
மலேசிய இந்திய காங்கிரஸ்-மஇகா, சிலாங்கூர் மாநிலம் கோம்பாக் தொகுதியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் இன்று திங்கட்கிழமை பத்து மலையில் மேற்கொண்ட தொண்டு, சமயப் பணியா சமூகப் பணியா என்று அடையாளம் காண முடியவில்லை;
பத்துமலை திருமுருக வளாகத்தை ஒட்டியுள்ள ஆற்றங்கரையிலிருந்து பால்குடம், இலகு காவடி, அலங்கார காவடி போன்றவற்றை சுமந்து வருகின்றவர்கள் ஏறக்குறைய ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு கால்நடையாக நடந்து வர வேண்டிய சூழலில், அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள சாலைகளில் துப்புரவு பணியை மேற்கொண்டது சமயப் பணியும் சமூகப் பணியும் இணைந்த தொண்டு என்று கருதலாம்.

தொகுதித் தலைவர் க. கோபி தலைமையில் தொகுதியின் இளைஞர் மகளிர் புத்ரா புத்ரி பிரிவினர் ஒன்றிணைந்து இந்தத் தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.
சாலையின் இருமருங்கிலும் முளைத்திருந்த புல் பூண்டு குவிந்திருந்த சிறு-குறு சரலைக் கற்கள் உட்பட அனைத்தையும் அகற்றி பாதசாரி பக்த பெருமக்களுக்கு துணைபுரியும் வகையில் இந்தத் தூய்மை பணியை மேற்கொண்டது மிகவும் குறிப்பிடத்தக்கது; பாராட்டிற்குரியது.



