
நாட்டில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் நன்னெறி பாடத் திட்டத்தில் சனாதனத்தை போதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிடமும் கல்வி அமைச்சிடமும் பரிந்துரை சமர்ப்பிக்கப்படும் என்று மலேசிய இந்து சங்கத் தலைவர் ஸ்ரீகாசி சங்கபூசன் தங்க கணேசன் தெரிவித்தார்.
தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மத்தியில் சமய, கட்டொழுங்குக் கூறுகள் மேலோங்கும் வகையில் இந்த சனாதனக் கல்வி மிகவும் முக்கியம்.

அந்த வகையில் நன்னெறி பாடத் திட்டத்தில் இதையும் போதிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க தயாராக இருக்கிறோம்.
இதன் தொடர்பில் மலேசிய இந்து சங்கம், மலேசிய இந்து தர்ம மாமன்றம், மலேசிய குருக்கள் சங்கம், பன்னிரு திருமுறை வளர்ச்சி மையம், மலேசிய அர்ச்சகர் சங்கம், தெய்வீக வாழ்க்கை சங்கம், மலேசிய இந்து இளைஞர் இயக்கம், கிருஷ்ணர் பக்தி இயக்கம் உள்ளிட்ட ஒன்பது இயக்கங்கள் இணைந்துள்ளன என்று அவர் சொன்னார்.



