
மலேசிய வரலாற்றில் நீங்கா இடம்பெற்றுள்ள ‘அருள்மாமணி’ ஆறுமுகம் பிள்ளை, கடந்த நூற்றாண்டில் தமிழ் நாளிதழ்வழி தமிழ்ப் பணியையும் சமூகத் தொண்டையும் ஒருங்கே ஆற்றிய தகைமையாளர்.
அவருக்கு இன்று, பிப்ரவரி 22 பிறந்த நாள்.
மொழி, கல்வி, சமய தளங்களில் பாரிய அளவில் தொண்டாற்றிய இவர், அரசியல் தலைவரும் ஆவார். டான்ஸ்ரீ வெ.மாணிக்கவாசகம் தலைமைத்துவ காலத்தில், மலேசிய இந்தியர் காங்கிரஸ் அரசியல் பேரியக்கத்தின் பினாங்கு மாநிலக் கிளையை வழிநடத்தினார்.
வணிகக் குடும்பத்தில் பிறந்து, செல்வந்தரான இவர் மலேசியாவிலும் தமிழ் நாட்டிலும் நன்கு அறியப்படும் மனிதராக வாழ்ந்தார்.
தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் 1915-ம் ஆண்டில் நாகப்ப பிள்ளை – தங்கம்மாள் தம்பதியரின் நான்கு புதல்வர்களில் மூன்றாவது மகனாக ஆறுமுகம் பிள்ளை பிறந்தார்.
மலேசியாவில் தாமரை வர்த்தகக் குழுமத்தை வழிநடத்துகின்ற டான்ஸ்ரீ துரைசிங்கம், டத்தோ ரெனா. இராமலிங்கம், டத்தோ நாகராஜன், டத்தோ ரெனா. சுந்தரம் ஆகியோரின் தந்தையான ‘நினைவில் வாழும்’ ரெங்கசாமி பிள்ளை, இவரின் இளவல் எனபது குறிப்பிடத்தக்கது.
தமிழ் நாடு, நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து, 1929-ல் தமது 14-ஆவது வயதில் ரஜூலா கப்பல் மூலம், மலாயாவிற்கு வந்த ஆறுமுகம், தொடக்கத்தில் பினாங்கு சுங்கை ரம்பைத் தோட்டப் பகுதியில்(புக்கிட் மெர்தாஜாம்) மளிகை வியாபாரத்தில் ஈடுபட்டார்.

ஏற்கெனவே, கிட்டங்கி உள்ளிட்ட இடங்களில் பணியாற்றிய அனுபவமும் இருந்ததால் தொழிலில் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்பட்டது. இந்தச் சூழலில், 1938-ல் தமிழகத்தில் சென்று சீதையம்மாள் என்பவரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு நாகராஜன், தங்கவேலு, தங்க நாச்சியார் என மூன்று பிள்ளைகள் பிறந்தனர்.
மலாயா 1957-இல் விடுதலை பெறுமுன் 1950-களில் மலாயாவில் இருந்து ஆங்கிலேயர்கள் தம்தாயகம் திரும்புவதற்கு முன்பு தங்கள் வசமிருந்த ரப்பர் தோட்டங்களை விற்க முற்பட்டனர். என்.டி.எஸ் ஆறுமுகம் பிள்ளை இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு நில தரகு தொழிலில் ஈடுபட்டு பெரும் செல்வந்தரானார்;

தொடர்ந்து பினாங்கில் நிபோங் திபால், கிரியான், ஜாவி, ஜூரு, கெடாவில் பாடாங் சிராய் சுங்கை பத்து, சுங்கை தாவார், ஜித்ரா, அலோர் பொங்சு, புக்கிட் ஜூனுன், புக்கிட் தம்புன் போன்ற பல இடங்களில் தோட்டங்களை வாங்கி தோட்ட முதலாளியாகவும் உயர்ந்தார்.
தான் வாங்கிய தோட்டங்களில் இருந்த தமிழ்ப் பள்ளிகள், ஆலயங்களையும் இவர் பராமரித்தார்;
மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியை, மலேசியத் தமிழ்ச் சமூகத்திற்கு நெருக்கப்படுத்திய துன் வீ.திருஞான சம்பந்தன், தமிழ் நாட்டில் உயர்க்கல்வி பெற்ற சமயத்தில் இந்தியாவின் காங்கிரஸ் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டவர்.
அவர், தாயகம் திரும்பி, சுங்கை சுப்புட் நகரில் இயங்கிவந்த மகாத்மா காந்தி தமிழ்ப்பள்ளியை, ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜயலெட்சுமி பண்டிட் தலைமையில் 1954 ஆகஸ்ட் திங்களில் தொடக்கி வைத்தார்; அதற்குமுன், அப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட விரிவாக்கப்பணியில், என்.டி.எஸ். ஆறுமுகம் பிள்ளை தன்னையும் இணைத்துக் கொண்டார்.

1966இல், என்.டி.எஸ் ஆறுமுகம் பிள்ளை, பினாங்கு நிபோங் தெபாலில் இருந்த தனக்கு சொந்தமான ட்ரான்ஸ் கிரியான் தோட்டத்தின் 15 ஏக்கர் நிலத்தை தென்னிந்திய தொழிலாளர் நிதியத்திற்கு கொடையாக வழங்கினார். அங்கு முதியோர் இல்லம் செயல்பட்டுவந்த நிலையில், அந்த நிதியம் 1996-ம் ஆண்டில் அரசுடமையானது. அந்த நிலத்தில் அரசு அமைத்த தொழில் நுட்ப பயிற்சி மையத்திற்கு ஆறுமுகம் பிள்ளையின் (Institute Latihan Perindustrian Arumugam Pillai) பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டில் தனது சொந்த ஊரான திருப்பத்தூரில் இவர் ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரியை (Arumugam Pillai Seethai Ammal College) 1965-இல் நிறுவினார். இந்தக் கல்லூரி இப்போது அழகப்பா பல்கலைக்கழகத்துடன் இணைந்து இயங்குகின்றது.
கல்வி-சமூகப் பணியுடன், சமயப் பணியையும் இவர் மேற்-கொண்டார். குறிப்பாக, பினாங்கில் தண்ணீர் மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயம் இவரின் உதவியால் விரிவாக்கம் செய்யப் பட்டது.
அச்சகத் தொழிலிலும் ஈடுபட்ட என்.டி.எஸ் ஆறுமுகம் பிள்ளை, 1968-ல் தமிழ் மலர் நாளிதழை பினாங்கில் தொடங்கி, பின்னர் கோலாலம்பூருக்கு மாற்றினார். கவிஞர் கண்ணதாசன்பால் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்த இவரில் வீட்டில்தான் கண்ணதாசன் மலேசியாவிற்கு வந்த நேரத்தில் தங்கினார்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு தமிழ் நாட்டிற்குத் திரும்பி, 1989 ஏப்ரல் திங்களில் இயற்கை எய்திய இவரின் பெயர், மெர்தாஜாம் பட்டணத்தில் ஒரு சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.
மலேசியத் தமிழ்ச் சமூக வரலாற்றில் ‘அருள்மாமணி’யின் பெயர் என்றும் நிலைத்திருக்கும்.


