Monday, March 9, 2026

ரமலானை முன்னிட்டு அல்-அக்ஸா வளாகத்தில் இஸ்ரேல் காவல்துறை நடவடிக்கை! -பாலஸ்தீனர்கள் மனக்கசப்பு!!

முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் தொடங்க இருக்கும் இந்த வாரத்தில், கிழக்கு ஜெருசலேமில் அமைந்துள்ள அல்-அக்ஸா பள்ளிவாசல் வளாகம் மீண்டும் உலக கவனத்தை ஈர்த்துள்ளது.

இஸ்ரேல், பாலத்தீனம், ஹமாஸ், காஸா போன்ற வார்த்தைகள், அண்மைக் காலத்தில் அடிக்கடி கேட்கும் சொற்களாகும். இப்பொழுது அங்கே என்ன நடக்கிறது?

இஸ்ரேலிய காவல்துறை, அந்தப் பகுதியில் பகலிலும் இரவிலும் கண்காணிப்பை மேற்கொள்வதாக நோன்பு மாதம் தொடங்க இருக்கும் இந்த நேரத்தில் அறிவித்துள்ளது.

பாலஸ்தீன மக்களுக்கு ஆன்மீக வாழ்வின் மையமாக நூற்றாண்டுகளாக விளங்கும் இந்த ‘அல்-அக்ஸா’ வளாகம், இஸ்லாமியர்-களின் மூன்றாவது புனிததலம்.

ஒவ்வொரு ரமலான் மாதத்தின்போதும் முஸ்லிம் பெருமக்கள் இங்கு பல்லாயிரக்கணக்கில் ஒன்றுகூடுவர். ஆனால், இந்த ஆண்டு அந்த ஆன்மீகச் சூழலைக் கட்டுப்படுத்தும் வகையில் இஸ்ரேல் அதிகாரிகள் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளனர்.

ஜெருசலேம் காவல்துறையின் மூத்த அதிகாரி அராட் பிராவெர்மென், “இந்த வளாகம் முழுவதிலும், சுற்றுப்புறங்களிலும் பகலும் இரவுமாக காவல்துறை கண்காணிப்பு இருக்கும்” என அறிவித்ததைத் தொடர்ந்து இந்த முறுகல்நிலை புதிதாக எழுந்துள்ளது.

வெள்ளிக்கிழமை தொழுகையின்போது ஆயிரக்கணக்கான காவலர்கள் பணியில் ஈடுபடுவரெனவும் அந்த நாளில் முஸ்லிம் வழிபாட்டாளர்கள் அதிகளவில் கூடுவதால் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு கரை பகுதியில் வசிக்கும் பாலஸ்தீனர்களுக்கு ஜெருசலேமுக்குள் நுழைய சிறப்பு அனுமதி தேவைப்படுகிறது. இதன் தொடர்பில் இஸ்ரேலிய காவல்துறை 10,000 பேருக்கு அனுமதி வழங்க பரிந்துரைத்துள்ளது. ஆனாலும் இறுதி எண்ணிக்கையை இஸ்ரேலிய அரசு இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் தெரிகிறது.

பாலஸ்தீன ஜெருசலேம் ஆளுநர் அலுவலகம், ‘கடந்த ஆண்டைப் போலவே, 55 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளது.

அந்த வளாகத்தை நிர்வகிக்கும் ஜோர்டானிய வக்ஃப் அமைப்பின் வழக்கமான பணிகளை இஸ்ரேல் அதிகாரிகள் தடை செய்துள்ளனர்.

நிழற்குடைகள் அமைத்தல், தற்காலிக மருத்துவ முனையங்களை நிறுவதல் போன்ற முன்னேற்பாட்டு நடவடிக்கை யாவும் தடுக்கப்பட்டுள்ளன. மேலும், வக்ஃப் அமைப்பின் 33 பணியாளர்கள் இந்த வளாகத்துக்குள் நுழைவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதால், வக்ஃப் நிர்வாகம் கவலை அடைந்திருக்கிறது.

இந்த நடவடிக்கை, வழிபாட்டாளர்களின் ஆன்மிகச் சுதந்திரத்தை குறைக்கும் முயற்சியாக பாலஸ்தீனர்கள் கருதுகின்றனர். ரமலான் மாதம், அவர்களின் வாழ்வில் ஆன்மீக ஒற்றுமையையும் சமூக உறவையும் வலுப்படுத்தும் காலமாகும். இந்த நேரத்தில், அனுமதி சீட்டு, வயது வரம்பு, நிர்வாகத் தடை போன்றவை அந்த ஆன்மீகச் சூழலைக் குலைக்கும் வகையில் உள்ளது.

இங்கு நடக்கும் போர்கள், மோதல்களுக்கான பின்னணி என்ன?

1914-க்கு முன்புவரை பாலத்தீன பகுதியை ஓட்டோமான் பேரரசு ஆண்டு வந்தது. பாலத்தீனத்தில் அரேபியர்கள் பெரும்பான்மையாகவும் யூதர்கள் சிறுபான்மையினராவாகவும் இருந்தனர்.

முதலாம் உலகப்போர் காலத்தில் ஒட்டோமான் பேரரசு வீழ்ந்தது. அப்போது, பிரிட்டன் நேரடி ஆளுகையின்கீழ் பாலத்தீனம் வந்தது. அதேவேளை, பன்னாட்டு சமூகம் பிரிட்டனிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தது. பாலத்தீனத்தில் யூதர்களுக்கான ‘தேசியத் தாயகத்தை’ உருவாக்குவதே அப்பொறுப்பு.

யூத, கிறித்துவ, இஸ்லாமிய மதத்தினருக்கு மிகமிக முக்கியமான நகரம் ஜெருசலேம். யூதர்களைப் பொறுத்தவரை இந்தப் பகுதி அவர்களின் பூர்வீக மண்ணாக இருக்கிறது. பாலத்தீன அரேபியருக்கோ இது அவர்களின் நிலம் எனக் கோரி, யூதர்களை குடியேற்றம் செய்வதை எதிர்த்தனர்.

1920 முதல் 1940 வரை பாலத்தீன பகுதியில் யூதர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தது. அதற்கு காரணம். ஐரோப்பாவில் அவர்களுக்கு நடந்த கொடுமைகள். குறிப்பாக ஹிட்லர் காலத்தில் ஜெர்மனியில் பெருந்துயரத்தை யூத மக்கள் எதிர்கொண்டதன் விளைவாகும்.

ஜெர்மானிய சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் யூதர்களை படுகொலை செய்ய சபதமெடுத்தார். இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் படுகொலைப் படைகளிடம் இருந்து தப்பியோடிய யூதர்கள் சிலர் இங்கே தஞ்சமடைந்தனர்.

அதேவேளை, பாலத்தீனத்தில் யூதர்களுக்கும் பாலத்தீன அரபுகளுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை பெரிதாக வெடித்தது. இந்தச் சிக்கலை சரியாகக் கையாளாத பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகவும் கோபம் எழுந்தது.

1947-ம் ஆண்டு பிரிட்டன் பாலத்தீனத்தை விட்டு வெளியேற முடிவு செய்தது. அப்போது பாலத்தீனத்தை இரண்டாக பிரித்து யூதர்களுக்கு ஒரு நாடும், பாலத்தீன அரபிகளுக்கு ஒரு நாடும் தோற்றுவித்து, இரு சமூகத்துக்கும் புனித நகரமாக கருதப்படும் ஜெருசலேமை சர்வதேச நகரமாக உருமாற்றவும் முடிவு செய்ததை ஐநா மன்றம் ஆதரித்தது.

இந்தத் திட்டத்தை யூதத் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் பாலத்தீன அரபு மக்கள் நிராகரித்தனர்.

இந்தப் புள்ளியில் தொடங்கிய சிக்கல்தான் இன்றளவும் நீடிக்கிறது.

இந்த பிரச்னையை தீர்க்க முடியாத பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், 1948-ல் நாட்டை விட்டு வெளியேறினர். அதன்பின்னர் 1948-ம் ஆண்டு மே மாதம் 14-ம் நாள், யூதத் தலைவர்கள் இஸ்ரேல் எனும் தனி நாடு தோற்றுவிக்கப் பட்டதாக அறிவித்தனர்.

அதே தினத்தில் இஸ்ரேலை தனி நாடாக அமெரிக்க அதிபர் ஹெர்ரி ட்ரூமேன் அங்கீகரித்தார். அந்த அறிவிப்புக்கு பாலத்தீனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மறுநாளே போர் மூண்டது. அண்டை அரபு நாடுகளும் இந்தப் போரில் குதித்தன.

இந்த போரில் ஏறக்குறைய 7,50,000 பாலத்தீன அரபியர் தங்களின் வீட்டையும் தாயகத்தையும் விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்; தப்பி ஓடியவர்களும் உண்டு; இதனை பாலத்தீனர்கள் ‘அல் நக்பா’(இனப் பேரழிவு) )என குறிப்பிடுகின்றனர்.

இந்தப் போர் 1949 வரை நீடித்தது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோது இந்த பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதியை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

ஜோர்டான் ஆக்கிரமித்தப் பகுதி ‘மேற்கு கரை’ என அழைக்கப்படுகிறது. பல்லாயிர ஆண்டுகளுக்கு முன் தமிழன் முத்திரைப் பதித்த எகிப்து தேசம் ஆக்கிரமித்த பகுதிதான் இன்றைய காஸா.

புனித நகரான ஜெருசலேமும் இரண்டாக பிரிந்தது. மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலிய படைகளும் கிழக்கு ஜெருசலேமை ஜோர்டானிய படைகளும் தத்தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன.

இருந்தபோதும் அமைதி என்பதை அறியாத மண்டலமாக இந்தப் பகுதி நீடித்தது. அனைத்து தரப்பினரும் ஒருவருக்கொருவர் பழிபோட்டுக் கொண்டதால் போர்களும் சண்டைகளும் நீடித்தன.

இந்த நிலையில், 1967-ஆம் ஆண்டில் ஏற்பட்ட போர் மிகக் கடுமையான சேதத்தை இரு தரப்பிற்கும் ஏற்படுத்தியது. ஆறு நாட்கள் நீடித்த இந்தப் போரில் இஸ்ரேல், ஜோர்டான் வசமிருந்த கிழக்கு ஜெருசலத்தையும் மேற்கு கரையையும் ஆக்கிரமித்தது. மேலும், சிரியன் கோலன் குன்றுகள், காஸா மற்றும் எகிப்தின் சினாய் தீபகற்பத்தின் பெரும் பகுதிகளையும் இஸ்ரேல் ஆக்கிரமித்தது.

பாலத்தீன அகதிகளும் அவர்களின் சந்ததியினரும் காஸா, மேற்கு கரை மற்றும் அண்டை நாடுகளான ஜோர்டான், சிரியா, லெபனான் போன்ற நாடுகளில் பரந்து வாழ்கின்றனர்.

அந்த அகதிகளோ அல்லது அவர்களின் வழித் தோன்றலினரோ தத்தமது வீடுகளுக்குத் திரும்ப இஸ்ரேல் அனுமதி மறுத்தது. அவர்கள், அனுமதிக்கப் பட்டால் காலப் போக்கில் அவர்களைக் கையாள முடியாது என்றும் அது யூத தேசத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் இஸ்ரேல் இன்றளவும் கருதுகிறது.

அத்தகைய இஸ்ரேல் மேற்குக் கரையையும் இன்றுவரை தன் ஆதிக்கத்தில் வைத்துள்ளது. எனினும் 2005-ல் காஸாவில் இருந்து விலகியது. காஸா, சிறிய கடற்கரையோர துண்டுப் பகுதிதான்.

இஸ்ரேல் மொத்த ஜெருசலேமையும் தனது தலைநகர் என கூறுகிறது. அதே சமயம் பாலத்தீனமோ, கிழக்கு ஜெருசலேமை தனது எதிர்கால பாலத்தீன நாட்டின் தலைநகர் என கூறுகிறது.

இந்தச் சூழலில், டிரம்ப், அமெரிக்க அதிபராக இருந்த முதல் தவணைக் காலத்தில், கடந்த 2017-ம் ஆண்டு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தார். இந்த முடிவுக்கு பிரிட்டன், ஜப்பான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஐநா மன்றத்தில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.

கடந்த 50 ஆண்டுகளில் மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் ஏராளமான குடியிருப்புப் பகுதிகளை இஸ்ரேல் மளமளவென உருவாக்கியது.

தற்பொழுது ஏறக்குறைய 6 லட்சத்துக்கும் அதிகமான யூதர்கள் இங்கே வாழ்கிந்றனர். உண்மையில், பன்னாட்டு விதிகளின்படி இந்தக் குடியிருப்புகள் சட்டவிரோதமானவை. இஸ்ரேல், எந்தக் காலத்தில் பான்னாட்டு சமூகத்தை மதித்தது?

ஐநா பாதுகாப்புக் குழுவின் நிலைப்பாடும் இதுதான். ஆனால் இஸ்ரேல் இதனை நிராகரிக்கிறது.

மேற்கு கரையில் வசிக்கும் பாலத்தீனர்கள், இஸ்ரேல் தங்களை கொடுமைப்படுத்துவதாகவும், பணயக் கைதிகளாக வைத்திருப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால், பாலத்தீனர்களின் வன்முறையில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளவே இந்த நடவடிக்கைகள் என்று இஸ்ரேல் பம்மாத்து காட்டுகிறது.

மேற்கு கரையில் குடியேறியுள்ள யூதர்களிடமிருந்து, அன்றாடம் தாக்குதலை எதிர்கொள்வதாக பாலத்தீனர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களில் அதிகமான பாலத்தீன குடும்பங்கள், தம் பூர்வீக நிலத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.

அதே சமயம், யூதர்களும் பாலத்தீனர்களின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். கடும்போக்கு கொண்ட வலச்சாரி இஸ்ரேலிய அரசாங்கத்தின் ஆளுகையின்கீழ் இருக்கும் மேற்கு கரைப் பகுதியில், அண்மையில் 19 வயது இளைஞர், இஸ்ரேலிய நபர்களால் கொல்லப்பட்டது பேரளவில் பேசுபொருளானது.

இதை, ஒரு ‘பயங்கரவாதச் செயல்’ என அமெரிக்காவும் கண்டித்ததுதான் வியப்பாக இருந்தது; பிள்ளையைக் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடும் வஞ்சக அரசியலுக்கு சொந்தமான அமெரிக்கா, அடிக்கடி தன்மீதான ஜனநாயகப் பூச்சை வெளிப்படுத்தும் என்பது, ஊரும் உலகும் அறிந்ததுதானே.


ஹமாஸ் தோற்றம்


(தொடரும்)

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை