
மத்திய கிழக்கில் சிக்கியுள்ள மலேசியர்களை பாதுகாப்புடன் மீட்க வெளிவிவகார அமைச்சகம் தீர்க்கமான நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என மக்கள் முற்போக்கு கட்சியின் (பிபிபி) தேசிய இளைஞர் தலைவர் சத்தியா சுதாகரன் வலியுறுத்தியுள்ளார்.
போர் நிகழும் பகுதியில் தங்கியுள்ள மலேசிய மாணவர்கள், தொழிலாளர்கள், யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோரின் பாதுகாப்பு, நலன் மற்றும் வாழ்வாதாரத்தைப் பற்றி கவலை எழுந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
போர் முனையாக மாறியுள்ள ஈரான் மற்றும் அண்டை நாடுகளில் உள்ள தனது குடி-மக்களை பாதுகாப்பது அரசின் முதன்மை பொறுப்பாக இருக்க வேண்டும்,” என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை-யில் கூறினார்.
சர்வதேச அமைப்புகள் மற்றும் அண்டை நாடுகளுடன் ஒருங்கிணைந்து அவசர வெளியேற்ற மற்றும் மீட்கும் நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்காக தனிப்பட்ட நெருக்கடி செயற்பாட்டு குழுவையும், 24 மணி நேர உதவி அழைப்புக்கான ஹாட்லைனையும் அமைக்க வேண்டும் என்றும், அப்பகுதியில் உள்ள மலேசிய தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்கள் வழியாக தொடர்ச்சியான மற்றும் தெளிவான தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
“இந்த நேரத்தில் வெளிப்படைத்தன்மை, அவசரத்தன்மை மற்றும் ஒருங்கிணைந்த தூதரக முயற்சிகள் மிக அவசியம்.
போர் மண்டலத்தில் சிக்கித் தவிக்கும் பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் மிகவும் கவலையுடனும் உள்ளனர்.
அரசின் தெளிவான தகவல் மற்றும் அவசர நடவடிக்கை, அவர்களுக்கு நம்பிக்கையும் உறுதியும் அளிக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.
மலேசியர்களின் பாதுகாப்பும் நலனும் அரசியல் எல்லைகளை கடந்த ஒன்றாக இருக்க வேண்டும் என்றும், மனிதாபிமான ஒருங்கிணைப்பு முயற்சிகளில் பிபிபி இளைஞர் பிரிவு முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் சத்தியா சுதாகரன் தெரிவித்தார்.
மலேசியர்களை பாதுகாப்பாக தாயகத்திற்கு மீட்டு வர அரசு விரைவாகவும் தீர்க்கமாக செயல்பட வேண்டும் என சுதாகரன் வெளியிட்டு அறிக்கையில் மீண்டும் வலியுறுத்தினார்.


