Tuesday, February 17, 2026

ஸம்ரி வினோத் எழுப்பும் ‘கோயில் ஹராம்’ பிரச்சினை: பிரதமரின் தொடர் மௌனம் களைய வேண்டும்!!

சமய வெறுப்புப் பேச்சாளர் ஸம்ரி வினோத், இந்து வழிபாட்டுத் தலங்கள் சிலவற்றைக் குறிவைத்து அவற்றை ‘கோயில் ஹராம்’ என்று முத்திரை குத்தி, இதன் தொடர்பில் இவ்வாரக் கடைசியில் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது மலேசிய இந்து சமுதாயத்தில் கொந்தளிப்பான நிலையை ஏற்படுத்தி இருக்கிறது என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தலைவர் பொன். வேதமுர்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் அமைதியாக வாழும் கூட்டு சமுதாயத்தில் இதைப்போன்ற தேவையில்லாத பிரச்சினைகளை எழுப்புவது, மக்களிடையே நிலவும் சமய-சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதால், ஸம்ரி தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தோட்டப் பாட்டாளிகளால் உருவாக்கப்பட்ட அதிகமான வழிபாட்டுத் தலங்கள் இடப் பிரச்சினையை எதிர்நோக்கி இருப்பது உண்மைதான். அப்போதைய ஆங்கில நிருவாகம் சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு நிலவுரிமையை அல்லது நிலப்பட்டாவை வழங்கி இருக்க வேண்டும்.

நாடு விடுதலை அடைந்தபின் அமைந்த மலேசிய அரசுகளும் இதற்கு இத்துணைக் காலமாக தீர்வு காண தவறிவிட்டன. இப்பொழுதாவது மத்தியக் கூட்டரசாங்கம் தானாக முன்வந்து சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு நிலப்பட்டா வழங்கியோ, மாற்று இடம் வழங்கியோ அல்லது பேச்சு நடத்தியோ நல்ல முறையில் தீர்வு கண்டு சமூகத்தில் அமைதி தழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மடாணி அரசும் பிரதமர் அன்வாரும் இதில் உடனே தலையிட வேண்டும்.

இடப் பிரச்சினையை எதிர்நோக்கி இருக்கும் ஆலயங்களை அப்படித்தான் சொல்ல வேண்டுமே அல்லாமல், அவற்றின்மீது ‘ஹராம்’ முத்திரை குத்துவதை நாட்டு நலனிலும் சமுதாய அக்கறையிலும் ஈடுபாடு கொண்டவர்கள் மேற்கொள்ள மாட்டார்கள்.

எது எவ்வாறாயினும், இந்த விவகாரத்தில் மலேசிய இந்து சமுதாயம் அமைதி காக்கவேண்டும் என்றும் பிரதமர் இனியும் மௌனம் காக்காமல், இதில் உடனே தலையிட வேண்டும் என்றும் ஹிண்ட்ராஃப் தலைவரும் சட்ட வல்லுநருமான பொன்.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை