
அம்னோ சிலாங்கூர் மாநில ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளராகவும் தேசிய முன்னணியின் சிலாங்கூர் மாநிலத் தலைவராகவும் ஒரு காலத்தில் இருந்த நோ ஓமாருக்கு இணையாக இப்பொழுது அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஃபுவாட் சர்க்காசி, சண்டைச் சேவலைப் போல எதற்கெடுத்தாலும் கொக்கரிக்கிறார்.
சீன, இந்திய சமூகத்தினரை பார்த்து அடிக்கடி வந்தேறிகள் என்று மனம் கூசாமல் பேசிவ்வந்த நோ ஓமார், பெர்சத்து கட்சியில் இணைந்து, தற்பொழுது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்; ஏறக்குறைய நோ ஓமாரின் பாத்திரத்தை இப்பொழுது ஃபுவாட் சர்க்காசி, வகிக்கிறார்.
நாட்டின் பாரம்பரிய தலைநகரமான கோலாலம்பூர் மாநகர் மன்றம், நாட்டின் முதல் மாநகர் மன்றம் என்பதுடன் தற்பொழுது முதல் நிலை மாநகர மன்றமாகவும் திகழ்கிறது.
இதை நிர்வகிக்க மேயர் என்பவர் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவிப்பது ஏதோ ‘பஞ்சமா பாதகத்தை’ போலவும் அதை ஜனநாயக செயல் கட்சி-ஜசெக முன்னெடுப் பதைப் போலவும் குறிப்பாக கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ இதில் முனைந்து செயல்படுவதாகவும் கருத்து தெரிவித்துள்ள ஃபுவாட் சர்க்காசி, இதன் தொடர்பில் கடுமையான எதிர்ப்பையும் மறுப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இது அப்பட்டமான ஜனநாயக விரோதப் போக்காகும்.
மாநகராட்சிக்கு மேயர் தேர்தல் நடந்தால் போக்கிரிகளும் அடியாட்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அல்லது அவர்களின் ஆதரவு பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அதனால் நிர்வாகம் சீராக இருக்காது எனவும் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் ஃபுவாட் சர்க்காசி;
மேயர் தேர்தல் நடந்தால் மக்கள்தான் வாக்களித்து யாரை விரும்புகின்றனரோ அவர்களைத் தேர்ந்தெடுப்பர்; தேர்ந்தெடுக்-கப்படும் மாநகர் மன்ற உறுப்பினர்கள்-கௌன்சிலர்கள் எவரை ஆதரிக்கின்றனரோ அவர்தான் மேயராக மறைமுகத் தேர்தல் முலம் தெரிவு செய்யப்படுவார்; அல்லது, கோலாலம்பூர் மேயர் நேரடியாகவும் வாக்களித்து தேர்வு செய்யப்படலாம்.
இன்னும் எதுவும் முடிவாகவில்லை; அறிவிக்கப்படவும் இல்லை.
இந்த சூழலில், ஃபுவாட் சர்க்காசி, யாரை ‘ரவுடி’ என்கிறார்? எந்தத் தரப்பினரை அடியாட்கள் என்கிறார் என்பதை பொது மக்கள், குறிப்பாக கோலாலம்பூர் மாநகர எல்லைக்குட்பட்ட பொதுமக்கள் அவதானிக்க வேண்டும். மொத்தத்தில் ஜனநாயக முறைப்படி வாக்களிக்கும் பொது மக்களை இவர் மிகவும் அலட்சியமாகவும் இழிவாகவும் கருத்து தெரிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

உண்மையில் அம்னோவிற்கு மேயர் தேர்தலில் விருப்பம் இல்லாவிட்டாலோ அல்லது சீன வாக்காளர்கள் மிகுதியாக உள்ள கூட்டரசுப் பிரதேச மண்டலத்தில் தங்களுக்கான ஆதரவு அந்த அளவிற்கு இல்லை என்ற எண்ணம் ஏற்பட்டாலோ மேயர் தேர்தல் குறித்து நல்ல விதமாக மறுப்பு தெரிவித்து இருக்கலாம்; அதை விடுத்து போக்கிரிகள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள், போக்கிரிக்கு வேண்டியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றெல்லாம் கருத்து தெரிவிப்பது ஜனநாயக வெளிப் பாடல்ல; பச்சையான வம்படித்தனம்.
அரசியலில் நீண்ட காலமாக செயலாற்றி வரும் ஒரு தலைவருக்கு இது அழகல்ல;
சுடுகாடு சென்ற பிணம் மீண்டும் உயிர் பெற்று ஊர் திரும்பாது; கறந்த பால் மடி புகாது; கருவாடு மீனாகாது என்றெல்லாம் சண்டித்தனமாக பேசிய முனைவர் காளி முத்துவை எம்ஜிஆர் ஆதரித்ததைப்போல
ஃபுவாட் சர்க்காசியை அம்னோத் தலைவரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ முனைவர் அகமட் ஜாங்கிட் அமிடி அரவணைக்கக் கூடாது.
குறைந்தபட்சம், ஃபுவாட் சர்க்காசிக்கு கடிவாளமாவது இடப்பட வேண்டும்.
தேசிய முன்னணியின் உறுப்பு கட்சிகளான மசீச, மஇகா போன்றவற்றின் தலைவர்கள் ஏதேனும் ஆதங்கத்தை, வருத்தத்தை வெளிப்படுத்தினால், அந்த வேளையில் ஃபுவாட் சர்க்காசி திடீரெனக் குதிப்பார்; கடுமையான கருத்துடன் ஊடக வெளியில் களமாடுவார்.
ஆதங்கத்தை வெளிப்படுத்தியவர்களுக்கு பொருத்தமான, அணுசரனையான பதிலை அல்லது கருத்தை வெளிப்படுத்துவதை விடுத்து, வெட்டு ஒன்று துண்டு மூன்றாக எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எரிகிற நெருப்பில் மேலும் நெய்யை ஊற்றி, தீயை மேலும் வளர்ப்பதைப் போல எப்போதும் பேசி வருபவர் ஃபுவாட் சர்க்காசி.
அப்படித்தான் இந்த முறையும் பேசி இருக்கிறார்.
உண்மையில் கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு மேயர் தேர்தல் நடத்த வேண்டும் என்று யாரும் எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை; அதேவேளை இதற்கான தேவை, சூழல், அவசியம் குறித்து, மலேசிய பன்னாட்டு இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் ஆய்வுதான் நடைபெற்று வருகிறது.

இந்த ஆய்வு கூட பிரதமர் துறையின்கீழ் இயங்கும் கூட்டுரசு மேம்பாட்டுத் துறைக்கு ஹன்னா இயோவிற்கு முன்னர் டாக்டர் சலேகா முஸ்தஃபா பொறுப்பு வகித்த பொழுது, குறிப்பாக 2025 டிசம்பர் மாதத்தில் இதற்கான ஆய்வுப் பணிகள் தொடங்கின.
அத்தகைய ஆய்வுப்பணிகள் இன்னும் தொடர்கின்ற நிலையில், இதுகுறித்த முடிவு எந்த தரப்பினராலும் இதூவரை தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், ஃபுவாட் சர்க்காசி தேவை-யின்றி வானுக்கும் பூமிக்குமாக துள்ளிக் குதிப்பது, ஒருவேளை தோல்வி பயமாக இருக்குமோ என்றும் நாம் அவதானிக்க வேண்டியுள்ளது.

ஒருவேளை, கோலாலம்பூர் மேயர் தேர்தல் நடந்து, மேயர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்ந்தெடுக்கப்பட்டால், அம்னோ வெற்றிபெற வாய்ப்பில்லை என்று ஃபுவாட் சர்க்காசி முன்கூட்டியே முடிவு செய்து விட்டாரோ?
மேடையில் வாளை உயர்த்திப் பிடித்தவர்களெல்லாம் இப்பொழுது கையைக் கட்டிக்கொண்டிருப்பதை ஃபுவாட் கருதவில்லை போலும்; காலம் என்னும் நல்லாசிரியர், ஃபுவாட் சர்க்காசி பக்கம் தன் கவனத்தைத் திருப்பினால் நல்லது!


