
மக்கள் முற்போக்கு கட்சி (பிபிபி) தலைவர் டத்தோ டாக்டர் லோகபால மோகன், ஜம்ரி வினோத்மீது உடனே கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையை வலியுறுத்தினார்.
அவர், ஸம்ரி வினோத்தின் நடவடிக்கைகள் நாட்டின் பாதுகாப்புக்கும் இன ஒற்றுமைக்கும் சமூக அமைதிக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.
இதன் தொடர்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையில், இன, மத உணர்வுகளைத் தூண்டக்கூடிய பேரணியை ஏற்பாடு செய்வதில் ஸம்ரி வினோத்தின் பங்கு மிக ஆபத்தானது என்றும் இதனை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் டத்தோ டாக்டர் லோக பாலா மோகன் தெரிவித்தார்.
“இன்று சனிக்கிழமை நடைபெறவிருந்த பேரணியைத் தடுக்க உள்துறை அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கையை பிபிபி வரவேற்கிறது. ஆனால், எதிர்காலத்தில் ஸம்ரி வினோத்தால் இனவெறி தூண்டல்கள் மீண்டும் உருவாகாமல் இருக்க, அவர்மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார் னார்.
3R (இனம், மதம், அரசாட்சி) தொடர்பான உணர்வுப்பூர்வமான விஷயங்களில் ஸம்ரி வினோத் தொடர்ந்து தலையிட்டு வருவதால், அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய காலம் கனிந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
“ஆயிரக்கணக்கன காவல் புகார்கள் அவர்மீது பதிவாகியுள்ள போதும், இதுவரை எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. சட்டம் தெளிவாக இருக்க, ஏன் நடவடிக்கை இல்லை? அவர் எட்ட முடியாதவர் போலவும் பாதுகாக்கப்படுபவர் போலவும் தெரிகிறார்,” என்று அவர் கூறினார்.
பாரபட்சம், பயம், தயக்கமின்றி நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சகத்தையும் காவல்துறையையும் அவர் வலியுறுத்தினார்.
சட்டத்தின்மீதான மக்களின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் எவரும் செயல்படக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலேசியாவிற்கு வருகைதரும் நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பேரணி தடுக்கப்பட்டதற்கு உள்துறை அமைச்சகத்தை அவர் பாராட்டினார். அந்த முடிவு மலேசியாவின் சர்வதேச புகழை காக்கும் நடவடிக்கை எனவும் அவர் கூறினார்.
ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களுக்கு எதிராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


