
மலேசிய இந்திய சமுதாயத்தில் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் நிலவினால் எதையும் சாதிக்கலாம் என்று மக்கள் நீதி கட்சி-பிகேஆர் உலு சிலாங்கூர் தொகுதி ஒருங்கிணைப்பாளரும் மருத்துவருமான டாக்டர் சத்திய பிரகாஷ் தெரிவித்தார்.
ராவாங், தாமான் முஹிபா குடியிருப்புப் பகுதியில் உள்ள அருள்மிகு மாரியம்மன் ஆலயத்திற்கு நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சி, நேற்று ரதம் பட்டணத்தில் உள்ள ‘Nice Banquet’ மண்டபத்தில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு ஆலய வளர்ச்சிக்கு நிதி அளித்ததுடன் சிறப்புரையும் ஆற்றிய டாக்டர் சத்திய பிரகாஷ், நம் சமுதாயத்தில் சாக்குப் போக்கு சொல்லும் மனநிலை மாற வேண்டும்.
தனி மனிதராக இருந்தாலும் சமய-சமூக அமைப்பாக இருந்தாலும் அரசியல் இயக்கமாக இருந்தாலும் இயன்றதை செய்து கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

அத்தகைய பாங்கு, ஒரு கட்டத்தில் நம்மை வெற்றிப் பாதையில் கொண்டு சேர்க்கும்.
“அதற்கு சரியான சான்று, தற்பொழுது இந்த அரங்கத்தில் கூடியிருக்கின்ற நாம்தான்” என்று அவர் சொன்னார்.
நம் சமுதாயத்தில் ஒற்றுமையும் ஒருமித்த பார்வையும் நிலவினால் குறுகிய காலத்தில் இலட்சக்கணக்கான வெள்ளி நிதியை பொது நோக்கத்திற்காக திரட்ட முடியும் என்பதை இந்த அரங்கத்தில் நாம் கண்கூடாக காண்கின்றோம்.

ஒன்றுபட்ட உணர்வையும் ஒற்றுமையையும் நிரூபித்திருக்கிறோம் என்பதை நீங்களும் நானும் உள்ளிட்ட அனைவரும் நம் கண்முன்னாலேகாண்கிறோம்.
இதுதான் நம் சமுதாயத்திற்கு தேவை; இன்று மட்டுமல்ல என்றென்றும் தேவை;
இதே மனப்பாங்கு அரசியலிலும் பிரதிபலித்தாள் ஆம் நம்முடைய எதிர்காலத்தை வலுவாக அமைத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் சொன்னார்.

உலு சிலாங்கூர் நகராட்சி மன்ற உறுப்பினர் பா புவனேஸ்வரன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், நிறைவாக ஆலயதா தலைவர் டத்தோ சுரேஷ் உரையாற்றினார்.
ரவாங் தாமான் முகிபா அருள்மிகு மாரியம்மன் ஆலய வளர்ச்சிக்காகவும் குடமுழுக்கு விழாவிற்காகவும் இதுவரை 1லட்சத்து 78ஆயிரத்து800 வெள்ளி நிதி சேர்ந்து இருப்பதாகவும் குறுகிய காலத்தில் இதைத் திரட்ட முடிந்திருக்கிறது என்றால் நம் சமுதாயத்தில் ஆலய திருப்பணிக்கு அள்ளிக் கொடுக்கும் தன்மை நிலவுவதுதான் காரணம் என்று அவர் சொன்னார்.
இதன் தொடர்பில் பாடுபட்ட அனைத்து தரப்பினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.





