Tuesday, April 21, 2026

தைப்பூசத் திருவிழாவா, விநாயகர் சதுர்த்தியா அல்லது ஆஞ்சநேயர் வழிபாடா?

தொல் தமிழ்க் குடியினரின் ஆன்மிக பயணம் திசையறியாமல் தொடர்கிறது!

பால், பருவம், வண்ணம், வடிவம், மூப்பு, இளமை என்னும் வரைமுறை கடந்து அணுவாகவும் அண்டமாகவும் அண்டத்தின் பிண்டமாகவும் ஒப்புயர்வு இன்றி அங்கிங்கு எணாதபடி எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற ஒப்பிலா உயர்விலா பரம்பொருளை வழிபடுவதற்கு இந்து சமயத்தில் ஆறு உயர்நெறிகள் வகுக்கப்பட்டுள்ளன.

இறைவனுக்கு உருவம் இருக்கிறதா, இல்லையா அல்லது இரண்டும் கலந்த நிலையில் உள்ளவரா என்பதற்கு எவரும் தீர்க்கமான விளக்கம் சொல்லாததால், இத்தகைய பரம்பொருளை உருவமாகவும் அருவமாகவும் அல்லது இருநிலைசார் அருவுருவாகவும் தத்தம் மன நிலைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப வழிபடும் முறை பல்லாயிர ஆண்டுகளாகவே தொடர்கிறது.

ஆதித்தமிழரின் கொற்றவை வணக்க முறையில் இருந்து இன்றைய சாய்பாபா வணக்க முறைவரை தமிழர்கள் தம்ஆன்மீக பயணத்தில் தாவித் தாவி வந்துள்ளனர்.

ஆன்மிக கொள்கையை அவ்வப்பொழுது மாற்றிக் கொள்வதிலும் சூழ்நிலைக்கு ஏற்ப மதம் மாறுவதிலும் தமிழர்களை மிஞ்சுவதற்கு உலகத்தில் எந்த இனத்தாலும் முடியாது.

இயற்கை வழிபாடு, ஆசீவகம், சமணம், பௌத்தம், சைவம், எல்லாவற்றையும் கடந்து கூட்டு சமயமான இந்து சமயம் என்றெல்லாம் தமிழர்கள் தங்களின் வழிபாட்டு முறையை காலம் தோறும் மாற்றிமாற்றி வந்துள்ளனர்.

ஏறக்குறைய 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய மௌரியப் பேரரசு காலத்தில், குறிப்பாக அசோக பெருமன்னன் காலத்தில் பௌத்தம் இன்றைய இந்தியா முழுவதும் பரவியிருந்தது.

சீனா ஜப்பான் வியட்நாம் மலேசியா இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் தவிர இலங்கையிலும் முழுதாக பரவி இருந்தது.

அவ்வண்ணம் இலங்கைக்கு சென்ற பௌத்தம் அன்றைய தமிழ்நாட்டின் வழியேதான் பரவியது.

அசோக் மன்னனின் மகள் சுமித்திரை தலைமையில் இந்த மத பிரச்சாரமும் மதமாற்ற நடவடிக்கையும் அப்பொழுது இடம்பெற்றன.

அக்காலத்தில் தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட புத்தரின் சிலைகளை எல்லாம் இன்று பிராமணியம் திருடிக் கொண்டு, அவற்றை ராமர் பாதம் என கதை கட்டி விட்டது.

இராமன் என்ற கார்மேகன் தமிழ்நாட்டில் தலைகாட்டவே இல்லை; பின்னர் எப்படி அவனுடைய பாதங்கள் மட்டும் இருக்கும்?

புத்தபிரானின் பாதங்களை மட்டும் திருடவில்லை; வலிமையின் அடையாளமாக உருவகப்படுத்தப்பட்ட யானை, காவி வண்ணம் ஆகியவற்றையும் பௌத்த சமயத்தில் இருந்துதான் பிராமணர்கள் திருடிக் கொண்டனர்

இத்தகைய சூழலில், தற்பொழுது, சௌரம் சைவம் வைணவம் சாக்தம் கணபதியம் கௌமாரம் என்னும் ஆறு கொள்கைகளை உள்ளடக்கிய இந்து சமயத்தில் தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு நாயகனான திருமுருக வழிபாட்டிற்குரிய கொள்கை கௌமாரம்.

இந்த கௌமார வணக்க முறையின் வழிபாட்டு நாயகனாக முருகனையும் முருகன் ஏந்தியுள்ள ஞான வடிவான வேலையும் திருமுருகனின் திரு நாயகி வள்ளியையும் முருகனுக்கு இரண்டாவது மனைவியாக பார்ப்பனர்கள் சேர்த்து வைத்த தெய்வானையையும் மயிலையும் வணங்குவது இன்றைய தமிழர்தம் ஆன்மீக பெருவழக்காக இருக்கிறது.

அந்த வகையில் தற்பொழுது உலகெங்கும் தைப்பூச திருவிழா பாரிய அளவில் கொண்டாடப்படுகிறது.

தைத் திங்களில் முழு நிலவு நாளில் பூச நட்சத்திரம் கூடிவருகின்ற வேளையில் கொண்டாடப்படுவதாக தைப்பூச திருவிழா வரையறுக்கப்பட்டுள்ளது.

இத்தகைய விழாவில் திருமுருகனுக்கு உள்ள அடையாளங்களாக முருகனின் திரு உருவம், வேல், மயில், போன்றவற்றை விடுத்து ஆஞ்சநேயர், முனியாண்டி சாமி ராமர், பிள்ளையார் போன்ற உருவங்களை தாங்கிய காவடிகளை சுமப்பது எந்த அடிப்படையில் என்பதை அறியாமலும் புரியாமலும் இடும்பன் வழியில் காவடி சுமந்து வந்து திருமுருகனை வழிபடுவது என்ன வழிபாட்டு முறை என்று காவடி எடுப்பவர்களும் சிந்திப்பதில்லை; இது குறித்து சமய சான்றோர்களும் ஆன்றோர்களும் விளக்கமும் அளிப்பதில்லை; அறியாத பக்தர்களை முறைப்படுத்தி நெறிப்படுத்தவும் முனைவதில்லை

தைப்பூசத் திருவிழா தொடர்பில் இடம்பெறுகின்ற தேர்ப் பாதையில் அமைக்கின்ற தண்ணீர் பந்தல்களில் பத்ரகாளி பாடலை ஒலிக்கச் செய்கின்றனர் இராமனைப் போற்றி பாடுகின்றனர்.

தமிழின பக்தர்களை சீரான வழியில், முறையான ஆன்மீக பாதையில் ஒழுங்குபடுத்தவும் ஆன்மிக எல்லையில் ஒருவரும் இல்லை என்றூகிவிட்டது.

தைப்பூச திருவிழாவிற்காக காவடி சுமந்து வருபவர்கள் சாய்பாபா உருவத்தை சுமந்து வருகின்றனர். பாரம்பரியமிக்க ஒரு நாளேட்டின் சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர்ப் பந்தலில் பிள்ளையார் உருவத்தை மிகப்பெரிய அளவில் வைத்திரூந்தனர். இது திருமுருக வழிபாடா? பிள்ளையாரை வணங்கும் விநாயகர் சதுர்த்தி விழாவா என்ற தெளிவும் புரிதலும் ஒருவருக்குகூட இல்லாமல் இவ்வாறு ஏற்பாடு செய்திருந்தனர்

அந்த பிள்ளையாரின் இருமருங்கிலும் மிகப்பெரிய மயில் உருவத்தை வைத்துள்ளனர்.

விநாயகர் என்றால் அவரின் இருமருங்கிலும் யானை உருவங்களையும் பிள்ளையாரின் வாகனமான எளியையும் அமைத்தால் பொருத்தமாக இருக்கும்.

கடுகளவும் பொருத்தம் இல்லாமல் மிகப் பெரிய விநாயகர் சிலை அருகே மயில் சிலைகளை வைத்து தண்ணீர் பந்தல் அமைத்து தைப்பூச விழாவை கொண்டாடுவது என்ன பொருத்தம் என்று தெரியவில்லை.

சமூகத்திற்கு நல்லதைச் சொல்ல வேண்டிய ஊடகத்தாரே இப்படி இதையும் அதையும் கலந்து குழப்புவது தமிழர்களின் ஆன்மீக பயணம் இதுவும் இல்லாமல் அதுவும் இல்லாமல் எதுவும் இல்லாமல் தறிகெட்டு செல்கிறது என்பதற்கு தக்க சான்றாக அமைந்துள்ளது.

திருமுருக கடவுளுக்குரிய காவடியில் முருகனையோ மயிலையோ வேலையோத் தவிர வேறு உருவங்களை சுமந்து வருவது பொருத்தமா என்று சிந்திக்காமல் செயல்படுபவர்களை கண்டும் காணாமல் அல்லது நெறிப்படுத்தாமல் கடந்து செல்வது ஆன்மீக தலைவர்களுக்கும் சமய அமைப்புகளுக்கும் பொருத்தமல்ல; சமய சான்றோர்களும் ஆன்றோர்களும் விலகி நிற்பது அத்துணை பொருத்தமாகப்படவில்லை

இந்த அலங்கோல வழிபாடுகளை நேர்ப்படுத்தவும் சீர்திருத்தவும் ஒரு தலைவர் எப்பொழுது உருவாகிறாரோ அந்த நாள் மலேசியத் தமிழ் சமூகத்திற்கு குறிப்பாக தைப்பூச திருவிழாவிற்கு ஒரு நன்னாளாக அமையும்.

இதற்கு திருமுருக திருக்கடவுள்தான் துணை நல்க வேண்டும்!

தனக்குரிய வேண்டுதலையும் வழிபாட்டு முறையையும் சிதைக்கின்றவர்களின் உள்ளத்தில் நல்ல சிந்தனையை ஏற்படுத்த திருமுருகன் அருள் புரிய வேண்டும்.

மற்ற சமயங்களில் இதைப் போன்ற அலங்கோலங்களும் கலப்படமும் இல்லை.

தமிழர்களின் சமய வழிபாட்டு முறை மிகவும் பணக்காரத்தனமாக அமைந்து விட்டது. முழு வர்த்தக நோக்கில் பயணிக்கும் தமிழர்களின் வழிபாட்டு முறை சீர்திருத்தம் பெறுவது எந்நாளோ தெரியவில்லை.

எல்லாவற்றுக்கும் தமிழ்க் கடவுளான திருமுருகன் நீயே சாட்சி!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை