
மலேசிய இந்தியர் காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவராக தற்பொழுது திகழ வேண்டியவர் டத்தோஸ்ரீ டாக்டர் மு.சரவணன். அதற்கான மொத்த ஆளுமையும் இவருக்கு இருந்தாலும் 2015 அக்டோபர் கட்சித் தேர்தலின்போது, உடனிருந்தே இழைக்கப்பட்ட துரோகத்தாலும் முகலாய சாம்ராஜிய வரலாற்றில் 13-ஆம் நூற்றாண்டின் பின்பகுதியில் அலாவுதீன் கில்ஜி, அப்போதைய டில்லி பாதுஷா ஜலாலுதீன் கில்ஜிக்கு இழைத்த கொடும் வஞ்சகத்தைப் போல இவரும் பச்சை வஞ்சகத்தை எதிர்கொண்டதாலும் தற்பொழுது கட்சியின் துணைத் தலைவராகத் தொடர்கிறார்.
இருந்தாலும், தமிழர்கள், ஈழ தேசத்தை அடுத்து, அதிக அளவில் புலம்பெயர்ந்து வாழும் இம்மலையக தமிழ்க் குலத்தின் பன்னாட்டு அடையாளமாக தற்பொழுது திகழ்பவர் டத்தோஸ்ரீ மு.சரவணனார் மட்டுமே.
அமைச்சர் பதவி இல்லாவிட்டாலும் மலேசியாவின் பாரம்பரிய தலைநகரமான கோலாலம்பூர் ‘லிட்டல் இந்தியா’ வர்த்தக மண்டலத்தில் இவரின் கொடிதான் படபடக்கிறது.

12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் திருக்குறளாகட்டும், வேறு எதற்காகட்டும் இவரின் குரல்தான் ஓங்கி ஒலிக்கிறது.
இந்தியாவின் பொருளாதார சிற்பியும் அந்த நாட்டின் தேசிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் ஆளுநராக நீண்ட காலம் செயல்பட்டதுடன் அல்லாமல், அந்த நாட்டையே 2004 முதல் 2014 வரை பத்தாண்டுகள் வழிநடத்திய பிரதமருமான டாக்டர் மன் மோகன் சிங்குடன் அணுக்கமான தொடர்பைக் கொண்டிருந்ததுடன் அல்லாமல் அவருக்கும் அப்போதைய மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பிற்கும் இடையே தொடர்பாளராகவும் விளங்கியவர் டத்தோஸ்ரீ டாக்டர் மு.சரவணன்.
அந்தக் காலக்கட்டத்தில், கூட்டரசுப் பிரதேச அமைச்சிலும் இளைஞர்-விளையாட்டு மேம்பாட்டுத் துறையிலும் துணை அமைச்சராக செயல்பட்டவர் இவர்;
கால் நூற்றாண்டிற்கும் மேலாக நாடாளுமன்றங்களில் தொடர் உறுப்பியம் பெற்றுள்ள ஒரேத் தலைவர் இவர், ஒருவர்தான்.

தேர்தல் வரலாற்றில், ஒரேத் தொகுதியில் 4 தவணைகளாக தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டிவருபவரும் இதுவரை தோல்வியே காணாத மஇகா தலைவரும் இவர் ஒருவர்தான்.
அரசியல் தலைவர், மலேசியத் தமிழிலக்கிய வட்டத்தின் சொல்வேந்தர், இலக்கிய அமைப்புகளின் தலைவர், வர்த்தக நாயகர் என்பதை யெல்லாம் கடந்து, விழா நாயகரும் இவர்தான்.
பல ஆயிர ஆண்டுகளாக நீடிக்கும்.. , இன்றளவும் தொடரும்.. , மண்ணின் மைந்தர்களான திராவிடர்களுக்கும் வந்தேறிக் கூட்டத்தினரான ஆரியருக்கும் இடையே தொடரும் ஆன்மிக-அரசியல்-பண்பாட்டுப் போரின் ஒரு கூறாக எண்ணற்ற பக்தி இலக்கியங்கள், வைணவ நெறி சார்ந்து புனையப்பட்டுள்ளன.

அவற்றுள் ஒன்றான இராம காதையை, தமிழிய எல்லையில் இருந்து வழுவிய குலோத்துங்க சோழனின் வேண்டுகோளை ஏற்று, பெரும்புலவரான கம்பர், தமிழிய மணம் கமழ கமழ பல்லாயிர பாக்கள் மூலம் புனைந்தார்.
இலட்சுமியை இலக்குமி என்றும் இலெட்சுமணனை இலக்குவன் என்றும்தான் எழுதியிருக்கிறார் அசல் தமிழச்சி மடியில் பால்குடித்து, தமிழ்ப் பால் வடித்த கம்பன்.
அதனால்தான், தமிழ்க் குலத்தோருக்கு கம்ப இராமாயணம் ஏற்புடையதா அல்லதா என்னும் சொற்போரில், தமிழறிஞர் இரா.பி. சேது பிள்ளையை தோற்கடித்த அறிஞர் அண்ணாவே, தமிழ்ச் சுவை பறுக விரும்புவோர் கம்ப இராமாயணத்தைப் படிக்கலாம் என்றார்.
அத்தகைய கம்ப இராமாயாணத்தைப் பற்றி 21-ஆம் நூற்றாண்டு தலைமுறையினருக்கு அறிமுகம் செய்யும் விதமாக, இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் முதல் முறையும் ‘பாஙுனான் மாரியம்மன்’ கட்டடத்தில் மறுமுறையும் என மும்மூன்று நாட்களுக்கு, நாலுவேளை உணவுடன் இலக்கிய நிகழ்ச்சி படைத்த சாதனையாளர் சொல்வேந்தர் சரவணனார்.

விடலைப் பருவத்தில் தந்தையை இழந்தாலும், கல்வி ஒன்றே வருங்காலத் திற்கான உய்யும்வழி என்பதை உணர்ந்து, தாழாமல் முயன்று, வெளிநாட்டு கல்விக் கலாசாலையில் உயர்க்கல்வி பட்டம் பெற்றவர் இவர்.
இவரைப்பற்றி சொல்வதற்கு இன்னும் இருக்கின்றன ஏராளமாக;
இருந்தபோதும், இந்தமட்டில் வரையறுத்துக் கொண்டு, இந்த ஆண்டுத் தொடக்கத்தில் ஜனவரித் திங்கள் முதல் வாரத்தில் தமிழ் நாட்டில் இவருக்கு ஒரு பாராட்டுப் பத்திரம் அளிக்கும் முன்னம், வாசிக்கப்பட்ட காணொளிக் காட்சியின் வாசகத் தொகுப்பை இங்கே இணைக்க விழைகின்றேன்.
முதுமொழியாம் கன்னித்தமிழ் முழங்காத நாடு உலகில் ஏதேனும் உண்டோ?

முதல் சங்கம் முகிழ்ந்த கபாடபுரமும் இடைச்சங்கம் தமிழ் வளர்த்த தென்மதுரை-யும் கடல் தாயின் இலக்கிய தாகம் தணித்தன.
கடல்கோலால் புலம்பெயர்ந்த தமிழினத்திற்கு மரபு வழிவந்த வாழ்வியல் ஆனது புலம்பெயர்வு.
தமிழதன் தொன்மங்களின் வேர், எல்லைகள் இன்றி எங்கெங்கும் வியாபித்திருக்கிறது; அதேத் தொலைவுக்கு, நீண்டு தழைத்திருக்கும் கிளைகள்தானே நம் அயலக தமிழ்ச் சொந்தங்கள்!
தமிழின் பெருமையை பறைசாற்றும் அந்த தொப்புள்கொடி உறவுகளின் ஆகச்சிறந்த ஆளுமைதான் டத்தோஸ்ரீ டாக்டர் மு. சரவணன் அவர்கள்!
கோலாலம்பூரில் ஓர் எளிய குடும்பத்தில் முருகன்-பூபதி நாச்சியார் தம்பதியின் ஒற்றை மகனாகப் பிறந்தவர், சரவணன். வறுமையின் கோரப்பற்களை கல்வியின் துணைகொண்டு அறிவாயுதத்தால் சுக்கு நூறாக்கிகியவர்.

கோலாலம்பூர் ‘பிளட்சர் சாலை’தமிழ்ப் பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பெற்ற இவர், தித்தி வங்சா இடைநிலைப் பள்ளியில் அடுத்தக்கட்ட கல்வியைத் தொடர்ந்தார்.
1989-1993 காலக்கட்டத்தில், இவர் இங்கிலாந்தில் உள்ள எமர்ஸ்மித் & மேற்கு இலண்டன் கல்லூரியில் (Hammersmith & West London College) வணிக நிர்வாகத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின் தாயகத்திற்கு திரும்பி ஈசி கால் பேஜர்ஸ் (Easy Call Pagers) எனும் நிறுவனத்தில் வணிகத் துறை அதிகாரியாக பணியாற்றி இருக்கிறார். முழுநேர அரசியலுக்குமுன், காவல் துறையிலும் இவர் பணியாற்றி இருக்கிறார்.
பின்னர் 2018-ஆம் ஆண்டில், ஸ்காட்லாந்து மேற்கு பல்கலைக்கழகத்தில் (University of the West Scotland) இணைந்து, வணிக நிர்வாகத் துறையில் முதுகலை பட்டத்தைப் பெற்றார்.
தளராத இதயம் இருந்தால் முடியாதது என்பது எதுவுமே இல்லை என நிரூபித்துக் காட்டியவர்;

தமிழக அரசின் ‘கணியன் பூங்குன்றனார்’ விருது; மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பைந்தமிழ் பெருவிழாவில் ”அயலக தமிழ்க் காவலர் விருது’; மல்லை தமிழ்ச் சங்கத்தின் பெருந்தமிழன் ராஜராஜன் விருது; லண்டன் கம்பன் கழகத்தின் ‘செந்தமிழ்ச் செல்வர் விருது உள்ளிட்ட பல விருதுகளுக்கு சொந்தக்காரர் சொல்வேந்தர்-செந்தமிழ்ச் சுடர்-மாண்புமிகு டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் அவர்கள்.
இவரின் அரசியல் மற்றும் சமுதாய சேவையை கௌரவிக்கும் வகையில் மலேசியாவில் புகழ்பெற்ற மாஹ்சா மருத்துவ பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ முனைவர் பட்டம்; இவரின் நெடிய ஓட்டத்திற்கு நடுவே கிடைத்த நெல்லிச் சாறு!
1986 ஆம் ஆண்டு தனது மாணவ பருவத்தில் 18 வயதில் மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் வாயிலாக பொதுச் சேவைக்கு வந்தவர்;
23ஆம் வயதில் மலேசிய இந்தியர் காங்கிரஸ்-மஇகா கட்சியின் கிளைத் தலைவராகி, வரலாற்றின் புருவத்தை உயரச் செய்தவர்;

தொடர்ந்து, கடின உழைப்பால் மஇகா தொகுதி மற்றும் மாநிலத் தலைவர், அடுத்து நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் என சிகர நிலை அடைந்தார்;
சவாலான சூழ்நிலைகளை தன் ஆளுமைத் திறனால் சமாளித்து, தொடர்ந்து ஆறு ஆண்டுகள் மேலவை உறுப்பினராக-செனட்டராக கடமை ஆற்றியவர்.
2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றார்;
கூட்டரசுப் பிரதேசம் மற்றும் நகர்ப்புற நல்வாழ்வுத் துறை துணை அமைச்சராக இருந்த காலத்தில் கோலாலம்பூர்- சென்னை இரட்டை நகர் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதுடன் கோலாலம்பூர் மையப்பகுதியில் ‘லிட்டில் இந்தியா’-பிரிக் பீல்ட்ஸ் பாரம்பரிய வர்த்தக மையத்தை உருவாக்கி வரலாற்றுப் பூர்வமான நிகழ்ச்சியை நடத்தினார்.
அங்கு நிறுவப்பட்டுள்ள தோரண வாயிலின் தொடக்கம் இவர்;

2013 முதல் 2018 ஆம் ஆண்டு வரை மத்திய இளைஞர் விளையாட்டுத் துறை துணை அமைச்சராகவும் 2020 முதல் 2022 வரை மத்திய மனிதவள அமைச்சராகவும் சேவையாற்றி நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கும் ஒரே இந்தியப் பிரதிநிதி இவர்.
இந்தியாவே பெருமை கொள்ளும் தமிழ் மகன், டத்தோஸ்ரீ எம். சரவணன் அவர்கள்.
எதுவுமே நிரந்தரமல்ல என்பதை தினமும் மறந்து போகும் மனிதர்களுக்கு அந்த உண்மையை நினைவூட்ட வந்தது கொரோனா பெருந்தொற்று!
உலக நாடுகளை வீட்டுக்குள் பூட்டி வைத்து முடக்கி போட்டது பெருந்தொற்று
அந்த காலக்கட்டத்தில் விமான நிலையங்கள் மூடப்படும் சூழ்நிலை ஏற்பட்டது; அந்த நெருக்கடியான நேரத்தில் இந்தியா இந்தோனேசியா தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் சிக்கித் தவித்த மலேசியத் தமிழர்களை தன் சொந்த செலவில் 15 தனியார் விமானங்களை ஏற்பாடு செய்து பத்திரமாக மீட்டு மலேசிய மண்ணில் இறங்கச் செய்தவர்.

அதே காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோருக்கு ‘சொக்சோ'(பணியிட பாதுகாப்பு சமூக அமைப்பு) மூலமாக ஊதிய மானியத் திட்டத்தை இவர் நடைமுறைப் படுத்தியதால் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தொழில் முனைவோர், வணிகத்தை மூடுவதிலிருந்து காப்பாற்றப் பட்டனர்.
கொரோனாவால் வேலை இழந்து சுய தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு ஊழியர் சமூக பாதுகாப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டதன் காரணகர்த்தாவும் இவர்தான்;
இவரின் சேவை முகத்தின் ஒரு பக்கம் அரசியல் பணி என்றால் மறுபக்கம் தாய்த் தமிழ்த் தொண்டு!
மலேசிய கண்ணதாசன் அறவாரியம், மலேசிய கம்பன் கழகம் போன்ற அமைப்புகளின் வாயிலாக மொழி மற்றும் சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தி மலேசியாவுக்கும் சென்னைக்கும் மிகப்பெரிய இலக்கிய பாலத்தை கட்டமைத்து அந்தப் பணிகளை வெற்றிகரமாக செய்து வருகின்ற தமிழ் வம்சாவளியின் வெளிச்ச தீபமும் இவரே!
அரை நூற்றாண்டு காலமாக மலேசிய இந்தியர்களின் அரசியல் மற்றும் சமூக மேம்பாட்டின் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்கிறார் இவர்; அரசியல், சமூகம், சமயம், இலக்கியம், என்று எங்கே சென்றாலும் அங்கே இவரின் ஆதரவும் ஆளுமையும் நிலைத்து நிற்கும்.

ஆற்றின் நடையும் அருவியின் ஓசையும் இடியின் கும்மாளமும் புல்லாங்குழலின் மெல்லிசையும் டத்தோ அவர்களின் பேச்சில் இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இவர் கம்பனைப் பேசினால் காவிரி மடை திறக்கும்; தன்முனைப்பு பேசினால் தன்னம்பிக்கை மீசை முறுக்கும்; வள்ளுவம் பேசினால் திருவள்ளுவரின் சிலை சிலிர்க்கும்; எந்தப் பூவை நினைத்து நுகர்ந்தாலும் அந்தப் பூவின் வாசம் தருமாம் மனோரஞ்சிதம்;
ஆம்! இவரும் ஒரு மனோரஞ்சிதம்தான்!
அரசியல்வாதியாய், தன்னெழுச்சிப் பேச்சாளராய், இலக்கியவாதியாய், சமூக அக்கறையாளராய், ஆன்மீக சிந்தனையாளராய், குறிப்பாக நல்ல மனிதராய் எத்தனை மண(ன)ங்கள் உங்களுக்கு!
சிகரங்கள் இவருக்கு சமவெளிச்சாலை; சாதனைகள் இவருக்கு தினசரி வேலை; கல்லையும் முள்ளையும் மலையையும் நதியையும் தாண்டி நுரை தள்ளத்தள்ள ஓடி வந்த ஒரு போர்க் குதிரை, டத்தோ எம். சரவணன் அவர்கள்.

சிந்தனையில் தெளிவு, செயலில் நேர்மை, கனவில் மக்கள் நலம் என இலட்சியம் கொண்ட இவர், அரசியல் அதிகாரம் மட்டும் அறிந்தவர் அல்லர். திருக்குறள் அதிகாரமும் அறிந்தவர்; கோப்பு மட்டுமே அறிந்தவர் அல்லர். யாப்பும் அறிந்தவர்.
உயர்ந்த உள்ளம், உதவும் எண்ணம், உரத்த சிந்தனை உன்னத செயல்கள் இதன் மொத்த உருவம்தான் டத்தோ என்றால் மிகை இல்லை.
இவ்வண்ணமாக விரிகிறது, தமிழ் நாட்டில் ஒரு மேடையில் ஒலிபரப்பான காணொளிக் காட்சியின் வாசகம்.
இன்று சரவணனார்க்குபிறந்த நாள்; அவர் நீடு வாழ்ந்து நெடியது நாட்டிட வாழ்த்துகிறாள் குமரி.

மலேசியத் தமிழர்களின் தானைத் தலைவர் பொறுப்பும் சிவப்புக் கம்பள விரிப்பும் தெரிகிறது முன்னால்; வேகமாக-விவேகமாக நடைபயில சரவணனாரின் உள்ளம் வீறு கொள்ளட்டும்.
இனிய பிறந்த நாள் வாழ்த்து!!!



