
-நக்கீரன்
இந்தியா விடுதலை அடைந்ததும் புதிய சுதந்திர இந்தியாவிற்கான அரசியல் சாசனத்தை வரைவதற்கான அரசியல் நிர்ணயக் குழுவை பிரதமர் ஜவஹர்லால் நேரு நியமித்தார்.
கே.எம். முன்ஷி, சாதுல்லா, டி.டி. கிருஷ்ணமாச்சாரி, என். கோபாலசாமி ஐயர், அல்லாடி கிருஷ்ணசாமி ஐயங்கார் உள்ளிட்ட சட்ட மேதையரெல்லாம் இடம்பெற்று இருந்தனர். இவர்களுக்குத் தலைவராக, சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கருக்கு மகுடம் சூட்டினார் நேரு.
சட்டத்துறையில் பரந்த அனுபவமும் தேர்ந்த பட்டறிவும் கொண்ட மேன்மக்கள் உருவாக்கிய புதிய அரசியல் சாசனத்திற்கு அடிப்படையாக இருந்தது, 1935-இல் பிரிட்டிஷ் மகாராணி ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட ‘அகில இந்திய அரசியல் சாசனம்’ ஆகும்.
அப்பொழுது கிழக்கு இந்தியா உட்பட இரண்டு-மூன்று இந்தியாக்கள் இருந்ததால் ‘All India Constitution’ என்று அதற்குப் பெயர்.
அதன் அடியொற்றி, புதிய ஒன்றுபட்ட சுதந்திர இந்தியாவிற்காக வரையப்பட்ட புதிய அரசியல் சாசனம், 1950 ஜனவரி 26-ஆம் நாள் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த நாளைத்தான் இன்றளவும் பொது விடுமுறையுடன் குடியரசு நாளாக அந்த நாடு கொண்டாடி வருகிறது.
இப்படியாக, சிற்பியர் சிலை செதுக்குவதைப் போல, சட்ட அறிஞர்கள் பார்த்துப் பார்த்து, திரும்பத் திரும்பப் படித்து, உற்று நுணிகி நுணிகி, ஆராய்ந்து அணுகி அணுகி தயாரித்த நவீன இந்தியாவின் புதிய அரசியல் சாசனத்தை எடுத்த எடுப்பிலேயே முதன்முதலில் திருத்த வைத்தவர், ‘கஞ்சா பார்ட்டி?’ -யின் தலைவர் தந்தை பெரியார்தான்.
தமிழ்ப் பள்ளிகளில் நவராத்திரி பூசனையின்போது, வழிபாட்டுத் தலங்களைப் போல ஒன்பது நாட்களுக்கு கொலுவைத்து அரச்சகரைக் கொண்டு சமஸ்கிருத மந்திரம் ஓதலாமா என்று வருடக் கணக்கில் ஒரு சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் கேட்டுவந்த நிலையில், இந்த ஆண்டு, தமிழ்ப் பள்ளிகளில் சரசுவதி பூசைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று அந்த இயக்கம் கேட்டதாக பொய்ச்செய்தி பரப்பப்பட்ட நிலையில், மனிதன் செப்பம் பெறுவதற்கான சிந்தனை என்னும் மானிடப் பண்பு நலனை தொலைத்துவிட்ட ‘சில’துகள் திராவிட இயக்கத்திற்கு சூட்டிய பெயர்தான் இது; தவிர, ஜெயலலிதா இறந்ததால்தான் அண்ணா உருவாக்கிய கஞ்சா பார்ட்டி ஆட்சிக்கு வந்ததாகவும் இது சொன்னது; அதை வழிமொழிந்தன மற்ற பலதுகள்.
தமிழ்ச் சமூகப் பாத்தியில் முளைத்துள்ள பெருங்‘களை’கள், இது’கள்; கருத்திற்கு மறு கருத்திட வக்கும் வகையும் இல்லாத இதுகள், கஞ்சாவிற்குப் பிறந்து கஞ்சாவுடனேயே வாழுமோ என்னவோத் தெரியவில்லை; யானறியேன்! வாயைத் திறந்தாலே இதுதான் வெளிவருகிறது.

மனிதனின் ஒன்பது வாசல்வழி வெளிவரும் அத்தனையும் துர்மணம் கொண்டவை; அவ்வொன்பதில் ஒன்றான வாய்வழிவரும் வார்த்தையாவது நறுமணம் கொண்டிராவிடினும், அருமணம் அற்றதாகவாவது இருக்கக் கூடாதா?
தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்
என்னும் வள்ளுவர்தம் வாக்கால் இதை வரையறை செய்து கடந்து செல்வோம்.
பிரதமர் நேரு மிகவும் வெட்கத்திற்கு ஆளாகி, இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் அம்பேத்கருடன் மல்லுக்கு நின்று, ஒருவழியாக ஏற்றுக் கொண்ட அந்த சட்டத் திருத்தத்தின் பெயர் ‘கம்யூனல் ஜி.ஓ.’ என்பதாகும்.
சுதந்திர இந்தியாவில், பிராமணர்கள் 3 விழுக்காடாக இருக்கின்றனர்; தவிர, 7 முதலியார் சாதிகள்,12 பிள்ளைமார் சாதிகள், 8 செட்டியார் சமூகத்தினர், கவுண்டர், நாடார், வன்னியர் உள்ளிட்ட 108 பிற்பட்ட சாதியினர் 52 விழுக்காடாகவும், பள்ளர்-பறையர் என்று கூறப்பட்ட பட்டியலின மக்கள் 18 விழுக்காடாகவும், குறவர் உள்ளிட்ட மலைவாழ் மக்கள் ஏறக்குறைய 3 விழுக்காடாகவும் இருக்கின்ற நிலையில், அரசாங்க வேலை வாய்ப்புகளிலும் தனியார் நிறுவனங்களிலும் பிராமணர்களே ஆக்கிரமித்துள்ளனர்.
கொத்தாளு, சித்தாளு வேலையுடன் சுமை தூக்குவது போன்ற வேலைதான் மற்றவர்களுக்குக் கிடைக்கிறது. நாட்டில் உள்ள அனைத்து அரச வேலைவாய்ப்பும் மக்களின் பிரதிநிதித்துவத்திற்கு ஏற்ப அனைத்து சாதியினருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்; அதைப்போல, கல்வி நிலையங்களிலும் அனைவருக்கும் உரிய விகிதாச்சாரப்படி இடம் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.
இதற்கு சட்டப்பாதுகாப்பு வேண்டும்; அதற்கு ஏதுவாக அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்; இல்லாவிட்டால் அரசியல் சட்ட நகலை எரிப்பேன்-எரிப்போம் என்று அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை திராவிடர்க் கழகத்தின் அன்றைய தலைவர் பகுத்தறிவுச் சூரியனாம் தந்தை பெரியார் அறிவித்ததும் புதுடில்லயே அதிர்ந்த வரலாறு இந்த ‘இது’மாதுக்குத் தெரியாது. அதனால்தான், அந்த அறிவியக்கத்தை கஞ்சா பார்ட்டி என்கிறது இழிவான புத்தி கொண்ட இந்தக் கூட்டம்.
இலட்சக் கணக்கான-கோடிக் கணக்கான இந்துக்களுக்கு இப்பொழுது கல்வி-வேலைவாய்ப்பு சலுகை இருக்கிறதென்றால், அதற்கு பெரியார்தான் காரணம்; அதனால், அந்த மக்கள் எல்லாம் தங்களின் தலைவராகக் கருத வேண்டியவர் இந்த ‘களை’க் கூட்டத்தின் மொழியில் சொல்வதென்றால் கஞ்சா பார்ட்டியின் தலைவர்தான்.
அடிமை இந்தியாவில், விடுதலையை இலக்காகக் கொண்டு 1885-இல் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிதியில், தமிழ் நாடு, சேரன்மாதேவியில் ஒரு குருகுலம் நடத்தப்பட்டது; அதற்கு முதலியார் உள்ளிட்ட மேல்சாதி பணக்காரர்களும் நிதி அளித்தனர். காரணம், அவர்களின் சாதிப் பிள்ளைகளும் அந்தக் குருகுலத்தில் படித்தனர்.
ஆனால், அங்கு படித்த மாணவர்களில் பிராமண மாணவர்களுக்கு தரமான உணவுடன் தனிப்பந்தி நடத்தப்பட்டது; பிற சாதி மாணவர்களுக்கு இரண்டாந்தர உணவுடன் தனியாக உணவு கொடுக்கப்பட்டது.
இதையறிந்த தந்தை பெரியார், உடனே மாநில காங்கிரஸ் தலைமையிடம் புகார் சொன்னார்; ஒன்றும் ஆகாத நிலையில் தேசிய அளவில் காந்தி உட்பட அனைவரிடம் பெரியார் முறையிட்டார்.
பிரமாணர்கள் தரப்பில் ஓர் அணாகூட(24 காசுகள்) நன்கொடை வராத நிலையில், கட்சி நிதியிலும் பொது நிதியிலும் நடத்தப்படும் குருகுலத்தில் சாதிக்கொரு நீதியென செயல்படுவது சமூக துரோகம் என்று அறிவித்த பெரியார், அந்தப் புள்ளியில்தான் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து வெளியேற முடிவு செய்தார்.
அதற்கு முன்பு, காந்தியடிகள் மதுவிலக்குக் கொள்கையை அறிவித்தபோது, தன்னுடைய தோட்டத்தில் இருந்த 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தவர் தந்தை பெரியார்தான்;
ஐந்து தென்னை மரங்கள் இருந்தால் போதும்; ஒரு குடும்பமே வாழ்க்கை நடத்தும் அந்நாட்களில்; அப்படியிருந்தும் உண்மையான காங்கிரஸ்வாதியாக இருந்த ஈ.வெ.இராமசாமி நாயக்கர்(மறைமகள் அடிகளின் மகள் தலைமை-யிலான மகளிர் அமைப்பினர் பெரியார் என பெயர் சூட்டும்வரை) தமிழக மட்டத்திலும் இந்திய தேசிய அளவிலும் அவர் இப்படித்தான் அழைக்கப் பட்டார்), காந்தியார்மீது கொண்ட பற்றின் காரணமாக, அவர் அறிவித்த மதுவிலக்குக் கொள்கையை ஏற்று, சொந்தமான தென்னந்தோப்பையே அழித்த அவர் உருவாக்கிய கட்சியை கஞ்சா பார்ட்டி என்பது, பச்சையான நன்றிகொன்ற காரியம்.
காந்தி அறிவித்த மதுவிலக்குப் போராட்டத்தால் அடிமை இந்தியாவே நிலைகுத்திய நிலையில், அச்சமடைந்த ஆங்கிலேய நிருவாகத்தினர், இந்தப் போராட்டத்தை கைவிடும்படி காந்தியை அணுகினர்.
காந்தியோ, இந்தப் போராட்டத்தைத் தொடர்வதும் கைவிடுவதும் என் கையில் இல்லை; இது, தமிழ் நாட்டின் ஈரோட்டு நகரில், ஈ.வெ.இராமசாமி நாயக்கர் குடும்பத்தைச் சேர்ந்த நாகம்மாள் உள்ளிட்ட இரு பெண்களின் கைகளில் உள்ளது என்றுகூறி காந்தியார் கைவிரித்த வரலாறு தெரிந்திருந்தால், இந்தக் ‘களை’மாது, காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்து விலகி தமிழர்களின் இன நலம், மொழி நலத்துடன் தமிழிய ஆன்மிக நெறியையும் வள்ளலார்வழியில் பாதுகாப்பதற்காக பெரியார் உருவாக்கிய திராவிடர்க் கழகத்தை கஞ்சா பார்ட்டி என மட்டரகமாக அழைத்திருக்க மாட்டார்.
அதைப்போல, காந்தி அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்குகொண்ட பெரியார், சுதேசிக் கொள்கையையும் முன்னெடுக்கும் விதமாக, கதராடையை தோளில் சுமந்து, விற்றவர் என்பதும் இத்தனைக்கும் அவர் செல்வச் செழிப்புள்ள வர்த்தகக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் இந்த களைக்கும்பலுக்கு எங்கே தெரிந்திருக்கபோகிறது.
பொட்டு கட்டுதல் என்று ஓர் இழிவான நடைமுறை சமயத்தின் பெயரால் தமிழகத்தில் அரங்கேற்றப்பட்டது; இதற்கு, கடந்த நூற்றாண்டில், ஏறக் குறைய இதேக் காலக்கட்டத்தில் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டது; அதுவும் ஆங்கில ஆட்சியாளர்களின் துணையுடன்.

அழகாகத் தோற்றமளிக்கும் பெண் பிள்ளைகள் பருவமடைந்த நிலையில், அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் “உங்கள் ஆத்துப் பெண்ணை கோயிலுக்கு பொட்டிக்கட்டி விடுங்கள்’ என்று பிராமணர்கள் உத்தரவிட்டால், அவ்வளவுதான்.
பெண்ணுக்கு மணம் முடித்து, பேரப் பிள்ளைகளுடன் கொஞ்சி மகிழலாம் என்ற ஆசைகளைத் துறந்து, கோயிலில் விட்டுவிட வேண்டியதுதான்; மன்னரிடம் சென்று முறையிட்டால்கூட செல்லாது; பிராமண குருக்கள்-களுக்கு அத்துணை அதிகாரம் இருந்தது.
அற்றைக் காலத்தில் சாம பூசை, விடியற்காலை பூசனை என்றெலாம் ஆறுகால பூசை இருக்கும். ஆலயங்களை சுத்தம் செய்வது, கழுவி விடுவது, காய்ந்த தரையில் புதுப்புது கோலமிடுவது, பூசனைப் பொருட்களுடன் நைவேத்திய-பண்டங்களைத் தயாரிப்பது, இரவில் ஆலயத்தில் தங்கும் பிராமணர்களுக்கு ஊழியம் செய்வது, ஆலத்திலேயே படுக்கைறை பாவையாக இருப்பது என இதுபோன்ற வேலைகளுக்கு கட்டணமில்லாமல் பணிபுரிய ஊரார் பெற்றெடுத்த பெண்களை வளைத்துப் போடும் ஈன-இழிச் செயலுக்குப் பெயர்தான் பொட்டுக் கட்டுதல்.
அந்தக் குலத்தில் தோன்றிய ஓரு பெண்ணை, தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கமும் அதற்கு முன் தோன்றிய நீதிக் கட்சி அரசும் மருத்துவர் ஆக்கியது; அவர் பெயர்தான் முத்து லெட்சுமி அம்மாள். சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை உருவாக்கியதும் இந்த மாதரசிதான்.
தமிழ் நாட்டில் மட்டுமல்ல; இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு பெண் எம்.பி.பி.எஸ். மருத்துவரை, அதுவும் தேவதாசி குலத்தில் இருந்து உருவாக்கியது திராவிடர் இயக்கம் என்னும் வரலாறு, கஞ்சா பார்ட்டி என கொக்கரிக்கும் கசட்டுபப் பிறவிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அந்த நடைமுறையை ஒழிக்கும்படி, சென்னை மாகாண சட்டமன்றத்தில் முத்துலெட்சுமி அம்மாள் பேசினார். சுதந்திர இந்திய வரலாற்றில் சட்ட மன்றத்திற்கு மக்கள் வாக்களிப்பின்மூலம் முதன்முதலாக தேர்ந்தெடுக்கப் பட்ட பெண் பிரதிநிதியும் இதே முத்து லெட்சுமி அம்மையார்தான். மக்கள் மன்றத்தில் பேசப்பட்டதால் வெளிச்சத்திற்கு வந்த பொட்டு கட்டும் முறை குறித்து அறிந்த ஆங்கிலேயர்கள், எள்ளி நகையாடினர்; இது, மக்கள் விரோதம் என்றனர்.
ஆனாலும், விமர்சனங்களை துடைத்துக் கொண்டு, மானமில்லாமல் அடுத்தக்கட்டத்திற்கு நகர்வதை வாடிக்கையாகக் கொண்ட பிராமண சட்டமன்ற உறுப்பினர், சத்தியமூர்த்தியோ, ஓ’வென ஒப்பாரி வைத்து அலறினார்.

அது சனாதனக் கொழுந்தல்லவா? அதனால், பொட்டுக் கட்டும் முறை என்பது, பாரம்பரியமாகவும் காலங்காலமாகவும் தொடர்வது; அப்படிப்பட்ட எதையும் மாற்றுவது தெய்வ நிந்தனை ஆகும். எல்லாவற்றுக்கும் மேலாக, பொட்டு கட்டும் முறைக்குட்பட்ட ‘தேவ அடியாள்’களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்று சரடுவிட்டார் சத்தியமூர்த்தி.
கடவுள் நம்பிக்கையும் இறை அச்சமும் அறவே இல்லாத பிராமணர்கள், அத்தனை அயோக்கியத் தனத்தையும் கடவுளின் பெயராலும் சொர்க்கத்தின் பெயராலும்தான் செய்தனர்-செய்கின்றனர்.
இந்தப் பொய் மூர்த்திக்கு ‘தீரர்’ என்னும் அடைமொழி வேறு; தவிர கர்மவீரர் காமராசருக்கும் இந்த பொய்மூர்த்திதான் அரசியல் ஆசான்.
சட்டமன்றத்தில் திணறிப்போன முத்து லெட்சுமி, சட்டமன்றம் கலைந்ததும் நேராக பெரியாரிடம்தான் சென்றார். அன்று நடைபெற்ற விவாதங்களையும் சத்தியமூர்த்தியின் பிராமண நலம் சார்ந்த பொய்மூட்டைப் பற்றியும் கேட்டபின், ஒரு நுட்பமான கருத்தை எடுத்துக் கூறி, நாளைய சட்டமன்றக் கூட்டத்திலும் இதேப் பிரச்சினையைக் கிளப்பும்படி முத்துலெட்சுமியிடம் சொல்லி அனுப்பினார்.
சட்டமன்ற உறுப்பினர் முத்துலெட்சுமி அம்மாளும், பெரியார் சொல்லித் தந்தபடி மீண்டும் தேவ தாசி முறைக்கு எதிராகப் பேசியதுடன், அது உடனே ஒழிக்கப்ப்ட வேண்டும் என்றும் பேசினார்.
சத்தியமூர்த்தியோ, மீண்டும் பழைய பல்லவியையே பாடி, தேவதாசிப் பெண்கள் சொர்க்கத்திற்கு செல்வதை தடை செய்கிறார் முத்து லெட்சுமி என்று வாதிட்டார்.
சட்டென வெகுண்டெழுந்த முத்து லெட்சுமி, தேவ தாசிப் பெண்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைப்பது உண்மையானால், இதுவரை எங்கள் குலப் பெண்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்தது போதும்; இனிமேல் அக்ரகார வீதியில் இருந்து பிராமணப் பெண்களுக்கு பொட்டு கட்டுங்கள். கொஞ்ச காலத்திற்கு அவர்களுக்கும் சொர்க்கத்தில் இடம் கிடைக்கட்டும் என்று வெடுக்கென ஒரு போடு போட்டதும் அடங்கினார் சத்தியமூர்த்தி.
சனாதன கொள்கைப்படி, பெண்கள் படிக்கக்கூடாது; பால் மோகம் கொண்டவர்கள் பெண்கள் அன்பதால் அவர்களை வீட்டைவிட்டு வெளியே அனுப்பக்கூடாது; அவளுக்கு கல்வி கொடுக்கக்கூடாது; சொத்துரிமை கூடாது; கணவன் தீயவனாக இருந்தாலும் அவனுடன் வாழ வேண்டுமேத் தவிர பிரியக்கூடாது; கணவன் இறந்துவிட்டால், அதன்பிறகு அவளுக்கு வாழ்வில்லை என்பதால், கணவனை எரிக்கும் சுடலையின் தானும் பாய்ந்து மடிய வேண்டும் என்னும் கருத்துக்கெல்லாம் எதிராக, பெண்களை கற்க வைத்து, சொத்தில் உரிமை அளித்து, வீட்டை மட்டுமல்ல; நாட்டையும் ஆளும் வல்லமை வழங்கிய திராவிட இயக்கத்தைப்பார்த்து கஞ்சா பார்ட்டி என்பது அறிவீனத்தின் உச்சம்; பச்சை மடமையின் வெளிப்பாடு.
ஆண்களைப் போல பெண்களும் இடுப்பிற்கு மேலொரு ஆடை; கீழொரு ஆடையென கச்சிதமாக உடுத்துங்கள்; நீங்கள் வெறும் பிள்ளைபெறும் இயந்திரமல்ல; அடுப்படியில் வெந்து தொலையாதீர்கள்; கல்விச் சாலையை நாடுங்கள் என்று கல்விச் சாலைகளைத் திறந்தவர் தந்தை பெரியார்.

ஆசியாவில் முதன்முதலாக பெண்கள் பொறியியல் கல்லூரியைத் தொடங்கிய திராவிட இயக்கத்தைப் பார்த்து கஞ்சா பார்ட்டி என்பது கயமைத்தனத்தின் உச்சம்;
1920 முதல் இன்று வரை இடையில் 1938 முதல் 1967 வரை காங்கிரஸ் கட்சி ஆண்ட காலம் தவிர மீதி காலமெல்லாம் திராவிட இயக்கம்தான் தமிழகத்தை ஆண்டு வருகிறது. அந்தத் தமிழ் நாடுதான், இந்தியாவில் கல்வி-பொருளாதாதரம்-பெண் தொழில்முனைவோர் என எல்லா வகையாலும் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது.
தந்தைப் பெரியார் உருவாக்கிய சமூக மறுமலர்ச்சி இயக்கத்தின் அடிப்படையில் அரசியல் கட்சியை கிளைக்கச் செய்த பேரறிஞப் பெருந்தகை அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்தபொழுது, காங்கிரஸ் ஆட்சியில் இருந்த மதுவிலக்குக் கொள்கையை திமுக ஆட்சியிலும் தொடர்ந்தார் அண்ணா; அவருக்குப் பின் கலைஞர் மு. கருணாநிதியும் மதுவிலக்குக் கொள்கையை உறுதியாகக் கடைப்பிடித்தார்.
அனாலும், இந்தியாவில் ஏராளமான மாநிலங்களில் மதுவிலக்குக் கொள்கை அமலில் இல்லை; இந்த நிலையில், இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்த விழைந்த பிரதமர் இந்திரா, மதுவிலக்கை அமல்படுத்துவதால் ஏற்படும் பொருளாதார நட்டத்தை ஈடுகட்ட சம்பந்தப்பட்ட மாநிலாங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்கும்; அதனால், அனைத்து மாநிலங்களும் மதுவிலக்குக் கொள்கையை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த வேளையில், தமிழ் நாட்டு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி இந்திராவிடம் ஒரு கோரிக்கை வைத்தார்.
தமிழ் நாடு ஏற்கெனவே மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வருவதால், பொருளாதார இழப்பை எதிர்கொண்டு வருகிறது; அதனால், தமிழ் நாட்டு அரசுக்கும் நிதி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதற்கு இந்திரா அளித்த பதில், கலைஞருக்கு கடுஞ்சீற்றத்தை ஏற்படுத்தியது.
ஏற்கெனவே, திமுக அரசையும் தமிழ் நாட்டு மக்களையும் ஏமாற்றிவந்த காங்கிரஸ் அரசு-இந்திரா காந்தி, இந்த விசயத்திலும் துரோகம் இழைத்ததால் கலைஞர் மாற்றி யோசித்தார்.
நாடு முழுவதும் மத்தியிலும்-மாநிலங்களிலும்(வடக்கே திரிபுரா, தெற்கில் கேரளத்தைத் தவிர,(இரு மாநிலங்களிலும் பொதுவுடைமை இயக்கமான கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்றன) காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் வேளையில், தமிழ் நாட்டில் ஒரு பிராந்திய கட்சியான திமுக, காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தியதால் சினமுற்ற இந்திரா, தமிழ் நாட்டுக்குச் சொந்தமான கச்சத் தீவை, தமிழ் நாட்டு அரசின் ஒப்புதல் இன்றி, குறைந்தபட்சம் ஒரு தகவல்கூட தெரிவிக்காமல், இலங்கைக்குக் கொடுத்து, ஸ்ரீமாவோ பண்டாரநாயகெவிடம் நல்லபெயர் எடுத்துக் கொண்டார்; அதைப்போல, பாசன வசதிக்காகவும் வேளாண்தொழில் செழிக்கவும் சென்னை மாகாணத்திற்கு மேட்டூர் அணையையும் மைசூர் மாகாணத்திற்கு கிருஷ்ண ராஜ சாகர்(கே.ஆர். சாகர்) அணையை கட்டிய ஆங்கிலோயர்கள், அவற்றை 1924-இல் ஒருசேர திறந்துவைத்து, 50 ஆண்டுகளுக்குப் பின் இரு மாநிலங்களும் அப்போதைய பாசன பரப்பு-மக்கள் தொகை-நீர் வரத்து அகியவற்றின் அடிப்படையில் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் வரைந்தனர்.

அந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமல் தமிழக மக்களுக்கு துரோகம் செய்தவர் இந்திரா காந்தி; தமிழக மீனவர்கள் இன்றுபடும் பேரின்னலுக்கும் தஞ்சை வளநாடு இன்று வரண்டு போவதற்கும் முழு காரணம் இந்திரா செய்த சண்டித்தனம்.
இத்தனைக்கும் கலைஞர் உதவியில்லை என்றால், இந்திராவின் அரசியல் வாழ்வு 1969-யிலேயே முடிந்திருக்கும்.
அந்த நேரத்தில் புது டில்லியயை ஆண்ட காங்கிரஸ் கட்சி, சிண்டிகேட்-இண்டிகேட் என இரண்டாகப் பிரிந்திருந்தது; மொரார்ஜி தேசாய், காமராசர், நிஜலிங்கப்பா போன்றோர் ஓரணியாகவும் இந்திரா தலைமையில் இன்னோர் அணியாகவும் பிரிந்ததால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தார் இந்திரா காந்தி.
அந்த நேரத்தில் நாஞ்சில் மனோகரன் தலைமையிலான 25 திமுக எம்.பி.-க்களின் ஆதரவை அளித்த கலைஞரை, ஆபத்தான கட்டத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றியவர் என்ற விசுவாசம்கூட இல்லாமல், மதுவிலக்கு கொள்கையிலும் கலைஞருக்கு துரோகம் இழைத்தார் இந்திரா.
அதாவது, மதுவிலக்குக் கொள்கையை ஏற்கெனவே நடைமுறைப் படுத்தும் மாநிலங்களுக்கு நிதி உதவி கிடையாது; புதிதாக அமல்படுத்தும் மாநிலங்களுக்குத்தான் நிதி என்று வஞ்சனை புரிந்தார் இந்திரா. இதற்கிடையில், காமராசரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று இந்திரா கேட்டுக் கொண்டதை கலைஞர் புறக்கணித்தார் என்பது, இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.
உண்மையில், கர்மவீரர் காமராசர், அரசியல் விவேகி கலைஞர் ஆகிய இரு வேட்டி கட்டிய தமிழர்கள் இல்லை யென்றால், இந்திரா காந்திக்கு அரசியல் வாழ்வே இல்லை என்பதுதான் முற்றிலும் உண்மை.
1964 மே 27-ஆம் நாள் பிரதமர் நேரு மறைந்த நேரத்தில், குன்சாரி லால் நந்தா இடைக்கால பிரதமராக பொறுப்பு வகித்தார். அந்த வேளையில், அடுத்தப் பிரதமர் தான்தான் என்று வெளிப்படையாகவே சொன்ன மொரார்ஜி தேசாய், அதற்காக அதரவு திரட்டும் முயற்சியில் கடுமையாக இறங்கினார்.
அதை முறியடித்தவர், அப்பொழுது இந்திய தேசிய காங்கிரஸ் பொதுச் செயலராக இருந்த கர்மவீரர் காமராசர்.
காரணம், மொரார்ஜி தேசாய் வஞ்சக அரசியலுக்கு பெயர் பெற்றவர் என்பதையும் ஆர்.எஸ்.எஸ். சார்புடையவர் என்பதையும் காமராசர் நன்கு அறிந்திருந்தார்.
இந்தியா விடுதலை அடைவதற்குமுன் மராத்திய மாகாண அரசில் உள்துறை அமைச்சராக இருந்தவர் இதே மொரார்ஜி தேசாய். அந்த நேரத்தில், அவரிடம் ஒரு இரகசிய கோப்பு ஒப்படைக்கப்பட்டது.
அதில், காந்தியை கொலை செய்வதற்கான முயற்சி கடந்த ஏழெட்டு ஆண்டு-களாகத் தொடர்வதாகவும் அது தற்பொழுது உச்சத்தைத் தொட்டுள்ளதாக-வும் சம்பந்தப்பட்ட கோப்பின் புலனாய்வுத் தகவல் தெரிவித்தது. இந்தக் கொலைச் சதியின் மையப்புள்ளியாக பம்பாய் நகரம்(இப்பொழுது மும்பாய்) உள்ளது. குறிப்பாக, சிவாஜியின் மராட்டியப் படையில் படைவீரர்களாக இருந்த சித்பவன பிராமணர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அனால், மொரார்ஜி இது குறித்து எந்த நடவடிகையும் எடுக்காமல் மிகுந்த அலட்சியம் காட்டினார். 1947 ஆகஸ்ட் 15 சுதந்திரத்திற்குப் பின் மத்திய அமைச்சரான பின்பும் காந்தியின் பாதுகாப்பு குறித்து மொரார்ஜி கண்டுகொள்ளவே இல்லை என்பதை அறிந்த காமராசர், மொரார்ஜிக்குப் பதிலாக லால் பகதூர் சாஸ்திரியை இந்தியாவின் இரண்டாவது பிரதமராக் உருவாக்கினார்.
ஆனால், இரண்டு ஆண்டுகளிலேயே அவர் அகால மரணடைந்தார். பஞ்சசீலக் கொள்கை என்னும் டாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவதற்காக வெளிநாட்டிற்கு சென்ற லால் பகதூர், அங்கேயே மர்மமான முறையில் மறைந்தார்.
இப்பொழுது மீண்டும் மொரார்ஜி, தான்தான் இனி அடுத்த பிரதமர் என்று மனக்கோட்டைக் கட்டியதுடன், புதுடில்லி கோட்டையில் கொலுகொள்ளவும் விழைந்தார். இடையில், குன்சாரி லால் நந்தா மீண்டும் இடைக்கால பிரதமராக பொறுப்பு வகித்தார். இவர், தமிழ் நாட்டு நெடுஞ்செழியன் போலும்!
ஆனால், காமராசரோ, “லடுக்கா நை; லடிக்கி ஹை’ என்று கூறி, இந்த முறை பிரதமர் ஆகப் போகிறவர் ஆண் கிடையாது; ஒரு பெண்தான் என்று அறிவித்துவிட்டு, இந்திரா காந்தியைப் பிரதமர் ஆக்கினார்.
தான் பிரதமர் ஆக ஒரு தமிழரும் அப்பதவியில் தொடர் இன்னொரு தமிழரும் துணைபுரிந்ததை மறந்தது மட்டுமன்றி, மது விலக்குக் கொள்கையிலும் இந்திரா காந்தி, தமிழ் நாட்டு நிதி ஆதாரத்திற்கு துரோகம் இழைத்ததை கலைஞரால் பொறுக்க முடியாமல் கள்ளுக் கடைகளைத் திறந்தார்.
திமுக ஆட்சிக்கு வரும்பொழுதெல்லாம் நெருக்கடி நேர்கின்றன. அண்ணா ஆட்சிக்கு வந்த நேரத்தில் அவரை நோய் தொற்றிக் கொண்டது; கலைஞர் ஆட்சிக்கு வந்த நேரத்தில் 1969-இல் நெடுஞ்செழியனும் 1971-இல் எம்ஜிஆரும் கலகம் விளைவித்தனர்.
எம்ஜிஆரைத் தூண்டிவிட்டு திமுக-வை பிளந்ததும் இந்திரா காந்திதான். எல்லாவற்றையும் சமாளித்து வந்த கலைஞர், கள்ளுக் கடைகளைத் திறந்ததில் ஓர் அரசியல் நகர்வும் இருந்தது.
காமராசரைத் தோற்கடித்ததால் ஆராத வடுவுடன் இருந்த நாடார் சமூக மக்களை திருப்திப்படுத்தும் நோக்கம் அதில் பொதிந்திருந்தது; கள்ளைத் தவிர, பதனீருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அதன்வழி கருப்பட்டித் தயாரித்தல், பனை ஓலகளைப் பயன்படுத்தி கைவினைப் பொருட்கள், பெயரட்டைத் தயாரித்தல் என்றெல்லாம் குடிசைத் தொழில் அறிமுகப் படுத்தப்பட்டு மாநில அரசின் சார்பில் நிதியுதவியையும் அளித்தார் கருணாநிதி.
ஆனாலும், புதிய தலைமுறைக்கு மதுப் பழக்கத்தை அறிமுகத்துகிறார் என்ற விமர்சனம் பரவலாக எழுந்ததும், உடனே கள்ளுக் கடைகளை மூடிவிட்டார் கருணாநிதி.
பின்னர் ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர்-தான், Brandy, Whisky, Rum, Gin, Wine. Beer உள்ளிட்ட சீமை சரக்குகளை உட்படுத்தி மதுக்கடைகளைத் திறந்தார். அதை வணிகத் துறை மூலம் நிறுவனமயமாக்கிய எம்ஜிஆர்தான் டாஸ்மாக்(TASMAC) கடைகளைத் திறந்தார். அவருக்குப் பின் வந்த ஜெயலலிதா, டாஸ்மாக் கடைகளில் குடிப்பக வசதியையும்(பார் வசதி) ஏற்படுத்தித் தந்தார்.
திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கும் மதுவுக்கும் உள்ள தொடர்பு இதுதான். இந்த நிலையில், கஞ்சா பார்ட்டி, கஞ்சா பார்ட்டி என்று இந்த சமூக-அரசியல் இயக்கங்களை விமர்சிக்கும் கசடர்களுக்கு அரசியல் தெளிவும் இல்லை; சமய ஞானமும் இல்லை; சமூகப் பார்வையும் இல்லை. காரணம், இதுகள், சிறுபான்மை சமுதாயத்தில் குறுக்குசால் ஓட்டிகள்; ஆன்மிக எல்லையில் உலவும் மதவெறி போக்கு கொண்டதுகள்!.


