
-நக்கீரன்
கோலாலம்பூர், ஜன.12:
“உயர்ந்த உள்ளம்; தாழ்ந்த சிந்தனை” என்று தமிழக ஆண்டவர் கலைஞர் மு.கருணாநிதி ஒருமுறை சொன்னார்; பட்டிமன்ற பேச்சாளரும் நளின சொற்பெருக்காற்றுநருமான பாரதி பாஸ்கரை எண்ணிடும்பொழுது அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.
காணொளிக் காட்சிகளின்வழி, அவரின் பட்டிமன்ற பேச்சைக் கேட்பதில் பெருவிறுப்பு கொண்டிருந்த நான், அண்மையில், அண்மையில் என்றுகூட சொல்லமுடியாது; சற்று முன்மையில் அவர் வெளிப்படுத்திய வலச்சாரி கருத்தைத் தொடர்ந்து, அவரின் பேச்சைக் கேட்பதைத் தவிர்த்து வந்தேன்.
இருந்தபோதிலும், சென்னைப் புத்தக கண்காட்சி நிகழ்ச்சியில் பேசுகிறாரே என்ற ஆர்வத்தில், அதுவும் 2025-இல் தமிழ் நாட்டில் நடைபெறும் முதல் புத்தகத் திருவிழாவில் ஊரையாற்றுகிறாரே என்ற எதிர்பார்ப்பில், பழைய ஆதங்கத்தைப் புறந்தள்ளிவிட்டு கேட்க முனைந்தேன்.
மிகவும் அற்புதமான, உள்ளங்கவரும் உரை; வாசிப்பை மறந்து, கையடக்க வண்ணத் திரைவழியான காணொளிக் காட்சியில் மூழ்கிவிட்ட இன்றைய தமிழ்ச் சமூகத்தை மென்மையாக சாடுகிறார்.
‘புத்தகம் என்ற புதையல்’ என்னும் தலைப்பில் பாரதி பாஸ்கர் சலிப்புதட்டாமல் பேசியது, ஒரு மணி 20 நிமிடங்கள் 19 நொடிகளுக்கான காணொளிக் காட்சியாக வானவீதியில் உலா வருகிறது.
தங்கப் புதையல் உள்ளிட்ட உண்மையான புதையல்களைப் பற்றி யெல்லாம் பேசிய பாரதி, சுஜாதாவின் ‘தலைகீழ் ராணி’ என்ற தலைப்பிலான சிறுகதைப் பற்றியும் பேசியிருக்கிறார். அதுவும் ஒரு புதையலைப் பற்றிய கதை; கேட்போரின் சிந்தனையைக் கவரும் வண்ணம் அமைந்துள்ள உரை அது!
மனிதர்களுக்கு மண்ணுக்கடியில் இருந்து கிடைக்கும் புதையலைவிட, மண் மேல் உலவும் இலக்கியப் பெட்டகங்களில் இருந்தும் புதையல் கிடைக்கலாம்;
இலக்கியவாணர்களின் சிந்தனை மலராக வெளிப்பட்டிருக்கும் ஒரு சிறுகதையின் கதைக்கரு, அல்லது ஒரு கவிதை, அல்லது ஒரு வாக்கியம், அல்லது ஒரு கவிதை வரி, அல்லது ஒரு சொல்கூட, ஒருவரின் சிந்தையைக் கிளறி, அவரின் வாழ்க்கையைக்கூட மாற்றலாம்; அதனால், நல்ல நூல்களும் இலக்கியப் படைப்புகளும்கூட புதையல்தான் என்று அற்புதமாக பேசியிருக்கும் பாரதி பாஸ்கரின் கருத்து, சிந்தையை அள்ளக்கூடியதுதான்.
ஈரோட்டு தமிழன்பனின் கவிதை, திருவள்ளுவர் யாத்த ‘குணம் நாடி’ என்று தொடங்கும் 504-ஆவது குறள், ‘ஊழையும் உப்பக்கம் காண்பர்’ என்று தொடங்கும் 620-ஆவது குறட்பா, நெல்லை வண்ணதாசனின் ‘அந்தப் பூ’ எனத் தொடங்கும் கவிதை, கண்ணதாசனின் திரைப்பாடல், மாகவி பாரதியின் படைப்பு, கம்பன் வரிகள், உள்ளிட்ட இலக்கிய வெளிப்பாட்டை யெல்லாம் மேற்கோள்காட்டி இளநகைமாறா முகத்துடன் பேசியிருக்கிறார் பாரதி.
‘ஊழையும் உப்பக்கம் காண்பர்’ எனத் தொடங்கும் குறள் இடம்பெற்றுள்ள 59-ஆவது அதிகாரம் ஆள்வினையுடைமையைப் பற்றியதுதான்; ஆனால், பாரதி பாஸ்கர் இதை மறைத்து, திருவள்ளுவர் விதி என்பதை ஏற்றுக் கொண்டவர் என்பதாக அடித்துப் பேசி இருக்கிறார். இந்த இடத்திலேயே அவரின் சமயச் சாயல், மெல்லத் தெரிகிறது.
தொடர்ந்து, சூடாமணி எழுதிய சிறுகதையைப் பற்றி உணர்ச்சிப் பெருக்குடனும் நளின நயத்துடனும் பேசினார். இரு சகோதரர்களை மையமிட்ட கதை அது, வாழ்க்கையில் உயர்ந்துவிட்ட அண்ணன், தம்பியை இளப்பமாக எண்ணி-நடத்தி வாழ்கிறான். இந்த இருவருக்கும் வாழ்க்கப்பட்ட இரு பெணகளும் இந்த முறுகல்நிலைக்கு உரமாக விளங்குகின்றனர்.
ஒரு நெருக்கடியான கட்டத்தில் தம்பியிடம் சரணடைகிறான், அண்ணன். சகோதர பாசம் வென்றுவிட்ட நிலையில் கதை முடிகிறது. உருக்கமான கதைதான். சூடாமணியின் இன்னொரு கதை குறித்தும் பேசிய பாரதி, அதுவும் சகோதர பாசத்தை மையம் கொண்டது என்று விளக்கமளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், படிக்கின்றபொழுது ஒரு சிலருக்கு தூக்கம் வரலாம்; இது இயல்பானதுதான். தொடர்ந்து முயன்று படிக்கும் வேளையில், எங்காவது ஓரிடத்தில் சொல்லப்பட்டக் கருத்து, ஒருவரின் மனதைத் தட்டி எழுப்பும்; அப்பொழுது தூக்கமெல்லாம் பறந்துவிடும். அதற்குப்பின், அந்த நூலை படித்து முடிக்கும்வரை கீழேவைக்க மனம் வராது;
அத்தகைய நூலை இயற்றிய எழுத்தாளர் எந்த சாதியைச் சேர்ந்தவராக இருப்பார்; எப்படிப்பட்ட எழுத்தாளர் இவர்? என்றெல்லாம் வியப்பு மேலிடும் என்று பாரதி பேசினார். ஓர் எழுத்தாளர், எந்தச் சாதியைச் சேர்ந்தவராக இருப்பார் என்று ஒரு வாசகர் எண்ணிப் பார்ப்பார் என்று பாரதி பாஸ்கர் சொன்ன அந்த 56 நிமிடம் 02-ஆவது வினாடியில் சட்டென அக்காணொளியை நிறுத்திய நான், சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு மிச்சத்தையும் கேட்டுத் தொலைத்தேன்; பார்த்துச் சளித்தேன்.
ஆனாலும், அதன்பிறகு எந்தக் கருத்தும் மனதில் ஒட்டவில்லை; நிலைக்கவில்லை.
ஓர் இலக்கியவாணரின் படைப்பு எத்துணைச் சிறப்புடையதாக இருந்தாலும் அவர் எந்தச் சாதியைச் சேர்ந்தவராக இருப்பார் என்று எந்த வாசகராவது எண்ணிப் பார்ப்பாரா?
இப்படிப்பட்ட கீழான எண்ணத்தை அவர், அதுவும் ஒரு புத்தகத் திருவிழா தொடர்பான நிகழ்ச்சியில் எந்த உறுத்தலுமின்றி பேசியிருக்கிறார் என்றால், அவரின் ஆழமனதில் பதிந்துள்ள மிகக்கீழான சிந்தனை இது.
எழுத்தாளர் என்னும் இலக்கியப் படைப்பாளி, ஓர் இனத்தின், ஒரு மொழியினரின் இலக்கிய அடையாளமாகத்தான் இருப்பாரேயொழிய, அவருக்கு சாதிச்சாயம் பூச எத்தணிக்கும் பேச்சாளி பாரதி பாஸ்கரின் உள்ளம் பள்ளத்தில் கிடக்கிறது.
இது மிகவும் அருவறுப்பானது; கீழானது. பாரதி பாஸ்கர் தன்னை மாற்றிக் கொண்டு, பள்ளத்தில் கிடக்கும் தன் உள்ளத்தை மேட்டிற்கு உயர்த்த வேண்டும்.


