Thursday, April 30, 2026

அதிகாரத்தில் நீடிக்க அன்வார் இழைக்கும் தீமை-சூழ்ச்சி! -மலேசியர்கள் உணர வேண்டும்!!

அன்வார் இப்ராகிமின் பம்மாத்துப் பேச்சுகள் மத உணர்வுகளைத் தூண்டி, மலேசிய கூட்டு சமூகத்தில் ஒரு பிரிவினரிடையே கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தி, ஒற்றுமையை சிதைத்துள்ளது என்பதை மலேசியர்கள் உணர வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தலைவர் பொன்.வேதமூர்த்தி எச்சரித்துத்துள்ளார்.

மலேசியாவில் பன்றி வளர்ப்புத் தொழில் மெர்டேக்கா-விற்கு முன்பிருந்தே தொடர்கிறது. தேசிய முன்னணியின் அறுபது ஆண்டு ஆட்சிக் காலத்திலும் இது தேசிய பிரச்சினையாக மாறவில்லை. ஆனால் இன்று, அன்வாரின் பிரதமர் பதவியே சவாலுக்கு உள்ளாகியுள்ள நேரத்தில், சில மர்மமான சக்திகள் இந்த நீண்டகாலத் தொழிலுக்கு எதிராக பகை உணர்வைத் தூண்டுகின்றன.
அதேபோல், கோவில்களும் மெர்டேக்கா-விற்கு 150 ஆண்டுகளுக்கு முன்பே, காலனித்துவ காலத்திலேயே இருந்தன என்பதை வரலாற்றுப் பதிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன: இந்திய தொழிலாளர்கள் மலாயாவின் பல மாநிலங்களில் குடியேறி, அடர்ந்த காடுகளை சுத்தம் செய்ய, ரப்பர் தோட்டங்களை பராமரிக்க, சாலைகள், ரயில்கள், அரசு கட்டடங்கள் அமைக்கவெல்லாம் அழைக்கப்பட்டனர்.

அவர்கள் மலாயாவில் நிலைத்திருக்க, தென் இந்திய கிராமங்களைப் போன்ற சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் கோவில்கள் அமைக்கப்பட்டன.
மெர்டேகாவுக்குப் பிறகு, அந்த நிலப்பகுதிகள் தனியார் மேம்பாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டதால், ஆயிரக்கணக்கான கோவில்கள் தனியார் நிலங்களில் சிக்கிக் கொண்டன.
மாநில அரசுகள் இந்த பிரச்சினைகளைத் தீர்க்காமல், நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதால் நிலைமை மேலும் மோசமடைந்தது.

சில நிலங்கள் சூராவ்-க்கள் மற்றும் பள்ளிவாசல்கள் கட்டுவதற்காக வழங்கப்பட்டதால், இந்த இரண்டு மதங்களுக்கு இடையே பதற்றமும் இன ஒற்றுமைச் சிதைவும் ஏற்பட்டன.

மாநில மந்திரி பெசார்களும் முதல்வர்களும் கவனமாக கையாள வேண்டிய பிரச்சினை இவை.
அன்வார் இப்ராகிம் இந்த நீண்டகால உண்மையை அறியாமல் இருப்பதாகக் கூற முடியாது.

அவர் சட்டத்தின் ஆட்சி பற்றிப் பேசுகிறார், ஆனால் 1965 இல் டோரன்ஸ் அமைப்பு மற்றும் தேசிய நிலச் சட்டம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பிருந்த நிலப் பிரச்சினைகளைத் தீர்க்க சட்டம் தேவை என்று நீதி கோருகிறது. ஆனால், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, பிரச்சினையைப் பெரிதாக்கி மலேசியர்களை எதிரும் புதிருமாக நிற்க வைத்து கபட நாடகம் ஆடுகிறார் என்று ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சில இந்துக்கள் கோவில்களை தவறாகக் கட்டியுள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை. அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு இந்துக் கோவிலும் சட்டவிரோதம் என்று கூறுவது, பொறுப்பற்ற பேச்சாகும்.

இதனால், மலேசியர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது. சில மலாய் சகோதரர்கள் அவரின் தவறான பேச்சைக் கேட்டு, சட்டத்தை தாங்களே கையில் எடுக்க துணிந்துள்ளனர். அப்படிப்பட்டவர்களை அன்வார் “நண்பர்கள்” என்றழைத்து சட்டத்தை மதிக்குமாறும் கேட்கிறார்.

மலேசியர்கள் அன்வாரின் ஆபத்தான அரசியல் விளையாட்டால் தவறாக வழிநடத்தப்படக்கூடாது. அன்வார், பிரதமராக நீடிப்பதற்கான சட்டப்பூர்வ நிலைமை நீதிமன்றத்தில் சவாலுக்கு உள்ளாகியுள்ளது. மாமன்னர், மலாய் ஆட்சியாளர் மன்றம் மற்றும் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்து டிரம்புடன் தன்னிச்சையாக வர்த்தக ஒப்பந்தம் செய்தது, இந்தோனேசியாவுடனான AMBALAT பிரச்சினையில் இரகசியமாக நடந்துகொண்டது, 5,207 ஹெக்டேர் நிலத்தை ஒப்படைத்தது, ஊழல் தடுப்பாணையத் தலைவர் அசாம் பாக்கி பிரச்சினையை தவறாக கையாண்டது இவை யாவும் அன்வாரின் தலைமையை சவாலுக்கு உள்ளாக்குகின்றன.

அதனால், அவர் பழைய யுக்தியைப் பயன்படுத்துகிறார்; இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையே பிளவை விதைத்து, தீர்க்கப்படாத சர்ச்சைகளில் மக்களின் கவனத்தைத் திருப்பி, அதிகாரத்தில் தொடர முயல்கிறார் என்று சட்ட வல்லுநருமான பொன்.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை