Tuesday, April 21, 2026

திராவிட நிலத்தில் எதேச்சாதிகாரத்தையும் மதவாதத்தையும் வீழ்த்த கருப்பு, சிவப்பு, நீலக் கொள்கைகள் நிலைபெற வேண்டும்!

திமுக தலைவரும் தமிழ்நாட்டு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் உரை!

எல்லாருக்கும் எல்லாம்’ எனும் சமத்துவச் சமுதாயத்தை அமைக்க பாடுபட்டுக் கொண்டிருக்கும் தோழர்களின், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்று, உரையாற்றுவதை, எனக்குக் கிடைத்த பெருமையாக எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன்!

கம்யூனிசம் என்பது, ஒரு உணர்வு! மனிதர்கள் அனைவருக்குள்ளும் உருவாக வேண்டிய உணர்வு! அந்த உணர்வுக்கு அரசியல் வடிவம் கொடுத்து – செங்கொடியை ஏந்தி உழைத்துக் கொண்டிருக்கும் உங்களின் உழைப்பிற்கு ஈடு இணையில்லை!

இந்த இயக்கத்திற்காகப் பாடுபட்ட தோழர் அய்யா நல்லக்கண்ணு, நூற்றாண்டைக் கடந்திருக்கிறார். இது எந்த இயக்கத்திலும் இல்லாத மிகப்பெரிய சாதனை.

நூற்றாண்டைக் கொண்டாடும் இந்த நேரத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைமைக்கும் – தமிழ்நாட்டில் இயக்கத்தை வலிமையாக நடத்திக் கொண்டிருக்கும் தோழர்களுக்கும் – திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மட்டுமல்ல; திராவிட மாடலால் தமிழ்நாட்டை வளர்த்தெடுக்கும் முதலமைச்சராக மட்டுமல்ல; உங்களில் ஒருவனாக நான் மனதார வாழ்த்துகிறேன்.

திராவிட இயக்கத்திற்கும் – பொதுவுடைமை இயக்கத்திற்கும் இலக்கு ஒன்றுதான்!

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய ஒற்றை இலக்கு! அதனால்தான், திராவிட இயக்கக் கொடிகளில் சிவப்பு இருக்கிறது! திராவிட முன்னேற்றக் கழக கொடியிலும் சரிபாதியாக சிவப்பு இருக்கிறது!

நம்முடைய கொள்கைகளில் – அரசியல் வழிமுறைகளில் – சிற்சிறு வேறுபாடுகள் இருந்தாலும் நம்முடைய பொது இலக்கு சமத்துவச் சமுதாயம்தான்!

அதனால்தான், இந்த மேடையில், தோழமைக் கட்சியினர் அத்தனை பேரும், இந்த நூற்றாண்டு ஆலமரத்தை வாழ்த்த ஒன்று கூடியிருக்கிறோம்! இந்த ஒற்றுமைதான், இந்திய நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான ஒற்றுமை.

கருப்பு, சிவப்பு, நீலம் ஆகிய கொள்கைகள் இங்கு நிலைபெற வேண்டும்; அதிகமான உழைப்பை கொடுக்க வேண்டும் என்று, நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

திராவிட இயக்கத்திற்கும் – கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் உள்ள நட்பு உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்! இது நூறாண்டு காலமாகத் தொடரும் நட்பு!

தலைவர் கலைஞர் அவர்களோ, “திராவிட இயக்கம் உருவாகாமல் போயிருந்தால், நானே கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன்” என்று சொன்னார். அனைத்திற்கும் மேல், எனக்கு ஸ்டாலின் என்று பெயரும் வைத்தார். எனக்குள்ளும் அந்த உணர்வு ஓடுவதால்தான், உங்களில் ஒருவனாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்.
இங்கு சொன்னார்களே, இரண்டு நாட்களுக்கு முன்புகூட, சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் சிராவயலில், உத்தமர் காந்தி – தோழர் ஜீவா சந்திப்பின் நினைவாக, தமிழ்நாடு அரசின் சார்பில் அமைத்திருக்கும் அரங்கத்தை நான் திறந்து வைத்தேன்.

அதேபோன்று, தொடர்ந்து, சென்னை கன்னிமாரா நூலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காரல் மார்க்ஸ் சிலையை, வரும் 6-ஆம் நாள் திறந்து வைக்க இருக்கிறேன்.
இவ்வாறு, உங்களில் ஒருவனாக நானும் – என்னில் பாதியாக நீங்களும் இருப்பதால்தான், ஸ்டாலின் என்று என்னை அழைக்கும்போதெல்லாம், என்னுள் சிவப்பு வந்து குடிகொள்கிறது.

நமக்குள் இருக்கும் நட்பு என்பது, தேர்தல் அரசியலை கடந்த நட்பு! சாதியவாதம் – வகுப்புவாதம் – பெரும்பான்மை வாதம் – எதேச்சாதிகார வாதம் என்று, மக்களை ஒடுக்கும் அத்தனைக்கும் எதிராக, ஜனநாயகச் சக்திகள் ஒற்றுமையுடன் ஓரணியில் நின்று பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவான தோழமை, நம்முடைய தோழமை!

நான் உறுதியாக சொல்கிறேன்… இந்தத் தோழமைதான், பாசிசத்தை ஒழிக்கும் – வீழ்த்தும்! இந்தத் தோழமைதான், எதேச்சாதிகாரத்தை வீழ்த்தும்! இந்தத் தோழமைதான், மதவாதத்தை வீழ்த்தும்! இந்தத் தோழமைதான், சர்வாதிகாரத்தை வீழ்த்தும்!
நம்முடைய இந்த நோக்கங்களுக்கு எதிராக இருப்பவர்கள், என்னென்னவோ கனவுகள் கண்டார்கள்… இந்த ஒற்றுமையைச் சிதைக்க முடியுமா என்று பார்த்தார்கள்!

ஆனால், அவர்களின் எண்ணம்தான் சிதைந்து போயிருக்கிறது! நம்முடைய இந்தத் தோழமையை எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியாது!

ஏன் என்றால், இது எண்ணிக்கைக்காக அமைந்த கூட்டணி அல்ல; எண்ணங்களுக்காக அமைந்திருக்கும் கூட்டணி! நம்முடைய இந்திய நாட்டையும் – தன்மானமிக்க தமிழ்நாட்டையும் காக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தை, லட்சியமாகக் கொண்டு அமைந்திருக்கும் கூட்டணி!

பாசிச பா.ஜ.க., தன்னுடைய ஆக்டோபஸ் கொடுங்கரங்களை அனைத்துப் பக்கமும் நீட்டி, கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது!

இந்திய நாடு, இதுவரை காப்பாற்றி வந்த அனைத்து விழுமியங்களையும் சிதைக்கும் செயலை, ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்து கொண்டு வருகிறது! இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கோட்பாடுகளை, தங்களுக்கு ஏற்ற மாதிரி சிதைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்பதை அழித்து, ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக மாற்ற நினைக்கிறார்கள்.

பா.ஜ.க. எவ்வளவு ஆபத்தானது – எவ்வளவு குறுகிய சிந்தனை கொண்டது – எந்தளவிற்குப் பன்முகத்தன்மைக்கு எதிரானது என்றால், அவர்களைப் பொறுத்தவரைக்கும், ஒரு நாடு என்றால், அதில் ஒரு மதம் – ஒரு மொழி – ஒரு பண்பாடு – ஒரே ஒரு தலைமைதான் இருக்க வேண்டும்

மாநிலங்களின் வளத்தைச் சூறையாடி, ஒன்றியத்தில் குவிக்கிறார்கள்! மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள்! மதச்சார்பின்மை – சோசலிசம் – சமநீதி – சமூகநீதி – பொதுவுடைமை – பொது உரிமை உள்ளிட்ட சொற்களைக் கேட்டாலே, பா.ஜ.க.வினருக்குக் கசக்கிறது! இந்தச் சொற்களை எல்லாம், ஆட்சியில் இருந்து மட்டுமல்ல – அகராதியில் இருந்தே அழிக்க வேண்டும் என்று துடியாகத் துடிக்கிறார்கள்!

பரந்து விரிந்த நம்முடைய இந்திய நாடு, இப்போது மிகப்பெரிய நெருக்கடிக்கும் – ஆபத்துக்கும் உள்ளாகி இருக்கிறது!
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. நினைத்தது போன்று, 400 இடங்கள், 370 இடங்கள் என்று வெற்றி பெற்றிருந்தால், இப்போது இருப்பதைவிட நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும்! இந்தியாவில் இருக்கும் ஜனநாயகச் சக்திகள் அனைத்தையும் இன்றைக்கு இணைத்து, ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கி, பா.ஜ.க.வின் வேகத்தைக் குறைத்திருக்கிறோம்! ஆனாலும், பெரும்பான்மை இல்லாத நேரத்திலேயே, பா.ஜ.க. தன்னுடைய கொடூரமான நகங்களைப் பயன்படுத்தி, ஜனநாயகத்திற்கு காயங்களை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது! இந்தச் சூழலில், நாம் அனைவரும் எச்சரிக்கையாகவும் – கவனமாகவும் இருக்க வேண்டும்!
ஏன் என்றால், வரப்போகும் சட்டமன்றத் தேர்தல், தமிழ்நாட்டுக்கும் – N.D.A. கூட்டணிக்கும் நடக்கும் தேர்தல்! இதை மக்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்! தமிழுக்கும் – தமிழினத்திற்கும் – தமிழ்நாட்டுக்கும் – அடுக்கடுக்காக துரோகங்களை செய்துவிட்டு, துரோகத்திற்கு ஏற்ற கொத்தடிமைகள் அனைவரையும் ஒன்று சேர்த்து, அவர்கள் முதுகில் ஏறி வருகிறது, பா.ஜ.க.!

Made with LogoLicious Add Your Logo App

அமலாக்க துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை(E.D. – I.T. – C.B.I.) ஆகியவற்றை ஏவி விட்டு, வழக்குகளைக் காட்டி மிரட்டி அமைக்கப்பட்டுள்ள அந்தத் தேர்தல் கூட்டணியின், தேர்தல் பரப்புரைக்கு வந்த பிரதமர் மோடி, அ.தி.மு.க. என்ற பெயரையே சொல்லவில்லை!

ஏன், அவர் அ.தி.மு.க.வின் பெயரைச் சொல்லவில்லை தெரியுமா? ஏன் என்றால், அ.தி.மு.க. என்பது தனிக்கட்சி கிடையாது! பா.ஜ.க.வின் கிளை அமைப்பு! அந்தக் கிளை அமைப்பைச் சேர்ந்த பழனிசாமி, மோடி கொடுக்காத வாக்குறுதிகள் அனைத்தையும் இப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
முக்கியமாக, மகாத்மா காந்தி பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தில், 50 நாட்கள்கூட வேலையைத் தராமல், ஒன்றிய பா.ஜ.க. அரசு எப்படியெல்லாம் சீரழித்தது என்று, நாட்டுக்கே நன்றாகத் தெரியும்! இப்போது, தேசத்தந்தை காந்தியின் பெயரையே அழித்திருக்கும் அந்தத் திட்டத்தில், 125 நாட்கள் வேலை தரப்போவதாக பா.ஜ.க. சொல்கிறது!

ஆனால் பழனிசாமி, 150 நாட்கள் வேலை தருவோம் என்று, முதலாளிகளை மிஞ்சும் பர்ஃபார்மென்ஸ்-ஐ இன்றைக்குச் செய்து கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் எப்படியும் தோல்வி உறுதி என்ற காரணத்தினால், பா.ஜ.க. அரசும் இந்தப் பட்ஜெட்டிலும் நம்மைப் புறக்கணித்திருக்கிறது. இந்த லட்சணத்தில், நேரடியாக பா.ஜ.க. ஆட்சி என்று சொல்ல கூச்சப்பட்டு, ‘டபுள் எஞ்சின்’ ஆட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்! பா.ஜ.க. சொல்லும் டபுள் எஞ்சின் என்பது டப்பா எஞ்சின் என்று நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்!

எடுத்துக்காட்டுக்கு சொல்கிறேன்… போதை மருந்து கடத்தலா? பா.ஜ.க. ஆளும் குஜராத்தைப் பாருங்கள்! குற்றச்சம்பவங்களா? பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசத்தைப் பாருங்கள்! மாநிலமே பற்றி எரிவதை பார்க்க வேண்டுமா? பா.ஜ.க. ஆட்சி செய்த மணிப்பூரைப் பாருங்கள்! இன்னும் சொல்கிறேன்… பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகமாக நடக்கும் மாநிலங்களாக, ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களே எந்த மாநிலம் என்று சொல்கிறதே… உத்தரப்பிரதேசம் – ராஜஸ்தான் – மத்தியப் பிரதேசம்! இந்த மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க.தான் ஆளும் கட்சி! சரி, முதல் மூன்று மாநிலங்கள் மட்டும்தானா? அடுத்த மூன்று இடங்களில் இருப்பது யார்? பீகார் – ஒடிசா – மகாராஷ்டிரா! இந்த மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க.தான் ஆட்சியில் இருக்கிறது. இதுதான் டப்பா எஞ்சினின் லட்சணம்!
நாட்டுக்கே முன்னோடியான திட்டங்களை, தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் நாம் இன்றைக்குச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

அதிக வளர்ச்சியடைந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை திராவிட மாடல் உயர்த்தியிருக்கிறது! இங்கு பா.ஜ.க.வின் டப்பா எஞ்சினுக்கு வேலையே கிடையாது! இதே உணர்வைத்தான், மக்களின் முகங்களில் மகிழ்ச்சியாக நான் பார்க்கிறேன்!
அண்மையில், இந்தியா டுடே பத்திரிகையும் – சி வோட்டர்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், நம்முடைய கூட்டணி 45 விழுக்காடு ஆதரவுடன் முன்னிலையில் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்! நான் உறுதியாகச் சொல்கிறேன், நமக்கான ஆதரவு நிச்சயம் இன்னும் கூடுதலாகத்தான் இருக்கும்! கருத்துக்கணிப்புகள் – கருத்துத்திணிப்புகள் அனைத்திலும் கவனத்தைச் செலுத்தி, நம்முடைய எண்ணத்தை சிதறவிட்டுவிட வேண்டாம்; மெத்தனமாக இருந்துவிட வேண்டாம்.

மக்களுடன் இணைந்து நம்முடைய பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்! தோழமைக் கட்சியினர் அனைவரும் இன்னும் வேகமாகப் பரப்புரைகளைத் தொடங்க வேண்டும் என்று உரிமையுடன் நான் கேட்கிறேன்.
தமிழ்நாட்டில் நாம் பொறுப்பேற்று, நாம் பெறப்போகும் வெற்றி – “பா.ஜ.க.வை வீழ்த்த முடியும்” என்ற நம்பிக்கையை ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் வழங்கும் வெற்றியாக இருக்க வேண்டும்! ஒற்றுமை இருக்கும் இடத்தில் பா.ஜ.க.வின் பாசிச எண்ணம் ஒருபோதும் பலிக்காது என்பதை நாம் மீண்டும் நிரூபித்துக் காட்டுவோம்! வெல்வோம் ஒன்றாக! என்று கூறி விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!


செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை