
அன்வார் இப்ராகிம் வகிக்கின்ற பிரதமர் பதவி சட்டத்திற்கு முரணானது என்று பொன். வேதமூர்த்தி தொடுத்த வழக்கில் இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் அவரே முன்னிலையாகி வழக்காடினார்.
அரசியல் சாசனத்தின்படி அன்வார் இப்ராகிம், பிரதமர் பதவி ஏற்றதும் பிரதமர் பதவியில் தொடர்வதும் சட்டத்திற்கு முரணானது- விரோதமானது என்று பொன் வேதமூர்த்தி நீதிமன்றத்தில் வாதத்தை முன் வைத்தபோது, அதை மறுக்க இயலாத அன்வாரின் வழக்கறிஞர்கள், இந்த வழக்கை தேர்தல் சட்டத்தின் படிதான் தொடர்ந்திருக்க வேண்டும் என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நீதிபதி எலைஸ் லோக் முன் கோரிக்கை வைத்தனர்.
அரசியல் சட்ட விதி 118இன்படி, தேர்தல் வழக்காக(Election Petition) தொடர்ந்து இருக்க வேண்டும்; அவ்வாறு செய்யாத பட்சத்தில் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் வாதித்தனர்.

இந்தவேளையில், நீதிபதி, ‘சிறையிலிருந்த அன்வார், பொது மன்னிப்பு பெற்று விடுதலையான நேரத்தில், அரசியல் சாசன விதி 48 துணைவிதி மூன்றின்படி தேர்தலில் போட்டியிடுவதற்கான தடை நீக்கத்தை மாமன்னரிடமிருந்து அன்வார் பெறவில்லைதானே என்று எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களிடம் வினவியபோது, “ஆமாம்; தடை நீக்கத்தை ப் பெறவில்லை” என்பதை நீதிபதியிடம் ஒப்புக்கொண்டனர்.
இதற்கிடையில், “அரசியல் சாசன நுட்பங்களும் நாட்டின் தலைமை நிர்வாகி பிரதமர் பதவி குறித்து ஐயப்பாடு எழுந்துள்ளதாலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கூடாது” என்றும் எதிர்த் தரப்பினரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்” என்றும் பொன் வேதமூர்த்தி தரப்பில் வாதாடிய கார்த்திகேயன் சண்முகம் குறிப்பிட்டார்.

தொடர்ந்து தன் வாதத்தை முன்வைத்த பொன் வேதமூர்த்தி, அரசியல் சாசன விதி, குடிமக்கள் அனைவருக்கும் பொதுவானது- சமமானது; அதன் அடிப்படையில், தேர்தலில் போட்டியிடுவதற்கான தடை நீக்கத்தை மாமன்னரிடமிருந்து பெறாத அன்வார், பிரதமராக பதவி ஏற்றதும் தற்போது பிரதமராக தொடர்வதும் சட்ட விரோதமானது; தேச மாண்பிற்குரிய அரசியல் சாசனத்திற்கும் முரணானது வேண்டும் என்பதை நீதிபதியிடம் வலியுறுத்தினார்.

இந்த வழக்கில் வழக்கறிஞர்கள் கார்த்திகேசன் சண்முகம், ரஃபிக் ரஷிட், ஏ.ஆர். தமயந்தி என நான்கு வழக்கறிஞர்கள் பொன் வேதமூர்த்தி தரப்பில் முன்னிலை ஆகினர்.
எதிர்த் தரப்பில் ரஞ்சித் சிங், டேனியல், நிக்கோலஸ் யாப் ஆகியோர் வாதாடினர்.


