Monday, April 20, 2026

4-வது அயலகத் தமிழர் மாநாடு! 500-க்கும் மேற்பட்ட மலேசியப் பேராளர்கள் பங்கேற்பு!!

(சிறப்பு செய்திகளுடன் சென்னையிலிருந்து வேதா)

திராவிட மாடல் ஆட்சியின் நாயகர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் (ஜனவரி 11 & 12 சனி, ஞாயிறு) நடைபெறுகின்ற அயலகத் தமிழர் மாநாடு இன்று எழுச்சியும் உற்சாகமும் பொங்கத் தொடங்கியது.

இதில் பங்கு கொள்ளவும் தங்களின் தொப்புள் கொடி உறவை புதுப்பிக்கவும் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பேராளர்கள் சென்னைக்கு அணி திரண்டு உள்ளனர்.

மலேசியாவில் இருந்து மட்டும் 500க்கும் மேற்பட்ட பேராளர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் தலைநகரான கோலாலம்பூர் மையப்பகுதி மாநிலமான சிலாங்கூர், ஜோகூர், நெகரி செம்பிலான், மலாக்கா, பகாங், பினாங்கு, பேராக் கெடா ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் சென்னையில் குவிந்துள்ளனர்.

மத்திய – மாநில அரசுகளின் பிரதிநிதிகள்,
அரசியல் – சமூக இயக்கங்களின் தலைவர்கள் பொறுப்பாளர்கள் ஆகியோர் இதில் பேராளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த பேராளர்கள் அனைவருக்கும் தமிழக அரசு ஏற்பாட்டில் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது; தொடர்ந்து அனைத்து பேராளர்களுக்குமான வழிகாட்டலும் உபசரிப்பும் சிறப்பான முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

இத்தகைய பேராளர்களில் குறிப்பிடத்தக்க ஆளுமையரில் ஒருவரும் கல்வியாளருமான டத்தோ முனைவர் என் எஸ் இராஜேந்திரன் ‘தமிழ் மொழி- இலக்கியம்’ குறித்து கட்டுரை படைத்துள்ளதுடன் சொற்பொழிவுறம் ஆற்றுகிறார்.

அதைப்போல, மத்தியக் கூட்டரசின் சார்பில் சட்டத்துறை துணை அமைச்சர் மு குலசேகரனும் இந்த மாநாட்டில் உரையாற்றுகிறார்.

பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் பிறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தரராஜு சோமுவும் இதில் பினாங்கு மாநில அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொள்வதுடன் அவர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பேராளர்களும் அவரின் தலைமையில் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

குறிப்பாக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மலேசிய இந்தியர் காங்கிரஸ் தேசிய துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ மூ சரவணன், ஓம்ஸ் அறவாரியத் தலைவர் பா தியாகராஜன் ஆகியோரும் இதில் இந்த மாநாட்டின் தொடர்பில் சிறப்பு வருகை புரிந்துள்ளனர்.

மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பதவி ஏற்றபின் தொடர்ந்து நான்காவது முறையாக இந்த அயலகத் தமிழர் மாநாடு நடைபெறுவதன் தொடர்பில் புத்தகக் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டில் கலந்து கொள்ளும் மலேசியப் பேராளர்களும் இந்த கண்காட்சியில் ஆர்வத்துடன் கலந்து கொள்வதுடன் அரிய நூல்களையும் வாங்கி சேமிக்கின்றனர்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று காலையில் தொடங்கி வைத்த இந்த நான்காவது அயலகத் தமிழர் மாநாட்டு தொடர்பில் மலேசியப் பேராளர்களை ஒருங்கிணைத்த கே பி எஸ் நிறுவனத்தின் தலைவர் கே பி சாமி, தமிழகத்திற்கான மலேசிய துணைத்தூதர் சரவணக்குமார் சரவணக்குமார் ஆகியோரும் இந்த மாநாட்டில் சிறப்பாக கலந்து கொண்டுள்ளனர்.

(தொடரும்)

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை