
மலேசியா, இப்பொழுதெல்லாம் அரசியல் நகர்வுகளுக்கு பெயர்பெற்ற நாடாக உருமாற்றம் கண்டு வருகிறது. இப்பொழுது தேசிய அரசியலை உலுக்கிவரும் புதிய நகர்வு ‘பேங்காக் நகர்வு’.
அண்மைக்கால அரசியலில், 2014-இல் இடம்பெற்ற காஜாங் நகர்வு குறிப்பிடத்தக்க அளவில் பேசப்பட்டது; மலேசிய அரசியல் வரலாற்றில், அது நீங்கா இடத்தையும் பெற்றுவிட்டது.
இன்றைய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மேற்கொண்ட அந்த காஜாங் நகர்வை, அன்றைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப், வெகுலாவகமாகக் கையாண்டு வெற்றியும் பெற்றார். வெளியில் இருந்த அன்வாரை, சிறைக்கு அனுப்பியதன் மூலம், காஜாங் நகர்விற்கு முடிவுரை எழுதினார் நஜீப்.
கால மகள் ஏற்படுத்திய கோலத்தைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது; அத்தகைய நஜீப் இன்று சிறையிலும் சிறைக்குச் சென்ற அன்வார் இன்று நஜீப் வகித்த பொறுப்பிலும் இருக்கின்றனர்.

சிலாங்கூர் மாநிலத்தின் 14-ஆவது முதலமைச்சராக(மந்திரி பெசார்) இருந்த டான்ஸ்ரீ காலிட் இப்ராகிமை அகற்றிவிட்டு, தான் அந்தப் பொறுப்பை ஏற்பதுடன் தேசிய அளவில் எதிர்க்கட்சித் தலைவராக உருமாறுவதையும் இலக்காகக் கொண்டு அன்வார் முன்னெடுத்த அந்த காஜாங் நகர்வு, கடைசியில் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியை அந்தப் பொறுப்பில் அமர்த்தியது.
காஜாங் நகர்வு தோல்வியினால் மனம் உடைந்தது, அன்வாரைவிட அப்போது மக்கள் நீதிக் கட்சியின் உதவித் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் விளங்கிய ரஃபிஸி ரம்லிதான்; அவர்தான் காஜாங் நகர்வின் சூத்ரதாரி; ரம்லியும் அன்வாரும் ஒருவருக்கொருவர் ஏந்தியிருந்த மலர்க்கொத்தை கீழேப் போட்டுவிட்டு, இப்போது வாளுடன் எதிர்த்து நிற்கின்றனர்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற ‘ஷெரட்டன் நகர்வு’ இன்னும் பிரபலமானது; 2018 மே 10-இல் துன் மகாதீர் இரண்டாவது முறை பிரதமர் ஆனபோது, மக்களும் தலைவர்களும் ஏதேதோ நினைத்தனர்.
ஆனால், அன்வார் பிரதமர் ஆகிவிடக் கூடாதென்பதற்காகவே அரசியலையும் ஆட்சியையும் நடத்திய மகாதீரின் லட்சணத்தைக் கண்டு, தேசிய அரசியல் பயணம் வேறு பக்கம் சென்றது; இதனால், மஇகா தேசியத் தலைவர் பதவியை அவசரப்பட்டு விட்டுவிட்டோமே என்று டான்ஸ்ரீ ச.சப்பிரமணியன் உள்ளுக்குள் வருந்தினார்; அவரைப் போல டத்தோ அ.கோகிலனும், கெராக்கான் கட்சியில் இருந்து விலகிய முடிவு அவசர முடிவோவென்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டார்.
கடைசியில், துன் மகாதீர் வழிநடத்திய பெர்சத்துக் கட்சியைச் சேர்ந்த டான்ஸ்ரீ முகைதீன் யாசின், அஸ்மின் அலி இருவருமே மறைமுக காய் நகர்த்தி, இன்னொரு முன்னெடுப்பை மேற்கொண்டதால், மகாதீர் பதவி துறக்க நேர்ந்தது; 14-ஆவது நாடாளுமன்றம் மேலும் இரு பிரதமர்களைக் கண்டதெல்லாம் ஊரும் உலகும் அறிந்தது.

தொடர்ந்து, பேராக் மந்திரி பெசாராக இருந்த அசுமுவைக் கவிழ்க்கவும் முகைதீனை பிரதமர் பதவியில் இருந்து அகற்றவும் அம்னோ(UMNO)கட்சி தனியாக மேற்கொண்ட இரு அரசியல் நகர்வுகள், வரலாற்றில் இடம்பெறும் தகுதியைப் பெறவில்லை.
இந்த நிலையில்தான், தேசிய அரசியல் தொடர்பான ‘பேங்காக் நகர்வு’ இப்பொழுது பரபரப்பாகப் பேசப்படுகிறது. எல்லா நகர்விலும் ஏதோவொரு வகையில் அம்னோ சம்பந்தப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.
உலகில் அமைதியான நாடாகவும் பொருளாதார எல்லையில் வளர்ந்துவரும் நாடாகவும் அடையாளம் காணப்படும் மலேசியத் திருநாட்டின் எதிர்கால அரசியல், மலாய் முஸ்லிம் கூட்டணியை நோக்கி பயணிப்பதாக அரசியல் அவதானியர் கருதுகின்றனர்.
இதற்கு அச்சாரமாகத்தான் கடந்த 2025 பிற்பகுதியில் பேங்காக் நகரில் முக்கிய அரசியல் சந்திப்பு(‘பேங்காக் நகர்வு) இடம்பெற்றதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
மலாய்-முஸ்லிம் கட்சிகளுக்கு இடையே சாத்தியமான அரசியல் ஒத்துழைப்பு; மலாய் வாக்காளர்களை மட்டும் நம்பி, பெரும்பான்மையுடன் வென்று புத்ராஜெயாவை கைப்பற்றுவது; ‘பூனைக்கும் தோழன்; பாலுக்கும் காவலன்’ என்பதைப் போல செயல்படும் அன்வாரை பிரதமர் பதவியில் இருந்து அகற்றுவது அல்லது அடுத்த 16-ஆவது பொதுத் தேர்தலில் அவரைத் தோற்கடிப்பது உள்ளிட்ட அம்சங்களை இலக்காகக் கொண்டு மூன்று கட்சிகளைச் சேர்ந்த நான்கு தலைவர்கள் கலந்துகொண்ட ஒரு கமுக்க ஆலோசனைக் கூட்டம் பாங்காக்கில் நடந்ததாகக் கூறப்படும் நிலையில், சம்சூரி மொக்தாரின் மறுப்பு இப்போது வெளிவந்துள்ளது.
மடாணி முழக்கத்துடன் தற்போதைய ஒற்றுமை அரசை வழிநடத்தும் பிரதமர் அன்வாரின் தலைமையிலான அரசாங்கத்தில் துணைப் பிரதமர் பொறுப்பு வகிப்பவரும் அம்னோ(UMNO) கட்சி, அது வழிநடத்தும் தேசிய முன்னணி ஆகியவற்றின் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமக் ஜாஹிட் ஹமிடி, இந்நாள் நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவரும் உள்துறை முன்னாள் அமைச்சரும் பெர்சத்து கட்சியின் மேநாள் துணைத் தலைவருமான ஹம்சா ஜைனுடின், பாஸ் துணைத் தலைவரும் பாஸ்-பெர்சத்துக் கட்சிகளின் கூட்டணியான பெரிக்காத்தான் தலைவருமான அகமட் சம்சூரி, பாஸ் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் ஆகிய நால்வரும் சந்தித்து மலாய் முஸ்லிம் கூட்டணியை முன்னெடுப்பது தொடர்பாக ஆலோசித்த இந்த அரசியல் நகர்வு, நாட்டின் நிருவாக நகரான புத்ராஜெயாவில் இப்பொழுது பேசுபொருளாகி உள்ளது.
ஆனாலும், இந்த சந்திப்பை அகமட் சம்சூரி மொக்தார் அடியோடு மறுத்துள்ளார்; “பேங்காங் நகர்வு தொடர்பான எந்தக் கூட்டம் அல்லது விவாதத்திற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று பின்னங்கால் பிடறியில் படும்படி தெறித்து ஓடுகிறார் சம்சூரி மொக்தார்.

காரணம், பேங்காங் நகர்வு குறித்து தற்பொழுது அனைத்து மட்டத்திலும் பரவலாக பேசப்படுவதுதான். பெரிக்காத்தான் கூட்டணித் தலைவர் பொறுப்பில் இருந்து டான்ஸ்ரீ முகைதீன் யாசின் விலகியபின் அந்தப் பொறுப்பை புதிதாக ஏற்றவருமான சம்சூரி மொக்தார், ஒன்றுமே அறியாதவரைப் போல படபடக்கிறார்.
கடந்த ஆண்டில் பாங்காக்கில் எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீனை சந்தித்ததாக, அகமட் ஜாஹிட் ஹமிடி ஒப்புக் கொண்டிருக்கும் பேங்காக் நகர்வில் சம்சூரி மொக்தாரரும் இடம்பெற்றிருக்கிறார்.
தாய்லாந்திற்கு அலுவல் பயணம் மேற்கொண்டபோது இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகவும் தனிப்பட்ட முறையில் ஹம்சாவுடன் அண்மைக் காலத்தில் எந்த சந்திப்பும் இல்லை என்றும் ஜாஹிட் ஹமிடி சமாளித்தும் இருக்கிறார். குறிப்பாக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கும் இது தெரியும் என்று ஜாஹிட் அமிடி தெரிவித்துள்ளார்.
மலாய் முஸ்லிம் ஒற்றுமை; மலாய் அரசியல் ஒருங்கிணைப்பு; மலாய் முஸ்லிம் நலத்திற்கு முன்னுரிமை; அரசாங்கத்தை மறுசீரமைத்தல் ஆகிய குறிக்கோளின் அடிப்படையில் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவதன் தொடர்பில் ஜாஹிட்டுடன் ஹம்சா கமுக்க ஆலோசனையில் ஈடுபட்டார் என பெர்சத்து தலைவர் முகைதீன் யாசின் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து பெர்சத்து கட்சிக்குள் சர்ச்சையும் வெடித்தது; பேங்காங் நகர்வு குறித்த தகவலும் அம்பலத்திற்கு வந்தது.
முகைதீனின் குற்றச்சாட்டை உடனே மறுத்த ஹம்சா, எதிர்க்கட்சித் தலைவர் என்னும் முறையில் தான் எவரையும் சந்திக்கும் சுதந்திரம் இருப்பதாகவும் இதில் துரோகம் எங்கே இருக்கிறது என்று கேட்டதுடன், “இது பச்சைக் குழந்தைத்தனம்” என்று தன் முன்னாள் சகாவும் தலைவருமான முகைதீனுக்கு எதிராக சாட்டையை சொடுக்கி உள்ளார் ஹம்சா.
எல்லாம் சரி; ‘பாஸ்-அம்னோ-பெர்சத்து’ கட்சிகள் இணைந்து முன்னெடுக்கும் மலாய் முஸ்லிம் நல அரசியல் கூட்டணி தொடர்ந்து நகராமல் நிலைகுத்தி நிற்பதேன்?
உள்நாட்டில் சந்தித்தால் ஊடக வெளிச்சம் தொற்றிக் கொள்ளும் என்ற விழிப்புணர்வுடன் பக்கத்து நாட்டில் சந்தித்து ஆலோசித்தாலும் அடுத்தக் கட்டத்தை இக்கூட்டணி ஏன் எட்டவில்லை இன்னும்?
இந்தக் கூட்டணி, அடிப்படையில் அன்வாருக்கு எதிரானது; அவரின் தலைமையிலான அரசில் இடம்பெற்றுக் கொண்டே, வெளிப்படையாக இன்னோர் அரசியல் அணியில் அம்னோ’வால் இயங்க முடியவில்லை; ஒரே நேரத்தில் இரு வண்டியில் எப்படி பயணிப்பது என்னும் சங்கடத்தில் அம்னோ நெளிகிறது.
இதனால், பெர்சத்துக் கட்சியும் ஐயப் பார்வையுடன் விலகி நிற்கிறது; இதே சங்கடம்தான் பாஸ் கட்சிக்கும்.
அம்னோவிற்கு துணிவும் இல்லை; தெம்பும் இல்லை; பதவியில் ஒட்டிக் கொள்ளவும் ஆசை; தற்பொழுது தலைமை வகிக்கும் தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளான மசீச, மஇகா உள்ளிட்ட கட்சிகளை எப்படி விலக்குவது என்பதும் புரியவில்லை; மலாய் முஸ்லிம் கூட்டணிவழி எதிர்காலத்தில் அதிகாரக் கட்டிலில் தொடர்ந்து ஒட்டிக் கொள்ளவும் ஆசை;
இத்தகைய நெருக்கடியால், எதை விடுவது, எதைத் தொடுவது-தொடர்வது என்று தெரியாமல் தடுமாறி நிற்கும் அம்னோ-வுடன் எப்படி வெளிப்படையாக அரசியல் நடத்துவது என்று பாஸ் கட்சியின் தயக்கமும் நீடிக்கிறது.
மலாய் முஸ்லிம் ஒற்றுமை முழக்கம், ‘நல்ல தொடக்கம்’ என்று சமூகவெளியில் ஆதரவுக் கட்டத்தை எட்டினாலும் கூட்டணி உறுதியாகாததற்கு, இதுதான்(அம்னோவின் நிலைப்பாடு) காரணம்.
எது எவ்வாறாக இருந்தாலும், அடுத்தப் பொதுத் தேர்தலில் மலாய் வாக்குகளை ஒருங்கிணைக்க இந்தக் கூட்டணி மிகப் பொருத்தம் என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
அவதானிப்போம்; அடுத்தடுத்து என்னென்ன நடைபெறுகிறதென்று..!


