளாகத்தில் மின் படிக்கட்டை கட்டமைத்திட அவண அனைத்தையும் உடனே மேற்கொள்ள வேண்டும்.

மாரியம்மன் தேவஸ்தானத்துடன் கைகோத்து, உரிய ஆலோசனை வழங்கி, தேவையான நடவடிக்கையை ஒருங்கிணைத்து மாநில அரசுக்கும் தேவஸ்தானத்திற்கும் இடையே பாலம்போற் செயற்பட்டு, பக்தர்களும் பொதுமக்களும் பயனுறும் வகையில் மின் படிக்கட்டை விரைவில் நிறுவி, அது பாப்பா ராய்டு தலைமையிலேயே தொடக்கி வைக்கப்பட வேண்டும்.

இந்த நல்லெண்ண முன்னெடுப்பின் முன்னோட்டமாக, பாப்பா ராய்டு மீது தொடர்ந்துள்ள அவதூற்று வழக்கை நடராஜாவும் உடன் மீட்டுக் கொள்ள வேண்டும்.

இதுவே, இவ்வாண்டு தைப்பூசத் திருவிழா பரிசாக அமையட்டும்.

வாழ்க பத்துமலைத் திருத்தலம்!
எழுக அங்கு உடன் மின்படிக்கட்டு!!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை